டாக்டர்.கேட்டிஸ் ஹட்சன்
நீர் பரலோகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறீரா?
நிச்சயமாக அறிந்து கொள்வதற்கு
இப் புத்தகத்தை வாசிக்கவும்!
இரட்சிப்பு தெளிவானதும்
சாதாரணமானதும் ஆகும்
“கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்” - 2 தீமோத்தேயு 3:15.
இப்போதும் இதற்குப் பிறகும், இரட்சிப்புத்தான் இவ்வுலகில் மிகவும் முக்கியமான காரியமாகும். நீர் இரட்சிக்கப்படவில்லையானால், வேறெதுவும் முக்கியமான காரியமல்ல.
ஒரு வயதான மனிதனும் ஒரு சிறிய பையனும் வெளியிலே படகு ஓட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஏரியிலே ஓடுகையி்ல், ஒரு அழகான இலை படகினருகில் மிதந்து வந்தது. தனது கரத்தினில் அந்த இலையை எடுத்துக் கொண்டு, வயதானவர்: “மகனே, உனக்குத் தாவரவியல் குறித்து ஏதாவது தெரியுமா?” என்றார். “இல்லை” என சிறுவன் பதிலளித்தான்.
“ஏன்”, “நீ உனது வாழ்க்கையில் இருபத்தைந்து வீதத்தை இழந்துவிட்டாய்” என்றார் அந்த முதியவர். கொஞ்ச நேரத்தின் பின்னர் கரையில் இருந்த அழகான பாறைகளைக் கடந்து படகு சென்றது. “அந்த அழகான கற்களைப் பார்,” எனக் கூறிய முதியவர்: “உனக்கு பாறைகள், மண் போன்றவற்றின் ஆராய்ச்சிக் கலை குறித்து ஏதாவது தெரியுமா மகனே?” எனக் கேட்டார்.
“இல்லை, அச்சப்படாமல் இல்லை” என்றான் சிறுவன்.
“அப்படியானால் நீ உனது வாழ்க்கையில் இருபத்தைந்து வீதத்தை இழந்து விட்டாய்” என்றார்.
மாலை அண்மிக்கையில் வானத்திலே நட்சத்திரங்கள் தோன்றின. அவைகளைப் பார் எனக் கூறிய முதியவர், “மகனே, உனக்கு வான சாஸ்திரம் குறித்து ஏதாவது தெரியுமா?” எனக் கேட்டார்.
“இல்லை ஐயா” எனப் பதிலளித்த சிறுவன் “எனக்கு வான சாஸ்திரம் குறித்து எதுவுமே தெரியாது” என்றான்.
“நல்லது”, எனக் கூறிய முதியவர்: “ நீ உனது வாழ்க்கையில் இருபத்தைந்து வீதத்தை இழந்து விட்டாய்” என்றார்.
இப்போது வீடு திரும்பும் நேரமாகிவிட்டது; அவர்கள் கரைக்குச் செல்வதற்காகப் படகைத் திருப்பியபோது, திடீரெனக் குலுக்கி மூழ்கியது. அந்த சிறுவன் கரையை நோக்கி நீந்த ஆரம்பித்தான். அவன் திரும்பிப் பார்க்கையில் முதியவர் தண்ணீரை அடித்துக்கொண்டு மாத்திரம் இருப்பதை அவதானித்தான். அவன் சத்தமாக: “திருவாளரே, எப்படி நீந்துவது என உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டான்.
“இல்லை!” என முதியவர் கத்தினார்.
“அப்படியானால் நீங்கள் உங்கள் வாழ்க்கையையே இழந்து விட்டீர்கள்” எனப் பதிலளித்தான் அந்த சிறுவன்.
நீர் எல்லாவற்றையும் அறிந்திருந்தும், கிறிஸ்துவை உமது தனிப்பட்ட இரட்சகராக அறிந்திராவிட்டால், உமது வாழ்க்கையை இழந்து விட்டுள்ளீர். வேதாகமம் யோவான் 3:36 இல் “குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்” எனக் கூறுகிறது.
எப்படி இரட்சிக்கப்படுவது எனத் தெரியாததனால் தான் அநேகமான மக்கள் நரகத்திலே இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அநேகமாக அவர்கள் இரட்சிக்கப்பட விரும்பினார்கள் என நான் நினைக்கிறேன். வேதாகமம் இதனை மத்தேயு 7:22,23 இல் வெளிப்படுத்துவதாகக் காணப்படுகிறது. “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”
இந்த வசனங்களை விளங்கிக் கொள்வேனாக இருந்தால், இந்த மக்கள் பரலோகத்திற்குப் போக வேண்டுமென்றும் பரலோகத்தை உரித்தாக்கிக் கொள்வதற்கு தங்கள் நற்கருமங்களை தேவனுக்குக் காணிக்கையாக்கவும் விரும்பினார்கள். ஆனால் இயேசுவைப் பொறுத்தவரையில் இவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள். “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்” என்று அவர் கூறினார்.
மத்தேயு 25ல் உள்ள பத்துக் கன்னிகைகளின் உவமையில், அந்தப் பத்துப்பேரும் தாங்கள் மணவாளனைச் சந்திக்க ஆயத்தமாக இருப்பதாக நினைத்தார்கள், அத்துடன் அவரைச் சந்திக்கவும் சென்றார்கள். ஆனால் மணவாளன் வந்தபோது, ஐந்துபேர் தாங்கள் தயாராக இல்லை என்பதைக் கண்டுகொண்டனர்.
நீர் சாகும்போது பரலோகம் செல்வீர் என்பதை எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் அறிந்து கொண்டு இரட்சிக்கப்படுவது சாத்தியமானது. இரட்சிப்பின் வழி தெளிவாகவும் சாதாரணமானதாகவும் வேதாகமத்தில் உள்ளது.
இரட்சிப்பின் காரியத்தில், முடிவில்லாத பரிசுத்த தேவனுடன்
நாம் தொடர்பு கொள்கிறோம்.
இதனை விளங்கிக் கொள்ளாமல் இரட்சிப்பின் திட்டத்தைப் பாராட்டவோ விளங்கிக் கொள்ளவோ முடியாது. இந்த முடிவற்ற பரிசுத்த தேவன் பாவத்திற்காகச் செலுத்தப்பட வேண்டும் எனக் கூறுகிறார். “அதை நீ புசிக்கும் நாளி்ல் சாகவே சாவாய்” என்று ஆதியாகமம் 2:17ல் ஆதாமுக்கு அவர் கூறினார். “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்” என எசேக்கியேல் 18:4ல் கூறுகிறார். “பாவத்தின் சம்பளம் மரணம்” ரோமர் 6:23. “பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்; பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” என யாக்கோபு 1:15 கூறுகிறது. இந்த முடிவற்ற பரிசுத்தமான தேவன் பாவத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் எனக் கூறுகிறார். அத்துடன் பாவத்திற்காக செலுத்தப்பட வேண்டியது மரணம்.
இந்த மரணமானது துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் அல்லது புற்று நோயால் மரிப்பதைப் பார்க்கிலும் வேறுபட்டது. இது இரண்டாவது மரணம் என வேதாகமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. “அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்” (வெளி 20:14). நான் ஒரு பாவியாகக் கடன்பட்டதைச் செலுத்துவேனாக இருந்தால், நான் கட்டாயம் மரித்து, நரகத்திற்குள்ளே சென்று சதாகாலத்திற்கும் இருக்க வேண்டும். இதுதான் தேவன் எனது பாவங்களுக்காக கேட்கும் விலை. பாவத்தின் சம்பளம் சபையில் சேர்ந்து கொள்வது என வேதாகமம் கூறவில்லை. நான் பட்டணத்தில் உள்ள ஒவ்வொரு சபையிலும் இணைந்து கொள்ளலாம், ஆனால் அது நான் ஒரு பாவியாகக் கடன்பட்டதைச் செலுத்தமாட்டாது. பாவத்தின் சம்பளம் பப்டிஸம் பெறுதல் என வேதாகமம் கூறவில்லை. நதியிலுள்ள ஒவ்வொரு தவளைக் குஞ்சும் எனது சமூக பாதுகாப்பு இலக்கத்தை ஞாபகத்தினால் அறிந்து கொள்ளும் வரையிலும் நான் பப்டிஸம் பெறலாம், ஆனால் அது எனது பாவக்கடனைச் செலுத்தாது. பாவத்தின் சம்பளம் ஒரு புதிய துளிர் விடுவது என வேதாகமம் கூறவில்லை. நான் சீர்திருத்தம் செய்யலாம், ஆனால் அது நான் ஒரு பாவியாகக் கடன்பட்டதைச் செலுத்தாது. பாவத்தின் சம்பளம் நற்கருமங்களை நடப்பித்தல் என வேதாகமம் கூறவில்லை. நான் ஒரு ஆயிரம் மடங்கு கிரியை செய்தாலும் ஒருபோதுமே பரலோகத்தைச் சம்பாதித்துக் கொள்ளமாட்டேன்.
பரலோகத்தின் ஒரு நம்பிக்கையாக எனது கிரியைகளை தேவனுக்குக் கொடுப்பேனாக இருந்தால், கிரியைகளின் பின் உள்ள எண்ணம் அவற்றை பயனற்றதாக மாற்றுகிறது. தேவனால் ஏற்றுக்கொள்ளும் எண்ணம் அன்பு. “எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை” என 1 கொரிந்தியர் 13:3 கூறுகிறது. அன்பின் எண்ணத்தினால் செய்யப்படாத நற்கருமங்களுக்குப் பயன் இல்லை. நான் நரகத்தில் இருந்து விலகி இருப்பதற்குக் கிரியை செய்வேனாக இருந்தால், எனது எண்ணம் நரகத்திற்குப் பயப்படுவதாக இருக்கும், அதனால் கிரியை பயனற்றதாகிறது.
“பாவத்தின் சம்பளம் மரணம்” என வேதாகமம் கூறுகிறது. தேவனிடம் பாவத்திற்காகச் செலுத்துதல் ஒன்றுள்ளது, அந்தச் செலுத்துதல் அக்கினிக் கடலிலே நித்திய மரணமாகும். எனது கடனைச் செலுத்துவதற்காக நான் செய்யக் கூடியது மரித்து, நரகத்திற்குச் சென்று, சதாகாலமும் அங்கே இருப்பது மட்டுமே.
இரண்டாவது:
எல்லா மனிதர்களும் பாவிகள் என
இந்த முடிவற்ற பரிசுத்த தேவன் கூறுகிறார்
“நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்” என வேதாகமம் ஏசாயா 53:6ல் கூறுகிறது. “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியில் இல்லை” என மீண்டும் வேதாகமம் பிரசங்கி 7:20ல் கூறுகிறது. “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” என ரோமர் 3:10 கூறுகிறது. “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமை அற்றவர்களானார்கள்” என ரோமர் 3:23 கூறுகிறது.
“தேவ மகிமையற்றவர்களானார்கள்” என்பது சாதாரணமாக “இலக்கைத் தவறினார்கள்” என்பதாகும். எவ்வளவு தூரத்திற்கு நாம் இலக்கைத் தவறியுள்ளோம் என்பது முக்கியமல்ல, ஆனால் இலக்கைத் தவறியுள்ளோம் என்பது உண்மை. நான் மேற்படிப்புக்குச் சென்றபோது, சித்தியடைவதற்கு எழுபது புள்ளிகள் எடுக்க வேண்டியிருந்தது. உங்கள் சராசரி அதற்குக் குறைவாக இருக்குமானால், அந்த தரத்தை மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். ஒரு மாணவன் அறுபத்தைந்து சராசரி எடுத்தும் இன்னொருவர் முப்பத்தைந்து எடுத்தும் இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இருவருக்கிடையேயும் சராசரியில் முப்பது புள்ளிகள் வித்தியாசம் உண்டு, இருப்பினும் இருவரும் ஒரே மாதிரியான சிக்கலிலே உள்ளனர். அவர்கள் சித்தியடையும் புள்ளிக்குக் கீழேயுள்ளனர்.
தேவன் கீழ் நோக்கி இவ்வுலகைப் பார்க்கையில், “வித்தியாசமே இல்லை” என ரோமர் 3:22ல் கூறுகிறார்.
“கர்த்தாவே, வித்தியாசமே இல்லை, என்று நீர் என்னத்தைக் கருதுகிறீர்? மற்றவர்களிலும் பார்க்க நன்றாக வாழும் சில பெரியாரை எனக்குத் தெரியும்” என நான் கூறுகின்றேன்.
“வித்தியாசமே இல்லை”, என்று தேவன் கூறுகிறார். “எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள்”.
நான் ஒரு இலக்குப் பலகையை சுவரிலே தொங்க வைத்து, அதன் மையத்தில் இருக்கும் இலக்கிற்கு ஒரு அம்பை எடுத்து, தனது திறமையைப் பயன்படுத்தி எய்யும்படி இங்கு இருக்கும் ஒவ்வொருவரிடமும் கூறினேன் என வைத்துக் கொள்ளுங்கள். சிலர் அந்த மையத்தை ஒரு "கால்" அங்குலம் மட்டுமே தவறியுள்ளனர். மற்றவர்கள் ஒரு "அடியால்" தவறியுள்ளனர். இன்னும் சிலர் இலக்குப் பலகையையே தவறினார்கள். ஆயினும் ஒருவருமே மையப் புள்ளிக்கு எய்யவில்லை. எல்லா அம்புகளும் எறியப்பட்டபொழுது, “வித்தியாசமே இல்லை” என நான் கூறுவேன்.
“ஓ”, “வித்தியாசமே இல்லை என நீங்கள் என்னத்தைக் கருதுகிறீர்கள்? நான் ஒரு "கால்" அங்குலத்தால் மட்டுமே மையப்புள்ளியைத் தவறியுள்ளேன்” என யாராவது கூறுவார்.
“வித்தியாசமே இல்லை, ஏனெனில் எல்லாரும் இலக்கைத் தவறினார்கள்” என நான் கூறுவேன். தேவனுடைய பார்வையில் பாவிகளுக்கிடையே வித்தியாசமில்லை. நாம் ஒரே பாவங்களைச் செய்யாதிருக்கக் கூடும், ஆனால் ஒவ்வொருவரும் பாவம் செய்துள்ளோம், எல்லா மனிதர்களும் பாவிகள்.
நாம் எல்லாரும் பாவிகள், எமது பாவங்களுக்குச் செலுத்தப்பட வேண்டும் என தேவன் கூறுகிறார்.
இப்போது மூன்றாவது இடத்தில்:
நாம் ஏற்கனவே ஆக்கினைக்குத் தீர்க்கப்பட்டோம் என
முடிவற்ற பரிசுத்த தேவன் கூறுகிறார்
“அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று” என வேதாகமம் யோவான் 3:18ல் கூறுகிறது. நாம் எல்லாரும் மரித்ததும் ஒரு நியாயத்தீர்ப்புக்குப் போகப் போகிறோம் என சிலரிடம் ஒரு யோசனை உள்ளது. அந்த நியாயத்தீர்ப்பில் எமது கெட்ட கருமங்களுக்கு எதிராக எமது நல்ல கருமங்களை தேவன் நிறுக்கப் போகிறார். கெட்டதிலும் பார்க்க நல்லது நிறை கூடினால், அவர் எம்மை பரலோகத்திற்கு அனுமதிப்பார்; ஆனால் நல்லதிலும் பார்க்க கெட்டது நிறை கூடினால், அவர் எம்மை நரகத்திற்கு தீர்ப்பார் என அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், இந்தப் போதனை வேதாகமத்தில் இல்லை. நாம் ஏற்கனவே ஆக்கினைக்கு உட்பட்டுள்ளோம் என வேதாகமம் போதிக்கின்றது. “விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று” என யோவான் 3:18 கூறுகிறது. ஆக்கினைத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளி என்பவர் கைது செய்யப்பட்டு, சோதிக்கப்பட்டு, குற்றவாளியாகக் கண்டு, தீர்ப்பு அளிக்கப்பட்டவராவார். சிலவேளையில் அவர் மி்ன்சாரக் கதிரையில் மரணிப்பதற்குத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கலாம். அவர் மரணக் கோட்டில் மரண தண்டனைத் திகதிக்காக காத்திருக்கின்றார். அவர் ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
தேவன் கூறியுள்ளதன்படி, நான் ஒரு பாவியாக இருக்கிறேன்; எனது பாவங்களுக்காக ஒன்று செலுத்தப்பட வேண்டியுள்ளது, அந்தக் கொடுப்பனவு மரணமே - அக்கினிக் கடலிலே இரண்டாவது மரணம். இது எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தண்டனைத் தீர்ப்பு அல்ல. நான் இயேசு கிறிஸ்துவை எனது இரட்சகராக விசுவாசிக்காவிட்டால் எனக்கு ஏற்கனவே உட்படுத்தப்பட்டுள்ள ஒரு தீர்ப்பாகும்.
இரட்சிப்புக்காக முற்றிலும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காத நபர் ஏற்கனவே ஆக்கினைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் தீர்ப்பின் கீழாக வாழ்ந்து கொண்டு, தனது இருதயம் அடிப்பதை நிறுத்துவதற்காக மாத்திரம் காத்துக் கொண்டு இருக்கிறார்; இருதயம் நிற்கும் நேரத்தில், ஆவியும் ஆத்துமாவும் சரீரத்தை விட்டு உடனடியாக நரகத்திற்குச் செல்லும். ஒரு பணக்காரனைக் குறித்து லூக்கா 16:22,23ல், “ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்; பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது…..,” என வேதாகமம் கூறுகிறது.
எல்லா மனிதர்களும் பாவிகள், பாவத்திற்காகக் கட்டாயம் செலுத்தப்பட வேண்டும், பாவிகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளனர் என முடிவற்ற பரிசுத்த தேவன் கூறுகிறார்.
இப்போது நான்காவது இடத்தில்:
ஒரு முடிவற்ற பரிசுத்த தேவன்
எவ்வாறு பாவத்தை மன்னிக்க முடியும்?
அதற்கான பதில்: தேவன் பாவத்தை மன்னிப்பவர் அல்ல. பாவத்திற்காக கட்டாயம் செலுத்தப்பட வேண்டும். யாராவது ஒருவர் பாவத்தைச் சுமக்க வேண்டும். “மன்னி” எனும் சொல் உண்மையிலே, “பாரத்தைப் பொறுத்துக் கொள்” எனக் கருதுவதாக எனக்குக் கூறப்பட்டது. நான் ஒருவரிடம் ஒரு ஆயிரம் ரூபாய்களை; கடன்பட்டும் அவர் கடனை மன்னித்தால், அவர் பாரத்தைப் பொறுத்துக் கொண்டார் என்பது கருத்தாகும். அவர் ஆயிரம் ரூபாய்களை; செலுத்தினார்.
ஒரு முடிவற்ற பரிசுத்த தேவன் பாவிகளை மன்னிப்பதற்கு, ஒருவர் கடனைச் செலுத்த வேண்டியிருந்தது. ஒருவர் பாரத்தைப் பொறுக்க வேண்டியிருந்தது. இதற்குத் தான் இயேசு வந்தார். நாம் எப்பொழுதும் செய்ததும் செய்யப் போகிறதுமான ஒவ்வொரு பாவத்தையும் தேவன் எடுத்து, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாக கல்வாரியில் கிறிஸ்துவின் மீது வைத்தார் என வேதாகமம் போதிக்கின்றது. “கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்” என ஏசாயா 53:6 கூறுகிறது. நாம் எப்பொழுதும் செய்துள்ளதும் அல்லது செய்யப் போகிறதுமான ஒவ்வொரு பாவத்தையும், நாம் ஒரு ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும், அவற்றையெல்லாம் தேவன் கிறிஸ்துவின் மீது வைத்தார். “…அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார்" என பேதுரு 2:24ல் வேதாகமம் கூறுகிறது. “கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்…” என 1 பேதுரு 3:18ல் கூறுகி்றது.
பாவிகளுக்குப் பதிலான இயேசுவின் மரணம் எனும் உண்மையே எனது மூளைக்கூடாக எப்பொழுதும் தொடர்ந்து வரும் உண்மையாகும். உண்மையில் இயேசு கிறிஸ்து எனது கடந்தகால, நிகழ்கால, எதிர்கால பாவங்கள் எல்லாவற்றையும் எடுத்து, தனது சொந்த சரீரத்தில் சுமந்தார். இதனை ஒரு தடவை நான் ஒரு பெண்ணிடம் கூறினேன். அதற்கு அவர், “எனது கடந்தகாலப் பாவங்களுக்காக எவ்வாறு அவர் மரித்தார் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியும், ஆனால் நான் இன்னமும் செய்யாமல் இருக்கும் எனது எதிர்காலப் பாவங்களுக்காக அவர் எவ்வாறு மரித்திருக்க முடியும் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியாது” எனக் கூறினார்.
நான் புன்னகையுடன் கூறினேன், “பெண்ணே, இயேசு கிறிஸ்து மரிக்கும்போது, உமது எல்லாப் பாவங்களுமே எதிர்காலத்தில்தான் இருந்தது. நீர் பிறந்து இருக்கக்கூட இல்லை” என்றேன்.
அவள் சில நிமிடங்கள் சிந்தித்துவிட்டு, “நீங்கள் கூறுவது சரியென நான் நினைக்கிறேன்” எனக் கூறினாள்.
“நீங்கள் அவ்வளவு பயங்கரமான வயதுபோன பெண்ணாக இல்லாவிட்டால், நான் கூறுவது சரியென எனக்குத் தெரியும்” என நான் கூறினேன்.
அவள் நகைப்புடன், “நான் அவ்வளவு வயதுபோனவள் அல்ல” என்றாள்.
நண்பரே, தேவன் காலத்தின் தொலை நோக்கில் நீர் எப்போதும் செய்யும் ஒவ்வொரு பாவத்தையும் பார்த்தார். பின்பு அவர் அந்தப் பாவங்களை ஒரு பெரிய பையில் போட்டு, கிறிஸ்துவின் மீது சுமத்தினார், “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்”.
தமது சொந்த சரீரத்தில் இயேசு எமது பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும்போது, நாம் பட்ட கடனைச் செலுத்தும்படிக்கு நமது இடத்தில் தேவன் அவரைத் தண்டித்தார். ஆகவே நாம் சாகும்போது அதனை நாம் செலுத்த வேண்டியதில்லை.
“யூதர்கள் கிறிஸ்துவைக் கொன்றனர்” என சிலர் கூறுகின்றனர். “ரோமப் போராளிகளே அதனைச் செய்தனர்” என வேறு சிலர் கூறுகின்றனர். ஆனால் வேதாகமம், தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” எனக் கூறுகிறது. வேதாகமத்தின்படி, தேவன் எம்முடைய இடத்தில் இயேசு மரணிக்க அனுமதித்தார். நாம் தண்டனைக்குத் தப்பும்படிக்கு எமது இடத்தில் இயேசுவை அவர் உண்மையில் தண்டித்தார். “தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காவும் அவரை ஒப்புக் கொடுத்தவர்…” என ரோமர் 8:32 கூறுகிறது.
சிலுவையில் தொங்கும்போது இயேசு ஏழு காரியங்களைக் கூறினார். ஆறாவதாக அவர் கூறியது, “எல்லாம் முடிந்தது” என்பதாகும். மற்றைய காரியங்களின் மத்தியில் இக் கூற்றுக் கருதுவது எமது பாவத்திற்காகப் பூரணமாகச் செலுத்தப்பட்டாயிற்று என்பதாகும்.
இப்போது:
இயேசு செலுத்தியது தேவனுக்குக் திருப்தியானது என்பதனை
எவ்வாறு நான் நிச்சயப்படுத்தலாம்?
அதற்கான பதிலை மூன்று சொற்களில் நான் கூறலாம் - ஒரு வெறுமையான கல்லறை! ஒரு கைதி விடுதலை செய்யப்படும்போது, சமூகத்திற்கான கடன் செலுத்தப்பட்டுள்ளது என்பது அதன் கருத்தாகும். தேவன் இயேசுவை மரணத்தில் இருந்து எழுப்பிய போது, அவர் முழு உலகத்திற்கும் கூறுவது, “உங்கள் பாவங்களுக்காக எனது குமாரன் செலுத்தியதில் நான் திருப்தியடைகிறேன்” என்பதாகும்.
உலகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு வியாபாரி பொருட்களை விற்கும்போது, அவர் அவைகளின் மீது விலைகளைப் போடமாட்டார். பொருட்களை வாங்க விரும்பி ஒருவர் வரும்போது, அவர் பணத்தினை வைக்க ஆரம்பிப்பார். வழங்கப்பட்ட பணம் வியாபாரியைத் திருப்தியாக்கவில்லையானால், அவர் பணத்தை மேசையிலே விட்டுவிடுவார். வியாபாரியைத் திருப்தியாக்க போதுமான அளவு பணம் போடப்படும்போது, அவர் அதனை அண்மித்து எடுத்துக் கொள்வார். அவர் இதனைச் செய்யும்போது, “செலுத்தப்பட்டதில் நான் திருப்தியடைகிறேன்” என்பதைக் காட்டுகிறார். தேவன் இயேசு கிறிஸ்துவை மரணத்தில் இருந்து எழுப்பியபோது, “உங்கள் பாவங்களுக்காக எனது குமாரன் செலுத்தியதில் நான் திருப்தியடைகிறேன்” என முழு உலகிற்கும் கூறினார்.
அதைத்தான் வேதாகமம் ஏசாயா 53:10ல், “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்…” எனக் கூறுகையில் கருதுகிறது. இயேசு சிலுவையில் மரிப்பதைப் பார்ப்பதினால் ஒரு குறிப்பிட்ட மகிழ்ச்சியையோ அல்லது ஆரவாரத்தையோ தேவன் அடைந்தார் என இச் சொற்றொடர் கருதவில்லை. “சித்தமாகி” என்ற சொல் மெய்யாகக் கருதுவது, “திருப்தியானார்” என்பதாகும். “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்” என ஏசாயா 53:11 கூறுகிறது. சிலுவையின் மீதான இயேசு கிறிஸ்துவின் மரணம் ஒரு பரிசுத்த தேவனின் வேண்டுகோளை முற்றிலுமாக திருப்தியாக்கியது. எமது பாவங்களுக்காக தேவனை இயேசு திருப்தியாக்கியதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது நாமாகவே தேவனைத் திருப்தியாக்க வேண்டும். அன்பான நண்பரே, நாமாகவே தேவனைத் திருப்தியாக்குவதாக இருந்தால் நாம் கட்டாயமாக மரித்து, நரகத்திற்குச் சென்று, சதாகாலத்திற்கும் இருக்க வேண்டும். அவ்வாறான செலுத்துதலைத்தான் அவர் கேட்கிறார்.
இப்போது:
செலுத்தப்பட்டதையிட்டு நீர் திருப்தியாக இருக்கிறீர் என்பதை
தேவனுக்கு தெரியப்படுத்துவதற்கு நீர்
என்ன செய்யலாம்?
இயேசு செய்ததுடன் ஏதாவது ஒன்றினை நீர் சேர்த்துக்கொள்ள முயற்சிப்பீரானால், நீர் சேர்த்துக் கொள்வது எவ்வளவு திறமானதாக இருந்தாலும் பரவாயில்லை, நீர் உமது செயற்பாட்டினால், “இயேசு செலுத்தியதில் நான் உண்மையாகத் திருப்தியடையவில்லை” என்று கூறுகிறீர். சிலுவையின் மீதான இயேசு கிறிஸ்துவின் மரணம் மாத்திரமல்லாமல் எனது பப்டிஸமும் சேர்ந்துதான் என்னை இரட்சிக்கிறது என்கிறீர்கள். இயேசு மாத்திரம்தான் இதனைச் செய்கிறார். “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” என அப்போஸ்தலர் 4:12 கூறுகிறது. நான் கிறிஸ்துவையும் பப்டிஸத்தையும் விசுவாசிப்பேனாக இருந்தால், எனது பாவங்களுக்காக இயேசு செலுத்தியதில் உண்மையாக நான் திருப்தி காணவில்லை என்பதாகும்.
செலுத்தப்பட்டதில் நாம் முற்றிலுமாக திருப்தியடைகிறோம் என்பதனைக் காட்டுவதற்கு, நாம் கட்டாயமாக வேறு எதையும் விசுவாசிப்பதை நிறுத்திவிட்டு இயேசுவை மாத்திரம் விசுவாசிக்க வேண்டும். எனது நற்கருமங்களை விசுவாசிப்பதை நான் கட்டாயம் நிறுத்த வேண்டும். அவை எவ்வளவுதான் திறமானதாக இருந்தாலும் பரவாயில்லை. எனது சபை அங்கத்துவத்தை விசுவாசிப்பதை நான் கட்டாயம் நிறுத்த வேண்டும். எனது சபை எவ்வளவு தான் திறமானதாக இருந்தாலும் பரவாயில்லை. எனது பப்டிஸத்தை விசுவாசிப்பதை நான் கட்டாயம் நிறுத்த வேண்டும். அந்த நியமம் எவ்வளவு அழகானதாக இருந்தாலும் பரவாயில்லை. எனது நல்ல வாழ்க்கையை விசுவாசிப்பதை நான் கட்டாயம் நிறுத்த வேண்டும். எவ்வளவுதான் தூய்மையானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தாலும் பரவாயில்லை. இரட்சிப்புக்காக இயேசு கல்வாரியில் செய்ததைவிட வேறெதையும் விசுவாசி்ப்பது, “எனது பாவங்களுக்காக உமது குமாரன் செலுத்தியதில் முற்றிலுமாக நான் திருப்தியடையவில்லை. இதனைவிட வேறு ஏதாவதும் எனக்குத் தேவையென நான் உணருகிறேன்” என தேவனுக்குக் கூறுவதாகும்.
செலுத்தப்பட்டதில் நான் திருப்தியடைகிறேன் என்பதனை தேவனுக்குக் காண்பிப்பதற்கு, நான் கட்டாயம் இயேசு கிறிஸ்துவை பூரணமாக விசுவாசிக்க வேண்டும். “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்” என யோவான் 3:36ல் வேதாகமம் கூறுகிறது. இப்போது அன்பான நண்பரே, கிறிஸ்துவில் பகுதியாக விசுவாசிப்பவர்களுக்கு வேதாகமத்தில் வாக்குறுதி இல்லை. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்குத்தான் வாக்குறுதி உண்டு. நான் இயேசு கிறிஸ்துவை தொண்ணூறு வீதம் விசுவாசித்து வேறு ஏதாவது ஒன்றை பத்து வீதம் விசுவாசித்தல், அந்தப் பத்துவீதம் தொண்ணூறு வீதத்தை அழிக்கிறது. நான் கிறிஸ்துவை முற்றிலுமாக விசுவாசிக்கவில்லை என அந்தப் பத்துவீதம் கூறுகிறது. “விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று” என வேதாகமம் யோவான் 3:18ல் கூறுகிறது. “குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்” யோவான் 3:36.
சமாதானத்தையும் சந்தோஷதையும் தேடுவதில் ஆஸ்தியை அழித்துப்போட்டு, ஒரு மலிவான விடுதியில் மரித்த ஒரு மனிதனின் கதையை டாக்டர் ஜோர்ஜ் w.Truelf என்பவர் கூறினார். அவரின் உடலை அவர்கள் கண்டபோது, அவரின் கட்டிலுக்கு அருகில் ஒரு மருந்துக் கடதாசித் துண்டில், பென்சிலினால் எழுதப்பட்டிருந்த இந்தக் கவிதையையும் கண்டார்கள்:
வீணான ஒரு ஆயிரம் வழிகளில் நான் சோதித்துள்ளேன்,
எனது பயங்கள் தணிவதற்கு, எனது விசுவாசம் வளர்வதற்கு,
எனக்குத் தேவையானது எல்லாம், வேதம் கூறுவது, இயேசு!
எனது ஆத்துமா இருளானது; எனது இருதயம் இரும்பானது,
என்னால் பார்க்க முடியாது; என்னால் உணர முடியாது,
ஒளிக்காகவும், வாழ்வுக்காகவும் நான் செல்ல வேண்டியது இயேசு!
அவர் மரித்தார்; அவர் ஜீவிக்கிறார்; அவர் ஆளுகிறார்; அவர் கெஞ்சுகிறார்
அவரின் எல்லா வார்த்தைகளிலும் செய்கையிலும் அன்பு உண்டு.
எல்லா, எல்லா குற்றவாளியான பாவிக்கும் தேவையானது இயேசு!
சிலர் பரிகசித்தாலும், சிலர் குற்றம் சாட்டினாலும்,
பயத்தின் மத்தியிலும், வெட்கத்தின் மத்தியிலும்,
நான் அவரிடம் செல்வேன். ஏனெனில் அவரின் நாமம் இயேசு!
அன்பான நண்பரே, உமது இரட்சிப்புக்காக வேறெதுவும் இல்லாமல் இயேசுவை மாத்திரம் விசுவாசிப்பதன் மூலமாக உமது பாவங்களுக்காக இயேசு செலுத்தியதில் நீர் திருப்தியடைகிறீர் என தேவனுக்குத் தெரியப்படுத்தியுள்ளீரா?
இப்போது இறுதியாக:
இயேசு கிறிஸ்துவை உமது சொந்த இரட்சகராக விசுவாசித்தால்
நீர் பரலோகம் செல்வீரென நீர் எப்படி அறிந்து கொள்ளலாம்?
பதில் சாதாரணமானது. தேவன் தாமே கொடுத்த வாக்குறுதி உமக்குண்டு. தேவன் தவறுவிடாதபடிக்கு மிகவும் ஞானமானவரும், எம்மை ஏமாற்றாதபடிக்கு மிகவும் நேர்மையானவருமாக இருக்கிறார் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். தேவன் கூறுவாரானால், அது உத்தரவாதம் அளிக்கப்பட்டது! தேவன் என்ன கூறுகிறார்? யோவான் 3:36, "குமாரனிடத்தில் விசுவாசிமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்” உமது இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவை நீர் முற்றிலுமாக விசுவாசிப்பீரானால், உமக்கு நித்திய ஜீவன் உண்டு என தேவன் கூறுகிறார். உமக்கு இது என்றோ ஒருநாள் கிடைக்கப் போகிறது என்பதில்லை. இப்போதே உமக்குக் கிடைக்கும். “அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்” என தேவன் யோவான் 3:18ல் கூறுகிறார். இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவை முற்றிலுமாக விசுவாசிக்கும் ஒரு நபர் இனிமேலும் தண்டனையின் கீழானவர் அல்ல என தேவன் வாக்களிக்கிறார். தண்டனை நீக்கப்பட்டு விட்டது. அவர் ஆக்கினைக்குள்ளானவர் அல்ல. அவர் பாவக் கடனைச் செலுத்த வேண்டியதில்லை. அவருடைய கடன் செலுத்தப்பட்டு விட்டது.
பரலோகத்தின் ஒவ்வொரு தேவதூதரும் பூமிக்கு இறங்கி என்னிடம் வந்து, “எனக்கு நித்திய ஜீவன் உண்டு, நீ ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. நீ பரலோகம் போய்க் கொண்டிருக்கிறாய்" எனக் கூறுவதைப் பார்க்கிலும், வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி, தேவனின் வார்த்தை எழுத்து வடிவில் என்னிடம் உண்டு.
தூதர்கள் வந்தால், “நீங்கள் வந்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் உண்மையில் எனக்கு உதவி செய்தது நீங்கள் அல்ல, மேலான அதிகாரத்திடம் இருந்து - தேவன், அவரிடம் இருந்து எனக்கு வாக்குறுதி உள்ளது” என நான் கூறுவேன்.
“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என தேவன் எனக்கு யோவான் 6:37ல் கூறுகிறார். நான் இதனை கிரேக்கில் வாசித்துள்ளேன். அங்கே இந்த வசனத்தில் ஐந்து மறைகள் உள்ளன. ஒரு கிரேக்க பேராசிரியர், ஒரு பழைய சபையில் பிரசங்கிக்கையில், “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என இந்த வசனம் கூறுகிறது, ஆனால் என்னிடத்தில் வருகிறவனை நான் ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும் புறம்பே தள்ளுவதி்ல்லை” எனக் கூறுகிறது எனக் கூறினார்.
ஆராதனையின் பின்பு ஒரு வயதான பெண் அவரிடம் வந்து, “நல்லது, பேராசிரியரே உங்களுக்கு தேவன் ஐந்து தடவைகள் கூறவேண்டியிருக்கலாம், ஆனால் எனக்கு ஒரு தடவையே போதும்” எனக் கூறினார்.
அந்த வயதான பரிசுத்த தேவ நபர் கூறியதை, நான் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு நித்திய ஜீவன் உண்டென தேவன் ஒரு தடவை மட்டும் கூறினாலே, அது எனக்குப் போதுமானது. எனது நித்தியத்தை அதன்மேல் துணிந்து இறங்குவேன். தேவனின் சொந்த வார்த்தையைப் பார்க்கிலும் மேலான நிச்சயமாக நீர் வேறெதைப் பெறலாம். தேவன் பொய் சொல்ல சாத்தியமில்லை என எபிரெயர் 6:18 கூறுகிறது. தேவன் பொய் சொல்ல மாட்டார் என தீத்து 1:2 கூறுகிறது.
இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசிக்காததுதான் இவ்வுலகிலேயே மிகவும் கேவலமான பாவமாகும். இந்தப் பாவத்தினால் மட்டும் தான் மனிதர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். “விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்” என மாற்கு 16:16 கூறுகிறது.
இரட்சிப்பின் தெளிவானதும் சாதாரணமுமான வழி இதுதான். இப்பொழுது இதற்காக நீர் ஒன்று செய்வீரா? உமது இரட்சகராக இயேசு கிறிஸ்துவை இன்றே விசுவாசிப்பீரா?
நீர் அவரை விசுவாசிப்பீரானால், இந்த சாதாரண ஜெபத்தை ஜெபியும்:
அன்பான கர்த்தராகிய இயேசுவே, நான் ஒரு பாவியென்று எனக்குத் தெரியும். எனக்காக நீர் மரித்தீர் என நான் விசுவாசிக்கிறேன். எனக்குத் தெரிந்த அளவில் திறமாக, உம்மை எனது இரட்சகராக விசுவாசிக்கிறேன். உமக்காக வாழவும் நல்ல கிறிஸ்தவனாக இருக்கவும் இப்போது எனக்கு உதவி செய்யும் ஆமென்.
அன்பான நண்பரே, நீர் இந்த சாதாரண ஜெபத்தை உமது இருதயத்தில் கருதி ஜெபித்திருப்பீரானால், உமக்கு நித்திய ஜீவன் உண்டு என்றும்; நீர் ஒருபோதும் கெட்டுப் போவதி்ல்லை என்றும் உமக்கு நிச்சயம் இருக்கலாம். இதற்கான தேவனின் வார்த்தை உமக்கு உண்டு. “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்” என இயேசு யோவான் 3:36ல் கூறினார். அவர் மீண்டும் யோவான் 5:24ல் “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” எனக் கூறினார்.
உமது இரட்சகராக நீர் அவரை விசுவாசிக்கையில் உமக்கு நித்திய ஜீவன் உண்டு; நீர் இனி ஒருபோதும் ஆக்கினைக்குக் கீழாக வருவதி்ல்லை. அதைத்தான் இயேசு வாக்களிக்கிறார், அவர் பொய் சொல்ல மாட்டார்.