டாக்டர்.கேட்டிஸ் ஹட்சன்
மத்தேயு 7:7,8ல் இயேசு கூறினார்: "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும், ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்”.
நீங்கள் எப்போதாவது ஏதாவதொன்றைக் கேட்டும் அதனைப் பெற்றுக்கொள்ளாததுண்டா? நீங்கள் ஜெபித்தும் உங்கள் ஜெபத்திற்கு பதில் பெற்றுக்கொள்ளாததுண்டா? ஒருவர் யோசனையாகக் கூறுகையில்: தேவன் எல்லா ஜெபங்களுக்கும் பதில் கொடுக்கிறார். அவர் சில ஜெபங்களுக்கு, "ஆம்” என்றும், மற்றையவற்றுக்கு "இல்லை” என்றும் பதிலளிக்கிறார் எனக் கூறினார். நான் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
டாக்டர் ஜோன் ஆர் ரைஸ் அவர்கள், ஜெபம் - கேட்டலும் பெற்றுக்கொள்ளுதலும் எனும் தனது புத்தகத்தில், ஜெபமானது கேட்டலும் ஜெபத்திற்கான பதிலானது பெற்றுக்கொள்ளுதலுமாக இருக்கிறது என்கிறார். தேவன் சில ஜெபங்களுக்கு "ஆம்” என்றும், மற்றையவற்றுக்கு "இல்லை” என்றும் பதிலளிப்பதில்லை. அவர் "இல்லை” என்று கூறும்போது, அந்த ஜெபமானது பதிலளிக்கப்படவில்லை என்பதாகும். இல்லை என்பது, ஜெபத்திற்கான பதிலல்ல. ஜெபத்திற்கான பதிலானது பெற்றுக்கொள்ளுதல் ஆகும்.
மத்தேயு 7:8ல் உள்ள வாக்குத்தத்தத்தில், நாம் கேட்டால் பெற்றுக் கொள்வோம்; நாம் தேடினால் கண்டடைவோம்; நாம் தட்டினால் அது திறக்கப்படும் என இயேசு கூறியுள்ளார். ஆனால் நான் கேட்டேன் பெற்றுக்கொள்ளவில்லை, "நான் எப்பொழுதும் ஜெபத்திற்கான ஒரு பதிலைப் பெற்றுக்கொள்ளவில்லை” என அநேகர் என்னிடம் கூறியுள்ளனர். நல்லது, ஒரு பதிலைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகள் உள்ளன. நான் இன்று உங்களுடன் ஜெபம் பதிலளிக்கப்படுவதற்கான நிபந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
முதலாவது நாம் கட்டாயமாக,
வழியைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும்
"என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார் என சங்கீதம் 66:18 கூறுகிறது. என்னுடைய வாழ்க்கையில் அறியப்பட்ட பாவத்திற்கு நான் விட்டுக் கொடுப்பேனாக இருந்தால், எனது ஜெபம் பதிலளிக்கப்படுவதை நான் எதிர்பார்க்க முடியாது. "என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” என இந்த வசனம் தெளிவாகக் கூறுகிறது. "இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” என ஏசாயா 59:1,2 கூறுகிறது.
தேவன் ஜெபத்தைக் கேட்கக் கூடியவர் என்பதை வேதாகமம் மிகவும் தெளிவாகக் கூறுகிறது; ஆனால் எமது வாழ்க்கையில் அறியப்பட்ட பாவங்களுக்கு நாம் விட்டுக்கொடுப்போமாக இருந்தால், அவர் எமக்கு செவிகொடுக்கமாட்டார். ஜெபத்திற்கான பதிலை ஒருவர் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், அவர் வழியைத் தெளிவாக்க வேண்டும். உமது வாழ்விலுள்ள ஒவ்வொரு அறியப்பட்ட பாவத்தையும் அறிக்கை செய்து, 1யோவான் 1:9ல் தேவன் வாக்களித்துள்ள மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் உரித்தாக்கிக் கொள்ளும். அறியப்பட்ட பாவங்கள் ஒவ்வொன்றுக்கும் மன்னிப்பையும், சுத்திகரிப்பையும் பெற்றுக்கொள்வதன் மூலமாக வழியைத் தெளிவாக்கியதும், "என் ஆத்துமாவிற்கும் இரட்சகருக்குமிடையே எதுவுமில்லை” என்பதைக் கருதி பாடக் கூடியாதாக இருக்குமானால், அதன் பின்னர் நீர் அடுத்தபடிக்கு நகர ஆயத்தமாக இருக்கிறீர்.
ஜெபம் பதிலளிக்கப்படுவதற்கான இரண்டாவது நிபந்தனை:
நீதியான வாழ்க்கை இருக்க வேண்டும்
"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” என யாக்கோபு 5:16 கூறுகிறது. ஜெபமானது, "ஒரு நீதிமானால்” செய்யப்பட வேண்டும் என்பதைக் கவனியுங்கள். "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது” என 1 பேதுரு 3:12 கூறுகிறது. முக்கியமானதாக இருப்பதைக் கூறுகிறது: "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது”. கர்த்தருடைய செவிகள் எல்லாருடைய ஜெபங்களுக்கும் திறந்ததாக இருக்கவில்லை. அது, நீதிமான்களின் ஜெபத்திற்குத் தான் திறந்ததாக இருக்கிறது. உமது ஜெபம் பதிலளிக்கப்பட வேண்டுமென நீர் விரும்புவீரானால், ஒரு நீதியான வாழ்வு மிகவும் அவசியமானது. சரியான முறையிலே நீர் அறிந்தளவு மிகவும் திறமான முறையில் வாழ்வதன் மூலம், உமது ஜெபங்களுக்கு அவரின் செவி திறந்ததாக இருக்கும் என வேதாகமம் கூறுகிறது.
மூன்றாவது, நீர் ஜெபிக்கும்போது ஒரு பதிலை எதிர்பார்ப்பீரானால், நீர் கட்டாயம்:
ஒரு கீழ்ப்படிவுள்ள கிறிஸ்தவனாக இருக்க வேண்டும்
"அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்” என 1 யோவான் 3:22 கூறுகிறது. இந்த வசனம் கூறுவதைக் கவனியுங்கள். "நாம் வேண்டிக்கொள்கிறது எதுவோ அதை அவராலே பெற்றுக் கொள்ளுகிறோம்”. இது ஒரு பெரிய சொல் - "எதுவோ”. நாம் எதைக் கேட்டாலும் என நீங்கள் கூறுகிறீர்களா? வேதாகமம் கூறுகிறது: "நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ” - நீங்கள் எதைக் கேட்டாலும் அதைப் பெற்றுக் கொள்ளுவீர்கள். ஏன்? ஏனெனில், "அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியால்” பெற்றுக் கொள்ளலாம். ஜெபம் பதிலளிக்கப்படுவதற்கு முன்னதாக, கீழ்ப்படிவு தேவைப்படுகிறது. அவர் கூறும் எல்லாவற்றையும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். ஒரு கீழ்ப்படிவுள்ள கிறிஸ்தவனாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதுமாத்திரமல்லாமல், உண்மையாகவே பாடுபட்டு அவரைச் சந்தோஷப்படுத்துங்கள். அவர் கட்டளையிட்டுள்ள காரியங்களைச் செய்வது மட்டுமல்லாமல், அவருடைய பார்வையில் பிரியமானவைகளைச் செய்கிறோம் என வேதாகமம் கூறுகிறது. நாம் அவருக்குக் கீழ்ப்படிவது மட்டுமல்லாமல், அவரைப் பிரியப்படுத்தப் பாடுபடுகிறோம். நாம் செய்ய வேண்டுமென்றிருக்கும் ஏதாவதொன்றைக் குறித்து ஒரு தெளிவான கட்டளை இல்லாதிருக்கலாம், ஆயினும் "இது கர்த்தரைப் பிரியப்படுத்துமா?” என நாம் கேட்க வேண்டும்.
நீங்கள் உங்கள் ஜெபத்திற்கான ஒரு பதிலை எதிர்பார்ப்பீர்களானால், நீங்கள் கட்டாயம் வழியைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும்; நீங்கள் கட்டாயம் ஒரு நீதியான வாழ்க்கை வாழ வேண்டும்; நீங்கள் கட்டாயம் ஒரு கீழ்ப்படிவுள்ள கிறிஸ்தவனாக இருக்க வேண்டும்.
நான்காவது இடத்தில் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியது;
கிறிஸ்துவில் நிலைத்து இருக்க வேண்டும்
"நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என யோவான் 15:7ல் இயேசு கூறினார். என்ன ஒரு வாக்குத்தத்தம்! "நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ, அது உங்களுக்குச் செய்யப்படும்”. ஆனால் ஒரு நிபந்தனை: நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருக்க வேண்டும்!
கிறிஸ்துவில் நிலைத்திருத்தல் என்றால் என்ன? யோவான் 15ம் அதிகாரம், கொடியானது திராட்சைச் செடியில் நிலைத்திருப்பதை சித்தரிக்கிறது. செடியில் நிலைத்திருத்தல் என்பது, அதனுடன் தொடுக்கப்பட்டிருத்தல் என்பதை முக்கியமானதாகக் கருதவில்லை. தொடுக்கப்பட்டிருக்கும் கிளையினால் எவ்விதத்திலும் நிலைத்திருக்க முடியாது. நிலைத்திராததன் பெறுபேறு, கிளை காய்ந்து போவதற்கு ஏதுவாகும். ஆகவே அது கனிகொடுக்க மாட்டாது.
ஏன் ஒரு கிளை கனிகொடுக்க மாட்டாது? ஏன் அது காய்ந்து போகிறது? ஏனெனில் செடியின் ஜீவன் அதற்குள்ளாக ஊடுருவுவது இல்லை. கிளையானது செடியிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். போஷாக்குக்காகவும், ஈரலிப்புக்காகவும் கிளையானது நிலத்திற்குக் கீழ்நோக்கிச் செல்லாது. செடியின் வேரானது, கீழே சென்று ஈரலிப்பையும் போஷாக்கையும் உணவையும் நிலத்திலிருந்து எடுத்து, செடிக்கூடாக கொடிகளுக்கு அனுப்புகிறது. அதனால் கொடிகள் கனிகொடுக்கிறது. செடியில் நிலைத்திருக்கும் கொடியானது, சாதாரணமாக செடியின் ஜீவன் தனக்கூடாக கடந்து செல்வதற்கு ஒப்புக்கொடுக்கிறது. அல்லது திறந்ததாக இருக்கிறது. ஆகவே கிறிஸ்துவில் நிலைத்திருத்தல் என்பது, சாதாரணமாக எம்மை ஒப்புக்கொடுப்பதைக் கருதுகிறது; நாம் சரணடைகிறோம்; கிறிஸ்துவின் ஜீவன் எமக்கூடாக ஜீவிக்க, அவர் எமக்கூடாகக் கடந்து செல்ல நாம் கிறிஸ்துவுக்கு அனுமதிக்கிறோம்.
எமக்கூடாக தனது ஜீவனில் கிறிஸ்து ஜீவிக்கையில் கிறிஸ்தவ வாழ்வானது அவ்வளவிற்கு ஒரு போலியானதாக இருக்கமாட்டாது. "கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” என கலாத்தியர் 2:20ல் பவுல் கூறுகிறார்.
நாம் எமது ஜெபத்திற்கான ஒரு பதிலை எதிர்பார்ப்போமானால், நாம் கட்டாயம் கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும். கிறிஸ்துவில் நிலைத்திருத்தல் என்பது அவருக்கு ஒப்புக்கொடுத்தல் என்பதாகும். எமது வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் கிறிஸ்து கட்டுப்படுத்துவதற்கு அனுமதித்தலாகும்; கொடியானது செடியில் நிலைத்திருப்பது போலவும், செடி தனது ஜீவனை கடத்துவதற்கு கொடி அனுமதிப்பது போலவும், தனது ஜீவனில் எமக்கூடாக ஜீவிக்க நாம் அவருக்கு அனுமதிக்க வேண்டும்.
எமது ஜெபத்திற்கான ஒரு பதிலை நாம் எதிர்பார்ப்போமானால், நாம் கட்டாயம் வழியைத் தெளிவாக்குவதும், ஒரு நீதியான வாழ்வு வாழ்வதும், ஒரு கீழ்ப்படிவுள்ள கிறிஸ்தவனாக இருப்பதும், கிறிஸ்துவில் நிலைத்திருப்பதும் மட்டுமல்லாமல், நாம் கட்டாயம்:
விசுவாசம் உள்ளவராக இருக்க வேண்டும்
"இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்” ( மாற்கு 9:23 ). நாம் கட்டாயம் ஒரு பதிலை எதிர்பார்க்க வேண்டும். "உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக” என யாக்கோபு 1:5-7 வெளிப்படுத்துகிறது.
நாம் ஜெபத்திற்கான ஒரு பதிலைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், நாம் கட்டாயம் விசுவாசிக்கவும், எதிர்பார்க்கவும் வேண்டும். "தங்களால் வெற்றியடைய முடியும் என விசுவாசிப்பவர்கள்தான் வெற்றியடைவர் என எமேர்சன் கூறினார். "உம்மால் முடியுமென நீர் நினைப்பீரானால், நீர் சரியாக இருக்கிறீர்; உம்மால் முடியாதென நீர் நினைப்பீரானால், மீண்டும் நீர் சரியாக இருக்கிறீர்” என கென்றிபோட் கூறினார். "அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” என வேதவாக்கு கூறுகிறது. ஒருவர் விசுவாசிக்காமல் ஜெபத்திற்கான ஒரு பதிலை எதிர்பார்க்க முடியாது. "…. தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” என எபிரெயர் 11:6 கூறுகிறது. தேவன் இருக்கிறார் என்றும், தம்மைத் தேடுகிறவர்களுக்கு அவர் பலனளிக்கிறவர் என்றும் நீர் கட்டாயம் விசுவாசிக்க வேண்டும். நீர் பெற்றுக் கொள்வீரென விசுவாசியும்.
இதுதான் ஜெபம் பதிலளிக்கப்படுவதற்கான நிபந்தனை என நான் கூறவில்லை, என்னுடைய விசுவாசம் மிகவும் பெவீனமாக இருந்த நேரத்திலும், நான் குறிப்பாக ஜெபித்துள்ளேன். ஆனாலும் ஒரு பதிலைப் பெற்றுக் கொள்வேன் என நான் நினைத்ததை நான் ஜெபித்தது காண்பித்தது. எனக்கு கொஞ்சமாவது விசுவாசம் இல்லாதிருந்திருந்தால் நான் எனது நேரத்தை ஜெபிப்பதில் விரயமாக்கியிருக்க மாட்டேன். என்னுடைய விசுவாசமானது, நான் விரும்புகின்ற அளவிற்கு எப்பொழுதும் உறுதியாக இருப்பதில்லை. இருப்பினும் ஜெபம் பதிலளிக்கப்படுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக விசுவாசம் இருக்கிறது. "நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” என இயேசு கூறினார்.
நெப்போலியனின் இராணுவத்தினரில் ஒருவன் ஒரு பெரிதான விண்ணப்பத்தை முன்வைத்தான், அதற்கு மற்றைய இராணுவத்தினர்கள் "நீ அதிகமாகக் கேட்டுவிட்டாய். நீ இதனை ஒருபோதுமே பெற்றுக் கொள்ளமாட்டாய்” என நகைப்புடன் கூறினார்கள். ஆனாலும் அந்த மேற்பார்வையாளரின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது. "விண்ணப்பத்தின் அளவின் மூலமாக நீ என்னைக் கெளரவித்துள்ளாய்” என நெப்போலியன் அந்த இராணுவத்தினரிடம் கூறினாராம்.
நண்பரே! உங்கள் விண்ணப்பத்தின் முக்கியத்துவத்தின் மூலமாக தேவனைக் கெளரவப்படுத்துங்கள். அவரிடம் இருந்து உங்களால் அதிகம் கேட்க முடியாது. பெரிய வாயை உடைய மக்களை தேவனுக்குப் பிடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? "உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே, உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்” என சங்கீதம் 81:10 கூறுகிறது. ஒரு பெரிய வாயை தேவனால் நிரப்ப முடியும். உங்களால் அதிகம் கேட்க முடியாது. தேவன் கொடுக்க ஆரம்பிக்கும்போது, அவரிடம் இருந்ததைவிட குறைவாக்குவதற்குப் போதுமான அளவிற்கு தேவனிடம் இருந்து உம்மால் பெறமுடியாது.
ஜெபத்திற்கான ஒரு பதிலை நீர் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், அடுத்ததாக உமக்கு:
சரியான நோக்கங்கள் இருக்க வேண்டும்
"நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்” என யாக்கோபு 4:3 கூறுகிறது. பிழையான காரணத்திற்காக அல்லது ஒரு சுயநல நோக்கிற்காக அது உங்களுக்குத் தேவைப்படுகிறது. தேவன் எனது ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார் என எனக்கு நிச்சயமாகத் தெரியும்; ஆனால் எனக்குத் தேவையில்லாத ஒன்றிற்காக மாம்ச விருப்பத்தினாலும், ஒரு சுய நலத்தினாலும் கேட்பேனானால், அந்தக் காரியத்திற்கு தேவன் என் ஜெபத்திற்குப் பதிலளிக்க மாட்டார். எனது சொந்த இச்சையை நிறைவேற்றுவதாக இருப்பதனால் நான் பெற்றுக் கொள்ளமாட்டேன். அது "எனது சொந்த இச்சைக்கும்”, எனது சொந்த சுயநல விருப்புக்கும் செலவழிப்பதாக இருக்கும்.
நீங்கள் ஜெபிக்கும் போது, உங்களுக்குக் கட்டாயம் சரியான நோக்கங்கள் இருக்க வேண்டும். சரியான காரணத்திற்காக - கிறிஸ்துவை கெளரவப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் உமக்கு அவை கட்டாயம் தேவைப்பட வேண்டும். அது உமது தேவைகளைக் குறித்து தேவன் அக்கறைப்படவில்லை எனக் கூறுவதற்கில்லை. "எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என கர்த்தர் எனக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கும்போது, நாளாந்த ஆகாரத்திற்காக குறிப்பாக ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார். அந்த ஜெபத்தின்படி, நாம் ஒவ்வொரு நாளும் ஜெபிப்பதை அவர் எதிர்பார்க்கிறார். "கர்த்தாவே, இந்த வாரத்திற்கான அப்பத்தை எங்களுக்குத் தாரும்” என்றோ அல்லது "கர்த்தாவே, இந்த மாதத்திற்கான அப்பத்தை எங்களுக்குத் தாரும், நாம் மீண்டும் அடுத்த மாதம் ஜெபிப்போம்” என்றோ அவர் எமக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. "நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது: "…. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என நாம் ஒவ்வொரு நாளும் ஜெபிக்க வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார்.
உமது நோக்கங்கள் சரியானவையாக இருக்குமானால், உமது ஜெபத்திற்கான ஒரு பதிலை எதிர்பார்க்க உமக்கு உரிமையுண்டு. முட்டாள்த் தனமான காரியங்களுக்காகக் கேட்காமல், கிறிஸ்துவை மகிமைப்படுத்தக் கூடியவற்றிற்காகக் கேளுங்கள்.
சிலவேளைகளில் ஒரு பதில் வரவில்லையானால், அது தேவனுக்குச் சித்தமி்ல்லை என விசுவாசியுங்கள். தேவன் திறமானதை அறிவார்,
எனெனில் நாம் ஜெபிக்கும்போது அது கட்டாயம்:
தேவனின் சித்தத்தின்படியாக இருக்க வேண்டும்
1யோவான் 5:14, 15ல் "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்”. நாம் எதையாகிலும் "அவருடைய சித்தத்தின்படி” கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என வேதாகமம் கூறுகிறது. ஜெபமானது கட்டாயம் தேவனின் சித்தத்தின்படியாக இருக்க வேண்டும்.
ஒருவர் தான் தேவனின் சித்தப்படியாக ஜெபிக்கிறேன் என்பதை எவ்வாறு நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்? பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுவதன் மூலமாக நிச்சயப்படுத்திக் கொள்வது ஒரு வழியாகும். "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” என ரோமர் 8:26 கூறுகிறது. அவர் எமக்கு ஜெபிப்பதற்கு உதவி செய்பவர். நாம் என்னத்திற்காக ஜெபிப்பது என எமக்கு எப்பொழுதும் தெரியாது, ஆனாலும் அவர் எம்மை ஜெபத்தில் வழிநடத்துகிறார்.
குறிப்பிட்ட ஒன்றிற்காக ஜெபிக்க வேண்டும் என்ற ஒரு ஆழ்ந்த விருப்பம் எப்போதாகிலும் உமக்கு ஏற்பட்டுள்ளதா? நான் இதற்காக கட்டாயம் ஜெபிக்க வேண்டும் என நீர் பலமாக உணர்ந்திருப்பீர்! அதுதான் உம்மைப் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துவது. உமக்கு அந்த காரியம் சித்திக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாய் இருந்தபடியால் அவர் உம்மை அந்தக் காரியத்திற்காக ஜெபிக்கும்படி வழிநடத்தினார். "கர்த்தாவே இது உம்முடைய சித்தம் இல்லையானால், இதனை எனக்குத் தரவேண்டாம். எனக்கு என்னது தேவையென்பதை நான் அறிந்து கொண்டதைப் பார்க்கிலும் நீர் அதிகம் அறிவீர்” என ஜெபிப்பது நல்லது.
நான் ஒரு சிறுவனாக இருந்த போது, எனது தகப்பனார் என்னைத் தனது சிறிய கத்தியுடன் விளையாட விடமாட்டார். அவருக்கு சுயநலம் என நான் நினைத்தேன். ஏன் அவர் என்னைத் தடுத்தார் என்று எனக்கு இப்போது தெரியும். அவர் அந்தக் கத்தியை சவரகம் செய்யக்கூடிய அளவிற்கு கூராக வைத்திருப்பவர். அவர் அதனால் சவரகம் செய்யாத பொழுதிலும் அதனைக் கூராக்கி வைத்திருப்பார். நான் ஒரு விரலை வெட்டியோ அல்லது பாரதூரமான காயத்தையோ ஏற்படுத்தியிருக்கக் கூடும். எனக்குக் கட்டாயம் தேவையென நான் நினைத்திருந்தாலும் அதனை என்னிடமிருந்து விலக்கி வைத்திருந்தபடியினால், நான் இப்போது அந்த சம்பவத்தைத் திரும்பிப் பார்த்து அவருக்கு நன்றி செலுத்துகிறேன். அதனை நான் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது அவரின் சித்தம், அவரின் சித்தம் திறமானதாக இருந்தது. ஆகவே தேவனின் சித்தமும் எப்பொழுதும் எமக்கு திறமானதாகவே இருக்கும்.
ஜெபத்திற்கான ஒரு பதிலை எவ்வாறு பெற்றுக்கொள்வீர்? தேவனுடைய சித்தத்தின்படி வேண்டிக்கொள்வதன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். பதிலைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு வழி:
தளர்ந்து போகாமல் இருக்க வேண்டும்
"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என மத்தேயு 7:7ல் இயேசு கூறியதுடன், 8ம் வசனத்தில், "கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்” எனக் கூறினார். "கேட்கிற” எனும் சொல்லானது தொடர்காலத்தில் இருக்கிறது. அதன் கருத்தாவது, "கேட்டுக்கொண்டே இருக்கிற ஒருவர் பெற்றுக்கொள்ளுகிறார்; தேடிக்கொண்டே இருக்கிறவர், பெற்றுக்கொள்ளுகிறார், தட்டிக்கொண்டே இருக்கிறவருக்குத் திறக்கப்படும்” என்பதாகும்.
நீங்கள் பவுலை ஞாபகப்படுத்திப் பார்ப்பீர்களானால், அவர் தனது மாம்சத்தில் உள்ள ஒரு முள்ளை நீக்கும்படிக்கு, "மூன்று தரம் கர்த்தரிடத்தி்ல் வேண்டிக்கொண்டார்”. ஆனாலும் தேவன் அதனை நீக்கவில்லை. "கர்த்தாவே, இந்த முள் என் மாம்சத்தில் இருக்கிறது. நீர் இதனை நீக்குவீரானால் நான் ஒரு திறமான பிரசங்கியாராக இருக்க முடியும்” என பவுல் ஜெபித்தார். ஆனால் தேவன் பதிலளிக்கவில்லை.
ஆகவே பவுல் மீண்டும், "கர்த்தாவே, நான் இந்த முள்ளைக் குறித்து மீண்டும் ஜெபிக்கிறேன். நீர் இதனை நீக்கவில்லை. நீர் இந்த முள்ளை நீக்குவீரானால், நான் ஒரு திறமான பிரசங்கியாராக இருக்க முடியும்” எ ன ஜெபித்தார். இன்னமும் பதில் இல்லை.
பவுல் மீண்டும்: "கர்த்தாவே, நான் மூன்றாவது தடவையாக இந்த முள்ளுக்காக ஜெபிக்கிறேன். இது இன்னமும் இங்கே இருக்கிறது. இது நீக்கப்படுவதை நான் விரும்புகிறேன். இது இல்லாவிட்டால், நான் ஒரு திறமான பிரசங்கியாராக இருக்கக் கூடியதாகவும், உமக்கு நன்றாக சேவை செய்யக் கூடியதாகவும் இருக்கும்” என ஜெபித்தார். தேவன் இன்னமும் அதனை நீக்கவில்லை. எப்படியாயினும் தேவன் பவுலுக்கு, "என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” எனக் கூறினார்.
அதன் பின்பு பவுல் அந்த ஜெபத்தை: "கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” என மாற்றினார்.
நீர் ஒரு பதிலைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். உறுதியான ஜெபமானது தளர்ந்து போகாமல் இருக்க வேண்டும். கேட்டுக்கொண்டே இருப்பவர் பெற்றுக்கொள்வார். தேடிக்கொண்டே இருப்பவர் கண்டடைவார். பவுல் கேட்டுக்கொண்டே இருந்திருப்பாரானால், அவர் பெற்றிருப்பார். ஆனால் தேவன் அவரின் ஜெபத்தை மாற்றிவிட்டார்.
நான் இதனை உமக்கு வாக்களிக்கிறேன்: நீர் ஏதாவதொன்றிற்காக ஜெபிக்க ஆரம்பிப்பீரானால், அதற்காக ஜெபித்துக்கொண்டே இரும், அதற்காக ஜெபித்துக் கொண்டே இரும், அதற்காக ஜெபித்துக்கொண்டே இரும், இரண்டில் ஒன்று நடைபெறும். மத்தேயு 7:7,8 ல் உள்ள அவரின் வாக்குத்தத்தத்தை அடிப்படையாகக் கொண்டு, நீர் ஜெபிப்பதை அவர் உமக்குக் கொடுப்பார். அல்லது, அப்போஸ்தலனாகிய பவுலுக்கு செய்ததைப் போல உமது ஜெபத்தை அவர் மாற்றுவார்.
ஒருவர் ஏதாவதொன்றிற்காக ஜெபித்து தளர்ந்து போனதை கேள்விப்படுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள் எனும் முடிவுக்கு வருவீர்கள். ஆகவே அதற்காக மீண்டும் ஜெபிக்க மாட்டீர்கள். நான் உங்களுக்கு யோசனையாகக் கூறுவது: "கர்த்தாவே, நீர் எனக்குக் கொடுக்கும் வரைக்கும் அல்லது எனக்கு அது தேவையில்லை என நீர் கண்டு எனது ஜெபத்தை மாற்றும் வரைக்கும் நான் ஜெபித்துக்கொண்டே இருக்கப் போகிறேன்” என இப்போது நீங்கள் ஜெபியுங்கள்.
எண்ணெய்க்காக நிலத்தைத் தோண்டிய ஒரு மனிதனின் கதையை நான் கேட்டிருக்கிறேன். அவனுக்கு பணம் போதாமல் போய்விட்டது. அவன் மீண்டும் மீண்டும் கடன்பட்டும் வெற்றி இல்லாதவனாகவே ஆழத்திற்கு தோண்டினான். இறுதியில் அவன் தளர்ந்து போனவனாக, கிணற்றில் இருந்து துளையிடும் இயந்திரத்தைத் தூக்கி வெளியே எடுத்துவிட்டான். சில மாதங்களின் பின்னர், வேறொரு மனிதன் வந்து, ஒரு துளையிடும் இயந்திரத்தை அதே கிணற்றில் போட்டு, ஒரு சில அடிகள் ஆழமாகத் தோண்டினான். அவன் எடுத்த முயற்சியால், திரவம் தீவிரமாக சீறிவந்தது. அந்த முதலாவது மனிதன் மிகக் குறைந்த காலத்தில் நிறுத்திவிட்டான்.
எத்தனை கிறிஸ்தவர்கள் காரியங்களுக்காக ஜெபித்து, குறைந்த காலத்தில் நிறுத்திவிடுகின்றனர்? "கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” என இயேசு கூறினார். கேட்டுக்கொண்டே இருங்கள், தேடிக்கொண்டே இருங்கள், தட்டிக்கொண்டே இருங்கள். தளர்ந்து போகாதிருங்கள்! இந்தப் பாடல் வரிகள் அறிவுரை கூறுவது போல,
ஜெபித்துக்கொண்டே இருங்கள் ,
வெளிச்சம் ஊடுருவும் வரைக்கும்,
அந்த கர்த்தர் பதிலளிப்பார்,
அவர் பதிலளிப்பார் உனக்கு;
தேவன் வாக்களித்துக்கொண்டே இருக்கிறார்,
அவரின் வார்த்தை மெய்யானது;
ஜெபித்துக்கொண்டே இருங்கள்,
வெளிச்சம் ஊடுருவும் வரைக்கும்.
அடுத்ததாக நீங்கள் ஜெபத்தில் ஒரு பதிலை எதிர்பார்ப்பதற்கு:
விக்கிரகங்கள் இருதயத்தில் இருக்க முடியாது
எசேக்கியேல் 14:3: "மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக் கொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?” என்று கூறுகிறது. இந்த மக்கள் தங்கள் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்திருந்தவர்கள். இதனால், "இவர்கள் என்னிடத்தில் ஜெபிக்கலாமா?” என தேவன் கேட்கிறார்.
உங்கள் இருதயத்தில் விக்கிரகம், அதாவது தேவனிலும் பார்க்க மேலானதொன்று இருக்குமானால் நீங்கள் தேவனிடத்தில் ஜெபிக்கலாமா? எனும் கேள்வி எழுப்பப்படுகிறது.
ஜெபத்திற்கான ஒரு பதில் உமக்குத் தேவையானால் கட்டாயம்:
கணவனுக்கும் மனைவிக்குமிடையில்
ஒரு சரியான உறவு இருக்க வேண்டும்
1பேதுரு 3:7:, "அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்” எனக் கூறுகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான தவறான ஒரு உறவுமுறையானது ஜெபத்திற்கு பதில் கிடைக்காமல் போகப்பண்ணும் என வேதாகமம் கற்பிக்கிறது. மாறாத சண்டைகளும், உபயோகமற்றவைகளை மிகைப்படுத்தி பேசுதலும், சந்தடியும் குடும்பத்தில் இருக்கும்போது ஜெபத்திற்கான பதிலை தேவனிடம் எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் குடும்பத்தின் உறவுமுறையை சரிப்படுத்துங்கள். அப்பொழுது உங்கள் ஜெபத்திற்கான பதிலைப் பெற்றுக்கொள்ளலாம். "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுப்பேன்” ( எரேமியா 33:3 ). என அவர் கூறுவதன் மூலம், தேவன் எம்மைப் பரியாசம்பண்ணவில்லை. "உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்” ( சங்கீதம் 81:10 ) எனக் கூறி, அவர் எம்மை ஏமாற்றவில்லை. "கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” ( யோவான் 6:24 ) என்பதை அவர் கருதியே கூறியுள்ளார். நாங்கள் ஜெபத்திற்கான பதிலைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென தேவன் எதிர்பார்க்கிறார். நாங்கள் ஜெபத்திற்கான பதிலைப் பெறவேண்டுமென தேவன் விரும்புகிறார். அதனால் அவர் சி்ல நிபந்தனைகளைக் கொடுக்கிறார். கணவனுக்கும் மனைவிக்குமிடையில் ஒரு சரியான உறவுமுறை இருக்கவேண்டும் என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்றாகும்.
தேவன் இதனையும் யோசனையாகக் கூறுகிறார்: நீங்கள் ஜெபிக்கும்போது:
குறிப்பானதாக இருக்க வேண்டும்
உங்களுக்குத் தேவையானதற்காக ஜெபியுங்கள். "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்” என யோவான் 14:13 கூறுகிறது. இந்த வசனத்தில் உள்ள, "எதை”, "அதை” எனும் இரண்டு சொற்களையும் கோடிட்டுக் கொள்ளுங்கள். குறிப்பாக இருங்கள். "கர்த்தாவே, உம்முடைய ஆசீர்வாதம் எமக்குத் தேவை” என பொதுவாக ஜெபிக்க வேண்டாம். என்ன ஆசீர்வாதம் உமக்குத் தேவையென குறிப்பாகக் கூறும்.
தன்னிடம் பசியோடு வந்து காத்திருக்கும் சில நண்பர்களை போஷிப்பதற்காக மற்றய ஒரு நண்பனிடம் சென்று அப்பத்திற்காக மன்றாடிய ஒரு மனிதனின் கதை லூக்கா 11ம் அதிகாரத்தில் உள்ளது. அவன் 6வது வசனத்தில், "சிநேகிதனே, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தா” எனக் கேட்டான். "சிநேகிதனே, என் வீட்டில் பசியோடு சிலர் இருக்கின்றனர், எனக்குக் கொஞ்சம் அப்பம் தேவை” என அவன் கூறவில்லை. எத்தனை அப்பங்கள் தனக்குத் தேவை என்பதை அவன் குறிப்பாகக் கூறினான். "மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தா” என்றான்.
"அன்பான கர்த்தாவே, எம்முடைய எல்லாப் பாவங்களையும் மன்னியும்” என மக்கள் ஜெபிப்பதை நான் கேட்டுள்ளேன். அது ஜெபிப்பதற்கான ஒரு சோம்பல் வழியாகும். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” என 1யோவான் 1:9ல் உள்ள வாக்குறுதி கூறுகிறது. உங்கள் பாவங்களின் - பெயர் குறிப்பிட்டு அறிக்கை செய்யுங்கள். நீங்கள் அவற்றை ஒரு கொத்தாக ஒரே தடவையில் செய்யவில்லை; அவற்றை ஒரு கொத்தாக அறிக்கை செய்ய வேண்டாம்.
2 இராஜாக்கள் 6வது அதிகாரத்தில், அந்த மனிதன் கோடரியை இழந்தபோது, எலிசா அவனிடம், "எங்கே விழுந்தது?” எனக் கேட்டார். "…. அவன் அந்த இடத்தைக் காண்பித்தான்…” என வேதம் கூறுகிறது. "இந்த ஆற்றுக்குள் எங்கேயோ விழுந்துவிட்டது” என அவன் கூறவில்லை; அது எங்கே விழுந்தது என்று சரியாக குறிப்பிட்டுக் காட்டினான்.
குறிப்பாக இருக்க வேண்டும். உமக்குத் தேவையானதை கர்த்தரிடம் குறிப்பாகக் கூறும். கமரோன் V. தோம்ப்சன் என்பவர் எழுதிய ஜெபத்தின் முக்கியமான இரகசியங்கள் எனும் ஒரு சிறிய புத்தகம், வேதாகமத்திற்கு திரும்புக வெளியீட்டாளர்களினால் வெளியிடப்பட்டது. நான் வசித்த அத்லாந்தாவில் தான், கமரோன் தோம்ப்சனும் வசித்தார். அவர் இப்போது தேவனுடன் இருக்கச் சென்றுவிட்டார். அவரின் மனைவியும் மகளும் போரஸ் கில் பப்டிஸ்ற் சபைக்கு ஒரு இராத்திரியில் வந்தார்கள்; ஆராதனையின் பின்பு கமரோனையும் அவரின் ஜெப வாழ்க்கையையும் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கையில், அவரின் மனைவி அவர்களின் ஒரு மகளைப்பற்றிய ஒரு கதையினை எனக்குக் கூறினார்.
அந்தச் சிறுமி, அவள் விரும்புகிற ஒரு விளையாட்டு பொம்மையை ஒரு ஜன்னலில் கண்டுவிட்டாள். "அப்பா, அந்த பொம்மை என்ன விலை பெறும்” எனக் கேட்டாள்.
அவர் "$. 4.98” என்றார்.
"அது எத்தனை சதங்கள்?”
"நானூற்று தொண்ணூற்று எட்டு”.
பின்பு அவள் தனது தகப்பனிடம் தன்னுடன் சேர்ந்து, தேவன் 498 சதங்களை தரும்படிக்கு ஜெபிக்குமாறு கேட்டாள். அவ்வாறே அவர் ஜெபித்தார். சில நாட்களின் பின்னர் ஒரு பெண் தோம்ப்சனின் வீட்டின் முன் கதவைத் தட்டினார். "திருமதி. தோம்ப்சன் கதவைத் திறந்தார். ஒரு பெண் சில்லறைகளால் நிரப்பப்பட்ட ஜாடி ஒன்றை வைத்திருந்தார். அவர், திருமதி தோம்ப்சன் அவர்களே, நான் சில நாட்களாக இந்த ஜாடிக்குள் சில்லறைகளைப் போட்டுக்கொண்டு வந்துள்ளேன். இந்த வாரம் சில நாணயங்களைப் போட்டபோது இது நிறைந்து விட்டது, நான் இந்த ஜாடி நிறைந்த பணத்தினை என்ன செய்ய வேண்டும் என கர்த்தரிடம் கேட்டேன், உங்கள் மகளின் நினைவு எனக்கு வந்தது. நான் இதனை அவளுக்குக் கொடுக்கலாமா?” எனக் கேட்டார்.
அவர் மகளை அழைத்தார். அந்தப் பெண் நாணயங்களைக் கொடுத்தார். மகள் ஜாடியை வெறுமையாக்கி எண்ணுவதற்கு ஆரம்பித்தார். அந்த ஜாடியிலே எவ்வளவு நாணயங்கள் இருந்திருக்குமென நினைக்கிறீர்கள்? 495? இல்லை, இல்லை! 501? இல்லவே இல்லை. எவ்வளவு நாணயங்கள்? 498! சரியாக அந்த சிறுமி கேட்ட அளவு இருந்தது. அந்த சிறுமி, "கர்த்தாவே, $ 4.98 தாரும்” எனக் கேட்கவில்லை. அந்த சிறுமி, "கர்த்தாவே, 498 சதங்கள் தாரும்” என ஜெபித்தாள். தேவன் சரியாக அவள் கேட்டுக்கொண்ட 498 சதங்கள் கொடுத்தார்!
எமது சபையிலுள்ள ஒரு மனிதன் ஒரு ஞாயிறு பாடசாலை வகுப்பினருடன், வருவோரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும்படி ஜெபித்தார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை வந்தது. முன்னைய ஞாயிற்றுக்கிழமை அவ் வகுப்பிற்கு 12 பேர்கள் வந்திருந்தபடியால் அவர், 24 பேரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் பிள்ளைகள் வகுப்பிற்கு வந்து கொண்டிருந்தார்கள். 25, 30, 35, 40, 45, 50. சரியாக 50 பிள்ளைகள் வகுப்பறைக்குள் வந்தார்கள். அவர்கள் தங்களின் கதிரைகள் எல்லாவற்றையும் வெளியே வைத்துவிட்டு, நிற்க வேண்டி ஏற்பட்டது. அந்த ஆசிரியர் சங்கடப்பட்டார். "மாணவர்களே, என்ன நடந்தது என எனக்குத் தெரியாது! நாம் கடந்த வாரத்தில் தேவனிடம், வருவோரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும்படி ஜெபித்தோம். நான் 24 பேர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தேன்; 50 பேர்களை எதிர்பார்க்கவில்லை!” என தளம்பிய குரலில் கூறினார்.
ஒரு சிறிய மாணவன் வகுப்பறையின் கடைசிப் பகுதியில் இருந்து கையை உயர்த்திக் காண்பித்தான். "ஆம், மகனே என்ன? கூறுங்கள்” என்றார் அந்த ஆசிரியர்.
அந்த சிறியவன், "ஆசிரியரே, இது முழுவதும் எனது தவறுதான். கடந்த வாரம் நீங்களெல்லாரும் 24 பேருக்காக ஜெபித்தபோது, நான் 50 பேருக்காக ஜெபித்தேன்” என்றானாம்.
அந்த ஞாயிறு பாடசாலை ஆசிரியர் எனக்கு இந்தக் கதையைக் கூறியபோது, நான் உண்மையாகவே சத்தமிட்டேன்! போய் அந்தச் சிறுவனைக் கொண்டு வாருங்கள், இந்த சபையின் ஜெபக்கூட்டத்தை அவன் நடத்த அனுமதிப்போம்! எமது தேவைகளுக்காக அவனை ஜெபிக்க விடுவோம். அந்தப் பிள்ளை தனக்குத் தேவையானதைப் பெற்றுக் கொண்டது என நான் நினைத்தேன்.
இந்த விடயத்தின் உண்மையானது, நாமெல்லாரும் எமக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ள வேண்டும். எமது ஜெபத்திற்குப் பதிலளிக்க தேவன் விரும்புகிறார். நீங்கள் ஜெபிக்கும்போது குறிப்பாக இருக்க வேண்டும். உமக்குத் தேவையானது என்ன என்பதை தேவனிடம் சரியாகக் கூறும்.
"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும், ஏனென்றால் கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” என இயேசு வாக்களித்துள்ளார்.
நீங்கள் ஏதாவதொன்றிற்காக ஜெபித்துக் கொண்டிருந்தும் பெற்றுக்கொள்ளவில்லையா? அதனால் தளர்ந்து போனீர்களா? ஏன் நீங்கள் இந்த சாதாரண யோசனைகளைப் பின்பற்றக் கூடாது? மீண்டும் ஆரம்பியுங்கள், திரும்பவும் ஜெபியுங்கள், உங்களுக்குத் தேவையானதைத் தரும்வரைக்கும் அல்லது உங்கள் ஜெபத்தை மாற்றும் வரைக்கும் ஜெபித்துக்கொண்டே இருங்கள்!