வித்தியாசமே இல்லை - எல்லாரும் பாவம் செய்தவர்கள்

வித்தியாசமே இல்லை -

எல்லாரும் பாவம் செய்தவர்கள்

பாவமெனும் காரியத்தில் ஒழுக்கமானவருக்கும், குடிகாரருக்கும், கண்ணியமான பெண்ணுக்கும், விலைமாதுக்கும், நல்ல பிரஜைக்கும், சட்டவிரோதிக்கும், விசுவாசிக்கும், நாஸ்திகருக்கும் இடையே வித்தியாசம் இல்லை என தேவ வாக்கு நிரூபிக்கின்றது.

ஜோன் ஆர் ரைஸ் அவர்கள்

எல்லோரும் பாவம் செய்துள்ளனர்

"ஆனாலும் என்ன? அவர்களைப் பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை! தேவனைத் தேடுகிறவன் இல்லை! எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்பேனார்கள்! நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக் குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; அவர்கள் வாய் சபிப்பினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது; சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வ பயம் இல்லை, என்று எழுதியிருக்கிறதே. மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத் தீர்ப்பிற்கு ஏதுவானவர்கள் ஆகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறது என்று அறிந்திருக்கிறோம். இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவ நீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே. விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவம் செய்து, தேவமகிமையற்றவர்களாகி(னார்கள்)” - ரோமர் 3:9-23

"தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர்; விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப் போலவும், இந்த ஆயக்காரனைப் போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்" என்று பரிசேயன் ஒருவன் ஆலயத்திற்குள் வேண்டிக்கொள்வதற்குச் சென்ற போது கூறினான் (லூக்கா 18:11). முழு உலகமும் இதைப் போன்றுதான் கூறுகிறது! "நான் மற்ற மனுஷரைப் போல இல்லை!" மற்றவர்களிலும் பார்க்க நல்லவர்கள், மற்றவர்களிலும் இருந்து வித்தியாசமானவர்கள் என நாமெல்லாரும் சிந்திக்க விரும்புவோம். ஆனால், இதற்கெதிராக கடவுளின் வார்த்தை உறுதியாக கூறுவதென்னவெனில், நாம் மற்றவர்களிலும் பார்க்க நல்லவர்கள் அல்ல, நாம் மற்றவர்களில் இருந்து வித்தியாசமானவர்களும் அல்ல, "வித்தியாசமே இல்லை: எல்லாரும் பாவம்செய்து, தேவமகிமை அற்றவர்களானார்கள்."

வித்தியாசமே இல்லை! பாவம் எனும் காரியத்தில், சாதாரண நல்ல மனிதனுக்கும் கேவலமான குற்றவாளிக்கும் இடையே வித்தியாசமே இல்லை. கற்புள்ள ஒழுக்கமான பெண்ணுக்கும், தெருவிலே திரியும் விலைமகளுக்கும் இடையே பாவமெனும் விடயத்தில் வித்தியாசமே இல்லை! உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்றோ, ஏழை - பணக்காரன் என்றோ வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவம் செய்தவர்கள். விணாக பேசுகின்ற நாஸ்திகனுக்கும், சபை அங்கத்தவனுக்கும் இடையே வித்தியாசமே இல்லை, உண்மையில் இவர்கள் இருவருமே ஒரேமாதிரி பாவிகள் என கடவுள் கூறுகிறார். மனிதரிடையே மற்றைய காரியங்களிலே வித்தியாசங்கள் காணப்படலாம். வறுமையும் செல்வமும், படிப்பறிவின்மையும் கற்றுத் தேறியதும், இன்பம் தருவதும் வெறுப்பூட்டுவதும் - ஆனால் எல்லாரும் ஒரே விதத்தில் பாவிகள் தான். இரட்சிப்பும் இழப்பும் - சாதாரணமாக இரட்சிக்கப்பட்ட பாவிகளும் இழந்து போன பாவிகளும், மன்னிக்கப்பட்ட பாவிகளும் ஆக்கினைக்குட்படுத்தப்பட்ட பாவிகளும். ஆகவே கடவுளுடைய வார்த்தை இங்கே தெளிவாகக் கூறுகின்றது. வாசகரே, பாவமெனும் காரியத்தில் உமக்கும் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்திற்கும் இடையே வித்தியாசமே இல்லை. அவன் நரகத்திற்குப் போனான், நீரும் போவதற்கு தகுதியுடையவராக இருக்கிறீர், உமது பாவத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு, தண்டனைக்குரிய மன்னிப்பைப் பெற்று இரட்சிக்கப்படாவிட்டால் அங்கேதான் போவீர். உம்மைப் போல உள்ளும் புறமும் துப்பரவானவர்கள் என நினைத்துக்கொண்டிருந்த இலட்சக்கணக்கானோர் கொடிய வேதனையும் அக்கினியும் நிறைந்த நரகத்திலே இப்போது வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் நன்றாக வாழ்ந்தவர்கள், உண்மைத்துவமாய் இருந்தவர்கள், கூடியமட்டும் ஆலயத்திற்குப் போனவர்கள், முடிந்தமட்டும் ஜெபித்தவர்கள், அவர்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் சேவையையும் கொடுத்தவர்கள். அவர்கள் தங்கள் அயலவரை நேசித்தவர்கள். உம்மைப் போல அவர்கள் தங்கள் குடும்பத்துடன் அன்பாக இருந்தவர்கள்; அப்படியிருந்தும் அவர்கள் இன்று நரகத்தில், துன்மார்க்க பாவிகள் தாங்கள் விதைத்ததை அறுக்கிறார்கள். அவர்கள் பாவிகளாய் இருந்தவர்கள், அவர்கள் பாவம், அவர்களைத் தொடர்ந்து பிடித்துக்கொண்டது. "பாவத்தின் சம்பளம் மரணம்," என கடவுள் கூறுவதுடன் "பாவம் செய்கிற ஆத்துமா சாகும்" என்கிறார். ஆகவே அவர்கள் நரகத்தில் இருக்கிறார்கள். எனினும் நீரும் அவர்களைப் போலவே பாவியாகத்தான் இருக்கிறீர். "வித்தியாசமே இல்லை, எல்லாரும் பாவம் செய்தவர்கள்."

ஆம், இப்போது நரகத்திலே எரிந்து வேதனைப்படுபவர்களும், இனிமேல் அங்கே போகப்போகிறவர்களும் உம்மைப்போன்ற பாவிகளே! இதில் வித்தியாசமே இல்லை. இவர்கள் உம்மைப்போன்றே கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள். உம்மைப்போன்று இலட்சக்கணக்கானோர் பப்டிஸம் எடுத்த போதிலும் நரகத்திற்கே சென்றுள்ளனர். நீர் செய்த பொருத்தனைகள் போன்று இலட்சக்கணக்கானோர் செய்த போதிலும் அவர்கள் நரகத்தில் இருக்கிறார்கள். உம்மோடே கூட உமது இடத்தில் வாழ்ந்தவர்கள் நரகத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் பரிகசித்து வணங்காக் கழுத்துள்ளவர்களாக, கடின இருதயமுள்ளவர்களாக, பிடிவாதமான காரியங்களை பிரமாணமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். ஆம், இலட்சக்கணக்கான இரகசிய வேதப்புரட்டர்களின் அங்கத்தவர்களும், சில சபைகளும் கூட இப்போது நரகத்தில் இருக்கிறார்கள். இவர்கள் உம்மைப்போன்றே பாவிகளாய் இருந்தவர்கள். வித்தியாசமே இல்லை, எல்லாரும் பாவம் செய்து தேவமகிமை அற்றவர்கள் ஆனார்கள் என்று கடவுள் கூறுகிறார். நான் இந்த செய்தியைக் கூறிமுடிக்க முன்பு, சந்தேகத்திற்கிடமின்றி, கடவுளின் சித்தப்படி, நான் நிரூபிப்பேன். அது என்னவெனில், வேதாகமத்தின்படி நீர் ஒரு பயங்கரமான பாவி, ஆபத்தான நரகத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றீர். நீர் ஒரு பாவி என்பதை உணர்ந்து, உமது பாவங்களை கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவிக்கொள்ளாவிட்டால் உமது நிலமை மிகவும் கேவலமானதும் பரிதாபமானதுமாக இருக்கும்.

நாம் ஏன் பாவத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும்

வேதாகமத்தின் மற்றைய பெரிய உபதேசங்களை விளங்கிக் கொள்வதற்கு, பாவத்தின் வேதாகம உபதேசமானது ஒரு அத்திவார கற்பித்தலாக நிச்சயமாக அத்தியாவசியமானது. "கிறிஸ்தவ விஞ்ஞானம்" என அழைக்கப்படும் போலி நிறுவனம் பாவத்தின் உண்மையான விளைவினை மறுதலிக்கின்றது. ஆனால் அந்த மறுதலிப்பானது விஞ்ஞான ரீதியானதோ அல்லது கிறிஸ்தவ ரீதியானதோ அல்ல. பாவமானது விஞ்ஞான ரீதியானது, எல்லா இடத்திலும் இருக்கக் கூடியது, பயங்கரமானது, அழிவு நிறைந்தது நரகத்திற்கேதுவானது. இது மூடனால் மட்டும் மறுதலிக்கக் கூடியது. வேதாகமம் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை, "மூடர் பாவத்தைக் குறித்து பரியாசம் பண்ணுகிறார்கள்" (நீதி 14:9). கிறிஸ்துவின் சுவிசேஷமானது சாதாரணமாக இதுதான்: "கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து...... பின்பு உயிர்த்தெழுந்தார்" (1கொரி 15:3); அத்துடன் "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திலே வந்தார்" (1தீமோ 1:15). எல்லாரும் பாவம் செய்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் கிறிஸ்தவமானது இருக்க முடியாது. "கிறிஸ்தவ விஞ்ஞானம்” என அழைக்கப்படுபவர்கள் இரண்டும் கெட்டான் நிலையாக, கிறிஸ்தவர்களும் அல்லாமல், விஞ்ஞானிகளும் அல்லாமல் இருக்கின்றனர். பாவத்தின் உண்மை நிலையை ஏற்க விருப்பம் இல்லை, "கிறிஸ்தவ விஞ்ஞானம்" பாவ நிவாரணம் செய்யும் இரத்தத்தை தேவையற்றதாகக் கண்டு அதனை மறுதலிக்கிறது. இது, பாவம் என்பது உண்மை அல்ல என்று கூறுகின்றபோது, நியாயத்தீர்ப்பும் நரகமும் உண்மையானதல்ல என்றும் சிந்திக்கின்றது. பலதார மணம் செய்த பெண் ஒருத்தி இயேசு கிறிஸ்துவோடு தன்னை சமநிலைப்படுத்தி "வேதாகமத்தின் திறவுகோல்" என்ற மூடத்தனமான புத்தகத்தை உருவாக்கி, அதுவே இறுதியாக தெய்வீக வெளிப்பாடு என்று சொல்வது ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது! மனிதர்கள் பாவிகள் அல்லவென்றால் ஏன் இயேசு சிலுவையில் மரிக்க வேண்டும்? மனிதர்கள் பாவிகள் அல்லவென்றால், ஏன் யாராவது பாவிகள் இரட்சிக்கப்பட வேண்டும் என முயற்சிகள் எடுக்க வேண்டும்? அவர்கள் சாதாரணமாக சின்னப்பாவிகளாக மட்டும் இருந்து, தங்களைத் திருத்திக்கொண்டு, தங்கள் சொந்தப் பாவத்திற்கு தாங்களே பரிகாரம் கண்டுகொள்ள முடியுமாயிருந்தால், ஏன் இயேசு கல்வாரியிலே பயங்கரமான வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்? வேதாகமம் போதிக்கிறபடி பாவிகள் வேதனையளிக்கக் கூடிய தாங்கமுடியாத இடத்திற்குரியவர்களாக இல்லாதிருந்தால், கிறிஸ்துவின் மரணமானது மடமையிலும் மடத்தனமானதும், கேவலமானதும், அர்த்தமற்றதாயும் இருந்திருக்கும்.

பிழையான மதங்களில் இருந்தும் பாதுகாப்பதற்காக வேதாகமம் பாவத்தைக் குறித்துப் போதிக்கின்றது. பாவத்தைக் குறித்ததான பிரச்சினைக்குக் கிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே விடையைக் கொண்டுவர முடியும். பயங்கரமான பாவம் நிறைந்த மானிட இருதயத்தையும், "வித்தியாசமே இல்லை; எல்லாரும் பாவஞ்செய்தவர்கள்" என்கின்ற உண்மையையும் கற்றுக்கொண்ட இருதயத்தை - சுய நீதியும், சமயச் சடங்குகளும், மற்றய சடங்குகளும், மானிட குருமார்களின் கைவேலையும், மற்றய போலித்தனமான பரிகாரங்களும் ஒருபோதும் திருப்திப்படுத்தவே மாட்டாது. இதனாலேயே தான் "உலகத்தார் யாவரும் தேவனுக்கு முன்பாக குற்றமுள்ளவர்கள் ஆனார்கள்" (ரோமர் 3:19) என தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் ரோமர் மூன்றாம் அதிகாரத்தில் கூறியுள்ளார். "பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தால் வருகிறது" என வசனம் 20 கூறுகிறது. மனிதர்கள் பாவிகள் என்பதைக் காட்டவும், சுயநீதியினால் பெருமை பாராட்டுகிறவர்களின் வாயை அடைக்கவும் தாங்கள் பாவிகள் அல்லவென காரணம் காட்டி சாட்டுப்போக்கு கூறுபவர்கள் யாவரும் தங்களை கடவுளுக்கு முன்பாக குற்றவாளிகளும், ஆக்கினைக்குட்படுத்தப்பட்ட பாவிகளுமாகக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே பவுல் நியாயப்பிரமாணத்தை பிரசங்கித்தார்!

சில பிரசங்கிமார்கள் எந்நாளும் கடவுளின் அன்பைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பது குறித்தும் பிரசங்கிக்கிறார்கள். இவைகள் அற்புதமான விஷயங்கள் தான். ஆனாலும் வேதாகமம் "தேவன் அன்பாக இருக்கிறார்" எனக் கூறுவதுடன், "நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறாரே" (எபிரெயர் 12:29) என்றும், அவர் நாள்தோறும் துன்மார்க்கரின் மேல் கோபங்கொள்ளுகிற தேவன் (சங்கீதம் 7:11) என்றும் கூறுகிறது. மோட்சத்தைப் பற்றிக் கூறுகின்ற அதே வேதாகமம் நரகத்தைப் பற்றியும் கூறுகின்றது; நாம் நரகத்தைப்பற்றிப் போதிக்காவிட்டால், பாவிகள் பரலோகத்தைத் தேட காரணம் கிடையாது. நாம் பாவத்தைக் குறித்து பிரசங்கித்து, சிந்தனையையும், இருதயத்தையும், மனச்சாட்சியையும் குற்றவாளிகளென உணர்வடையச் செய்யாவிட்டால், மனிதர்கள் பாவத்தை விட்டு மனந்திரும்பி, பாவத்திலிருந்து மீட்கும் இரட்சகராக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாவத்தைக் குறித்து மனிதர்கள் மிகவும் ஆழமாகக் குற்ற உணர்வடைந்து மனந்திரும்புகின்ற போது, பரலோகத்தில் பெரும் மகிழ்ச்சி உருவாகின்றது. பாவத்தைக் குறித்து குற்ற உணர்வடையாத மக்கள் பாவத்தை அறிக்கை செய்யவோ, மறந்து விடவோ, இழந்து போனதை மறுபடியும் பெற்றுக்கொள்ளவோ மனந்திரும்பவோ மாட்டார்கள்.

"பகுத்து ஆராய்தல்" ரோமர் 3:9-23

இச் செய்தியின் முக்கிய பொருளான ரோமர் 3:9 ம் வசனம் தொடக்கம் 23ம் வசனம் வரை கவனித்துப் பார்ப்பதன் மூலம் உலகத்தார் யாவரும் தன்மையிலும், வாழ்விலும் எவ்வளவு பாவம் நிறைந்தவர்களாகவும் துன்மார்க்கராகவும் காணப்படுகிறார்கள் என்பதை நீர் கண்டு கொள்ளுவீர்.

முதலாவது தெளிவான கூற்று என்னவென்றால், முழு யூதர்களும் முழுப் புறஜாதிகளும் ஒரேவிதத்தில் பாவிகள்தான். அதில் வித்தியாசமே இல்லை. "ஆனாலும் என்ன? அவர்களைப் பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா?" புறஜாதிகளைப் பார்க்கிலும் யூதர்கள் திறமானவர்களா? ஒரு ஜாதி, ஒரு வர்க்கம் மற்றய ஒன்றிலும் பார்க்க திறமானதா? இல்லை. "எவ்வளவேனும் விசேஷித்தவர்கள் அல்ல" பவுலின் பேனாவிற்கூடாக கடவுளின் பதிலானது,யூதர்கள் புறஜாதிகள் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்கள் என்பதை முன்பு உண்மையென காட்டினோமே". யூதர்கள் அல்லாத மற்றய யாவரும் புறஜாதிகளே. இரண்டு வகுப்பினர் மட்டுமே. யூதர்களும்,யூதர்கள் அல்லாதவர்களுமே. வாசகரே, நீர் இந்த இரண்டில் ஒன்றில் தான் இருக்க வேண்டும். நீர் இதில் எதைச் சேரந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, நீர் ஒரு பாவியே. வித்தியாசமே இல்லை - எல்லாரும் பாவம் செய்தவர்களே!

வசனம் 10 - 18 வரையிலானது, 9ம் வசனத்தை சாதாரணமாக திருப்பிக் கூறியும், அழுத்தி ஆணித்தரமாகவும் கூறுகின்றது. எல்லாரும் ஒரேவிதத்தில் பாவத்திற்குட்பட்டிருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டுக் காட்டிய பின்பு முழு மானிட வர்க்கத்திற்கும் எதிராக பதினான்கு குற்றச்சாட்டுகளை தேவன் கொண்டுவருகிறார். வசன எண்களைக் குறித்து அதிகம் சிந்திக்காமல் கடவுளின் பதிவுப் பட்டியலுக்கு அக்கறை செலுத்தி்ப பார்ப்பீர்களேயானால், ஏழு தடவையும் அதன்பின்பு ஏழு தடவையுமாக கடவுள் மனிதரை இயற்கையாகவே துன்மார்க்கமும், கடவுள் நம்பிக்கை அற்றதையும், சபிக்கப்பட்டதாகவும் காட்டுவதைக் காண்பீர்கள். நீதிமான் ஒருவனாகிலும் இல்லை, நன்மை செய்கிறவன் முழு மானிட ஜாதியிலும் ஒருவனாகிலும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை! (இயேசு கிறிஸ்துவைத் தவிர, ஆம், அவர் சாதாரண இயற்கைப் பிறப்பினால் பிறந்தவரல்ல. மானிட தகப்பன் இன்றி இயற்கைக்கு மேம்பட்ட நிலையில் ஒரு கன்னியின் கர்ப்பத்தில் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்து பிறந்தவர்.)

1. "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" (வசனம் 10). கடவுளின் இதயத்தில், பார்வையில் ஒரு நீதிமானாகிலும் இல்லை!

2. "உணர்வுள்ளவன் இல்லை" (வசனம் 11). கடவுளுடைய காரியங்களை விளங்கிக்கொள்ள கூடியதான தன்மையில், உணர்வுள்ளவன் ஒருவன் கூட இல்லை. சரீரப்பிரகாரமான சிந்தனையின் துர் எண்ணம் கடவுளுக்கு விரோதமானது. "ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான்; அவைகள் அவனுக்கு பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால் அவைகளை அறியவும் மாட்டான்" (1கொரி 2:14).

3. "தேவனைத் தேடுகிறவன் இல்லை" (வசனம் 11). மனிதன் நீதியானவன் அல்ல, கடவுளையும் அவரின் வழியையும் விளங்கிக் கொள்ளுகிறவனும் அல்ல. இதிலும் மிகக் கேவலமானது, கடவுளைத் தேடாமலும், கடவுளின் நன்மையைக் காண முயற்சிக்காமலும் இருப்பதேயாகும். சுபாவத்திலே மனிதன் பாவியாக இருப்பது மட்டுமல்லாமல், தெரிவு சுதந்திரத்தினாலும் பாவியாகவே இருக்கிறான். இதுவே மனிதனைக் குறித்த கேவலமான நிலையாகும்!

4. "எல்லாரும் வழிதப்பிப் போனார்கள்" (வசனம் 12). இங்கே நாம் காண்பது - பாவி கடவுளைத் தேடாமல் இருப்பவன் மட்டுமல்லாமல் வேண்டுமென்றே கடவுளை விட்டுத் தூரமாகப் போய் உள்ளான். மக்கள் தவறுதலாகவோ, வழிநடத்தப்பட்டோ, தற்செயலாக இடம்மாறியோ போகாமல், தங்கள் சொந்த தெரிவினாலேயே தூரம்போயுள்ளார்கள். சாத்தான் நம்மைத் தூண்டிவிடுகின்றான், ஆனால் எமக்குள்ளிருக்கிற துன்மார்க்க தன்மையானது, சந்தோஷமாக செவிகொடுத்து ஒத்துழைத்து சாத்தானின் முயற்சியோடு நம்மை பாவத்தினுள் விழுத்துகிறது. பாவம் இருதயத்தில் இருந்தே வருகிறது, வெளியிலிருந்து அல்ல.

5. "எல்லாரும் ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்" (வசனம் 12). கடவுளுக்கு நன்மை அளிக்க முடியாத அளவிற்கு மனிதன் அதிக தூரம் சென்று விட்டான். மனிதர்கள் சுபாவத்தில் இவ்வாறு பாவிகளாக இருக்கும் வரையில் கடவுள் மனிதனுடன் வாசம் பண்ணவோ மனிதன் தனது வழியை கடவுளுக்கு நேராக வைத்துக் கொள்ளவோ ஒருபோதும் முடியாது. ஆகவே, எந்தவொரு வழியிலும் மனிதனோடு செயற்படுவதாயின் அது கடவுளின் அளவிட முடியாத கருணையின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். மனிதனுக்கு வழக்காடி பெற்றுக்கொள்ள ஒரு வழக்கறிஞர் இல்லை. இருந்தாலும் ஆக்கினையையும் இகழ்ச்சியையுமே பெற்றுத்தர முடியும். ஆகவே ஒரு கிறிஸ்தவ ஊழியன் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது, தன்னில் அன்புகூரும் தனது இரட்சகருக்காக சாவதாக இருந்தால் கூட 'நான் அப்பிரயோஜனமான ஊழியக்காரன்' என்று கூறவேண்டும் (லூக்கா 17:10).

6. "நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை" (வசனம் 12). இப்படியாக மனிதர்கள் சிந்திப்பதில்லை. மனிதர்கள் சில சமயங்களில் நன்மை செய்கிறார்கள் என இரட்சிக்கப்படாதவர்களும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களும் கூட நினைக்கிறார்கள். ஆனால் கடவுள் கூறுவது, "இல்லை, ஒருவனாகிலும் இல்லை!" எல்லா மனிதர்களுடைய நன்மைகளும் போலியான நன்மைகள். அதாவது, சாத்தானின் தூதர்கள் ஒளியின் தூதனுடைய வேஷத்தில் வெளிப்படுவது போன்றது. மனிதர்கள் அதிகமாக பரிசேயர்களைப் போன்றவர்கள், "மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள், உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்" (மத்தேயு 23:28) என்று இயேசு கூறினார். கடவுளுடைய பார்வையில் "துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே" (நீதிமொழிகள் 21:4). துன்மார்க்கரின் ஜெபமும் கூட அருவருப்பானது (நீதிமொழிகள் 28:9). "மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது" (யோவான் 6:63)

7. "அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக் குழி" (வசனம் 13). திறக்கப்பட்ட சவக்குழியின் உள்ளே, அழுக்குகளும் அழுகிக்கொண்டிருக்கும் உடல்களிலிருந்து துர்நாற்றமும் வீசிக்கொண்டிருக்கும். அவ்வாறே மானிட இருதயத்தின் துன்மார்க்க தன்மையானது தொண்டையின் ஊடாக வெளியேறுகிறது.

8. "தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள்" (வசனம் 13). பொய் சொல்வதானது மானிட வர்க்கத்தின் நாவிற்கு இயற்கையாகவே வந்துவிடுகின்றது. பிள்ளைகள் பேசத் தொடங்குகின்றபோதே பொய் கூற ஆரம்பிக்கின்றனர். குழந்தைகளின் இருதயத்தில் கூட வஞ்சனை இருக்கிறது.

9. "அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது" (வசனம் 13). விஷம் நிறைந்த பாம்பு (விரியன்பாம்பு) கடிப்பதைப்போல இருதயத்தை வேதனைப்படுத்தி புண்படுத்துவது மானிட நாவின் இயற்கையாக இருக்கிறது. விஷமானது இரண்டிற்கும் இயற்கையாகவும் சுபாவமாகவும் உள்ளது. "நாவை அடக்க ஒருவனாலும் கூடாது, அது அடங்காத பொல்லாங்கு உள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாய் இருக்கிறது" (யாக்கோபு 3:8). நாவும் நெருப்புத் தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழு சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தை கொளுத்தி விடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! (யாக்கோபு 3:6).

10. "அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது" ( வசனம் 14) "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்" (மத்தேயு 12:34). "வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும்" (மத்தேயு 15:18) என இயேசு கூறினார். இந்த பதினான்கு குற்றச்சாட்டுகளிலும் நான்கு காரியங்கள் பேசுவதோடு தொடர்புடைய அவயவங்களைக் குறிக்கிறது. "தொண்டை", "நாக்கு", "உதடு", "வாய்" என்பன. மனிதனின் துன்மார்க்க நிலை வெளிப்படுகின்றது! சபித்தலும் தூஷணமும், கசப்புணர்வும், விரோதமும் இயற்கையாகவே கறைபடுத்தப்பட்ட இருதயத்தில் இருந்து வருகிறது!

11. "அவர்கள் கால்கள் இரத்தஞ் சிந்துகிறதற்கு தீவிரிக்கிறது" (வசனம் 15). மனித வர்க்கம் கொலைகார சந்ததி. காயின் தன் சகோதரனைக் கொலை செய்யும்போது சாதாரண ஒரு சுபாவ மனிதனாகவே இருந்தான். பிறந்து சி்ல வாரங்களுக்குள்ளான பிள்ளையாயினும் அதன் தலையை அசையாதபடிக்கு பிடிப்பீர்களானால், நீங்கள் பிடிப்பதிலிருந்து விடுபடும்படியாக கோபத்தி்ல் அலறுவதை காண்பீர்கள்! கோபம், வெறுப்பு, கொலை இவைகளை மனித இருதயம் தனது கனியைக் கொண்டுவருகின்றபோது ஒழுங்காகக் காணலாம். வாழ்ந்த, வாழ்கின்ற ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்துவை மட்டும் தவிர மற்றோரி்ன் "கால்கள் இரத்தம் சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது". இதுதான் சட்டவிரோத காரியங்களுக்கும், யுத்தங்களுக்கும் முதலாவது விளக்கமாகும்.

12. "நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது" (வசனம் 16). இது பரிணாம மாற்றம் அல்ல, இது வாரிசு உரிமை மாற்றம். இது மனிதன் மேல் நோக்கி உயர்ந்து செல்வதல்ல, கீழ்நோக்கி சீரழிந்து போவது. மனித அரசாங்கம், மனித கலாச்சாரம், நடத்தை, தப்பியோட முடியாத மனோபாவம் ஆகியவை நாசம், அழிவு என்பவற்றிற்கு நேராக உள்ளது. முழு உலகமும் அதிகமாக கடவுளிடம் இருந்து விலகிச் செல்கிறது. அரசாங்கத்தில் உறுதி இல்லை. வாழ்க்கையும் செல்வமும் பாதுகாப்பாக இல்லை. குடும்பத்தில் சந்தோஷம் இல்லை. ழுமு ஜாதியையும் அழிவானது இடையறாது தொடர்ந்து செல்கிறது.

13. "சமாதான வழியை அவர்கள் அறியாது இருக்கிறார்கள்" (வசனம் 17). மனிதன் தானாகவே சமாதானத்தின் இரகசியத்தை அறிந்து கொள்ளமாட்டான். "துன்மார்க்கருக்கு சமாதானம் இல்லை என்று என் தேவன் சொல்லுகிறார்" (ஏசாயா 57:21). நாட்டிலும் வீட்டிலும் இருக்கின்ற சகல அமைதியின்மைக்கும் பொறுப்பு இருதயத்தில் இருக்கும் பாவமே. மானிட தன்மையின் வழமையான பெறுபேறே யுத்தம். மனிதன் தனக்கு கடவுளிடமிருந்து சமாதானத்தைப் பெறாத வரையில் அவனிடம் சமாதானம் இருக்க மாட்டாது. மனிதர்கள் சமாதானத்தைப் பெற உண்மையிலே பாடுபடுகின்றனர். ஆனால் அவர்கள் பாவிகளாக இருக்குமட்டும் உலக சமாதானம் மாயையும் ஏமாற்றமுமேயாகும்.

14. "அவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வ பயம் இல்லை" (வசனம் 18). மனிதன் கடவுளுக்கு பயப்படாததினாலேயே தான், தனது துன்மார்க்க தன்மையில் படிப்படியாக வளர்ச்சியடைந்து சென்றுள்ளான். மனிதன் கடவுளின் விருப்பத்தை செய்வதில்லை, கடவுளை விளங்கிக் கொள்வதில்லை, கடவுளைத் தேடுவதில்லை, ஆயினும் கண்மூடித்தனமாக பாவத்திற்குள்ளும் நாசத்திற்குள்ளும் போகிறான். பாவத்தினதும் நாசத்தினதும் நடுவில் இருந்தும் கூட மனிதன் இன்னமும் கடவுளுக்கு பயப்படுவது கிடையாது, நியாயத்தீர்ப்பைக் குறித்து பரியாசம் பண்ணுகிறான், நரகத்தைக் குறித்தும் தெய்வ தண்டனை குறித்தும் அலட்சியம் செய்கிறான்! மனிதன் எவ்வளவு துன்மார்க்கனாக இருக்கிறான்!

முழு மானிட வர்க்கத்தின் மீதும், ஏழு தரமும் மீண்டும் ஏழு தரமுமான கடவுளுடைய குற்றச்சாட்டுக்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. "வித்தியாசமே இல்லை: எல்லாரும் பாவம் செய்து, தேவ மகிமை அற்றவர்களானார்கள்" என்று கடவுள் கூறியதை இது நிருபித்துக் காட்டுகிறது. திடக்கிடச் செய்யும் கோரமான வேதாகமப் பகுதியான ரோமர் 3:9-23 வரையிலான வசனங்கள் அதிகமான திகைக்கச் செய்யும் காரியங்களை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

1. ஆட்சேபனையே இல்லை; கடவுள் எல்லோரையும் ஒரேவிதமாகவே எண்ணுகிறார். "எல்லாரும்", "எல்லாரும்”, "எல்லாரும்” என்று மீண்டும் மீண்டும் அவர் கூறுகின்றார். எல்லாரும் பாவத்திற்குட்பட்டவர்கள், எல்லாரும் வழிதப்பிப் போனார்கள், எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்களானார்கள். அவ்வாறே, "ஒருவனும் இல்லை”, "ஒருவனும் இல்லை”, "ஒருவனும் இல்லை” என்கிறார்! நீதிமான் ஒருவனாகிலும் இல்லை, உணர்வுள்ளவன் இல்லை, தேவனைத் தேடுகிறவன் இல்லை, நன்மைசெய்கிறவன் இல்லை; என தேவன் எம்மைப் பார்த்து சத்தமிடுகிறார் (அழுகிறார்). "ஒருவனாகிலும் இல்லை!"

2. மீண்டும் மீண்டுமாக நிகழ்காலம் இப்பகுதியில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். கடவுள் இன்றைய நாளைக் குறித்தும், எமது இதயத்தைக் குறித்தும், இந்நேரத்திலே இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உம்மைக் குறித்தும் பேசுகின்றார். இப்போது யாவரும் பாவத்திற்குட்பட்டவர்கள். நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. இப்பகுதியி்ல் முழுவதுமாக நிகழ்காலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. "வித்தியாசமே இல்லை!"

3. கடவுளுடைய முடிவில், "எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை” (வசனம் 20). யாராயிருந்தாலும் கடவுளுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதினாலோ, நல்ல கருமங்களைச் செய்வதினாலோ கடவுளை அடைய, இரட்சிக்கப்பட, நரக தண்டனைக்கு தப்ப முடியும் என்பது பூரணமாக சாத்தியமற்றவை. மனிதன் சாதாரணமாக தன்னைத் தானே இரட்சிக்க முடியாது. தனது நற்செயல்களினாலே நீதிமானாக்கப்படுவதும் கிடையாது. ஒவ்வொரு மனிதனும், மனுஷியும், பிள்ளையும் சுபாவத்திலேயே குணப்படுத்த முடியாத அளவிற்கு துன்மார்க்கராக இருக்கின்றார்கள். ஒரே நீதிமானாகிய இயேசு கிறிஸ்துவின் பரிகாரம் செய்யும் இரத்தத்திற்கூடாக, கடவுளின் கருணையால் அன்றி ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது.

"எல்லாரும் பாவிகள்" என்பதை

வேதத்தின் மற்றய பகுதிகளும் நிரூபிக்கின்றன

அன்பான வாசகரே! இப் பகுதிகள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டவை, ஆகவே இவை வேறு அர்த்தம் கொள்ளக்கூடும் என சிந்திக்க வேண்டாம். முழு வேதாகமமும் இதன் நோக்கம் உடையதாகத் தான் காணப்படுகிறது; மீண்டும் மீண்டும் கடவுள் கூறுவது எல்லாரும் ஒரே மாதிரியான பாவிகளே, வித்தியாசமே இல்லை எல்லாரும் பாவம் செய்தவர்கள்.

தாவீது, பத்சேபாளிடத்தில் பாவத்திற்குட்பட்ட தனது துன்மார்க்கத் தனத்தை அறிக்கையிட்டு அழுகிறார் சங்கீதம் 51:5. "இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்”.

சாலமோன் இராஜா எருசலேம் தேவாலயத்தைக் கட்டி அர்ப்பணித்தபோது தேவ ஆவியால் ஏவப்பட்டு, ஜெபம்பண்ணிக் கூறியது, "பாவம் செய்யாத மனுஷன் இல்லையே” (1இராஜாக்கள் 8:46; 2நாளாகமம் 6:36).

ஏசாயா 53:6 கூறுகிறது, "நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்”. இங்கே மீண்டும், "எல்லாரும்!" "அவனவன்!” என்பதைக் காணலாம்.

இக் கேள்விக்கு பதிலளிக்கும் இயேசுவின் சொற்களைக் கவனியுங்கள். ஒருவன் ஓடிவந்து, "நல்ல போதகரே, நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டான். அதற்கு இயேசு; நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!" (மாற்கு10:17,18). "தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!"

எல்லாக் கிறிஸ்தவர்களும் பாவம் செய்கிறார்களா?

நாம் ஒருபோது பாவிகளாக இருந்தோம்; ஆனால் இப்போது இரட்சிக்கப்பட்டோம். பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டோம், இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்பார்கள். சிலர் தாம், "பிரதிஷ்டை" செய்யப்பட்டவர்கள் என்றும், "பரிசுத்தமானவர்கள்” என்றும் கூறிக்கொள்கின்றனர். ஒரு உண்மையான பிரதிஷ்டை அல்லது பரிசுத்தம் என்பது, தேவனுக்கென வேறாக பிரிக்கப்பட்டிருப்பது ஆகும்; ஆனால் இது பாவமில்லாத் தன்மையுடன் தொடர்புடையதல்ல. சிலர் பழைய பாவ சுபாவமானது மொத்தத்திலே "கிருபையின் இரண்டாவது கிரியை”யினால் நிர்மூலமாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். ஆனால் இப்படியாக எல்லா மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பாவஞ் செய்ய விரும்பாதிருக்கலாம், அவர்கள் தாங்கள் பாவஞ் செய்வதில்லை என நினைக்கலாம், ஆயினும் அவர்கள் பாவம் செய்கிறார்கள். நாங்கள் வாசித்த வேதவசனங்கள், "எல்லாரும்”, "எல்லாரும்”, "எல்லாரும்” என்று கூறுகிறது. எல்லாரும் பாவம் செய்துள்ளது மட்டுமல்லாமல், எல்லாரும் பாவம் செய்கிறார்கள். எல்லாரும் இப்போது பாவத்தி்ற்குட்பட்டவர்கள், பாவம் என்ற விடயத்தில் வித்தியாசமே இல்லை. அவ்வாறே வேதாகமம் கூறுகின்றபடியால் நாம் அதை விசுவாசிக்க வேண்டும்.

உண்மையில் வேதாகமத்தின் பரிசுத்தவான்கள் ஆழ்ந்த வேதனையுடன் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுள்ளனர். பவுல் கூறினார் (பரிசுத்த ஆவியே இதைக் கூறும்படி சொல்லி எழுத வைத்தார்) "நமக்கு தெரிந்திருக்கிறபடி நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்திற்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்திற்குரியவனாக இருக்கிறேன்” - ரோமர் 7:14

"எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புவதை செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்” - ரோமர் 7:15.

மீண்டும் அவர் தேவ ஆவியினாலே கூறுகையில்:

"ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது” - ரோமர் 7:19-20.

கடவுளுக்குள் நேர்மையான அநேக மற்றைய பரிசுத்தவான்கள் செய்தது போல பவுல் அழுகின்றார், "நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ் செய்கிறேன்” - ரோமர் 7:24,25.

கிறிஸ்துவின் இரண்டாவது வருகையிலே தான் முழுவதுமாக பாவத்தின் வல்லமையிலிருந்து விடுபடுவேன் என்பதற்காக, பவுல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கூடாக தேவனுக்கு நன்றி கூருகிறார்; ஆனால் இப்பொழுதோ "மனதினாலே தேவனுடைய பிரமாணத்திற்கும், மாம்சத்தினாலேயோ பாவப் பிரமாணத்திற்கும் ஊழியஞ்செய்கிறேன்” என்று திரும்ப கூறுகிறார். பவுல் இரட்சிக்கப்பட்டவர், அப்போஸ்தலனாக இருந்தவர், பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு இருந்தவர், சுவிசேஷத்திற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்து இருந்தவர், பரதீஸ் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டு, மனிதருக்கு ஒருபோதும் வெளிப்படுத்தப்படாதவை இவருக்கு வெளிப்படுத்தப்பட்டது; அப்படியிருந்தும், நான் மாம்சத்திலே இன்னும் பாவப் பிரமாணத்திற்கு ஊழியஞ்செய்கிறேன் என்று பவுல் துக்கப்படுகின்றார்! எளிமையான, அறிவில்லாத, முதிர்ச்சியடையாத கடவுளுடைய பிள்ளையே, நீ பவுலிலும் பார்க்க மேன்மையானவன் என்று நினைக்கிறாயா? ரோமர் 8 ஐ ரோமர் 7 இற்கு எதிராக வேதவாக்கை முரணாக்கி வைப்பது துன்மார்க்கமானது. பவுல் பரிசுத்தவானாக இருந்தும் தான் ஒரு பாவி என்று துக்கப்பட்டார்.

யோவான், அன்பான சீஷன், கிட்டத்தட்ட 100 வயதாக இருக்கும் போது முதலாம் யோவான் எனும் கடிதத்தை எழுதினார். இயேசுவின் மார்பிலே சாய்ந்திருந்து இளைப்பாறியவர், யோவான் தன்னை "இயேசுவில் அன்பாயிருந்த சீஷன்” என்று அழைக்கப்படுவதை விரும்பியவர். யோவானிடமே இரட்சகர் மரண வேதனையின் மத்தியிலும் தனது தாய் மரியாளை ஒப்புக் கொடுத்தவர், யோவான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தவர், இவர் புதிய ஏற்பாட்டிலும் 5 புத்தகங்களை எழுதியவர், இவரே கடைசி அப்போஸ்தலராக பூமியில் வாழ்ந்தவர். இவர் கூட ஒரு பாவியே! பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதுகின்ற போது, 1யோவான் 1:8இல்: "நமக்குப் பாவமில்லை என்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இராது” என்கிறார்.

யோவான் இப்படியான ஒரு அபிப்பிராயத்தைக் கூறுகிறார்: "இந்த வயதான இருதயத்தின் சிந்தனையிலே மீண்டும் பாவம் இல்லையென நான் சொல்வதாய் இருந்தால் என்னை நானே முட்டாளாக்கிக் கொள்கிறேன். நான் அறிந்தோ அறியாமலோ பாவம் இருக்கிறது. நான் இரட்சிக்கப்பட்டு எனது பாவங்கள் மன்னிக்கப்பட்ட போதிலும் நான் இன்னமும் பாவியே." பரலோகத்தைக் குறித்து யோவானுக்கு இருந்த ஒரே நம்பிக்கை கிறிஸ்து தனக்காக மரித்து தனது எல்லா பாவங்களுக்காகவும் செலுத்தினார் என்பதே. யாராயினும் இந்த ஒரே நம்பிக்கையை உடையவராக இருக்கலாம். உம்மிலே பாவம் இல்லை என நீர் கூறுவீராக இருந்தால், உம்மை நீரே ஏமாற்றி (வஞ்சித்து)க் கொள்கிறீர், உண்மை உமக்குள் இல்லை. மாயக்காரரைப் போல நமது தகுதிக்கு மேலாக நாம் சிந்திப்பதையிட்டு நாம் கவனமாக இருக்க வேண்டும். வாசகரே, பாவம் எனும் விடயத்தில், இப் பூமியில் வாழ்ந்த கேவலமான பாவிக்கும் உமக்கும் வித்தியாசமே இல்லை. இவ்வாறுதான் கடவுளுடைய வார்த்தை தொடக்கம் தொடங்கி முடிவு வரை எமக்குப் போதிக்கிறது.

இப் போதனைக்கு முரண்பாடாக இன்னொரு வேதவசனம் இருப்பதாக நீர் சிந்திப்பீராக இருந்தால், நீர் அவற்றை பிழையாக விளங்கிக்கொண்டுள்ளீர். எல்லா வேதவாக்கியங்களும் தேவ ஆவியினால் அருளப்பட்டுள்ளது. கெளரவமாக ஏற்றுக் கொண்டு, சரியாக விளங்கிக் கொள்ளும்போது வேதாகமமானது ஒருபோதும் முரண்பட்டதாகக் காணப்படமாட்டாது. கடவுளுடைய ஒவ்வொரு பிள்ளைக்கும், பாவஞ்செய்யாத தெய்வீக தன்மையில் பங்குண்டு. எமக்குள்ளே கடவுள் புதிய சுபாவத்தை உருவாக்குகையில், நாம் கடவுளைப் பிரியப்படுத்த விரும்பி, பாவத்தை வெறுப்போமாக இருந்தால் நமது இருதயத்திலே அவர் தனது தெய்வீக தன்மையை வைப்பார். நாம் இந்த சரீரத்தில் இருக்கும் வரை, அதாவது, எமது இந்த அற்ப சரீரத்தை தனது மகிமைக்கு ஏற்ற சரீரமாக இயேசு வந்து மாற்றும் வரை, அல்லது நாம் சாகும் வரை பாவிகளாகவே இருப்போம். பாவமெனும் விடயத்தில் வித்தியாசமே இல்லை என கடவுள் கூறுகிறார். எல்லாரும் பாவிகளே!

நாம் பாவிகளென்பதை பெலவீனம், வியாதி,

சரீர மாற்றம்,மரணம் என்பன நிரூபிக்கின்றன

இங்கே மேலதிக ஆதாரங்கள் உள. கிறிஸ்தவன் வயதாகும் போது, மூக்குக் கண்ணாடிகளும், மொட்டைத் தலைகளும் அல்லது நரை முடியும், மறதியும், நடையில் தள்ளாட்டமும், நலக் குறைவும் பாவம் இன்னமும் சரீரத்தி்ல் இருக்கிறதென்பதை திட்டமாக நிரூபிக்கின்றன. இவை இயேசு தனது வருகையை தாமதிப்பாராக இருந்தால் பாவத்தின் இயல்புக் கனியான மரணத்தைக் கொண்டுவரும். வியாதி, நோய், பலவீனம் போன்றவை பாவத்தின் விளைவும் அடையாளமுமாகும். எல்லாரும் பாவத்திற்குட்பட்டுள்ளது போல நிச்சயமாக எல்லாரும் பூரணமற்றதும், தோல்வியுமுடைய மானிட சரீரமுடையவர்களாய் இருக்கிறோம்.

இதனை வாசிக்கின்ற ஒருவர் தான் பாவி அல்ல என்பதை வற்புறுத்துவாராக இருந்தால், அது அவர் மா பாவியாயிருப்பதனால் ஆவிக்குரிய உண்மையில் குருடாக்கப்பட்டுள்ளதை நிரூபிக்கும். எரேமியா 17:9 கூறுகிறதாவது, "எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாய் இருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”. நீர் உமது சொந்த இருதயத்தையே அறியமாட்டீர். மாம்ச சுபாவத்தில் இயற்கையாகவே குடிகொண்டுள்ள துன்மார்க்க தன்மையை நம்மில் யாரும் அறிய முடியாது. இலட்சக் கணக்கானோர் பயங்கரமான சில பாவங்களை செய்து விட்டு, நாம் இவ்வளவு துன்மார்க்கமானதைச் செய்துள்ளோமா என்று தம்மிலே ஆச்சரியப்பட்டுள்ளனர். நீர் இதை ஏற்றுக் கொள்கிறீரோ இல்லையோ, நீர் இதைக் காண்கிறீரோ இல்லையோ, அன்பான வாசகரே நீரும் ஒரு பாவிதான். நீர் ஒன்றில் ஆக்கினைத் தீர்ப்பளிக்கப்பட்ட பாவியாக அல்லது மன்னிக்கப்பட்ட பாவியாக இருக்கிறீர். நீர் உமது மறைத்து, அறிக்கை செய்யாத பாவங்களையுடைய பாவியாக இருக்கலாம், அல்லது கண்ணீரோடு மனம் வருந்தி அவற்றை அறிக்கை செய்திருக்கலாம்.

நீர் பத்துக் கற்பனைகளையோ, தங்க நீதியையோ கைக்கொள்வதில்லை:

ஒவ்வொரு பிரமாணத்தின்படியும் மனிதர்கள் பாவிகளாக இருக்கின்றனர்

"நல்லது சகோதரன் ரைஸ், நான் ஒரு பூரணமானவன் அல்ல என்பது எனக்குத் தெரியும், ஆயினும் நான் பத்துக் கற்பனைகளின்படி வாழ உண்மையிலே முயற்சி செய்து, அதன்படி வாழ்வேனென நம்புகிறேன்” என்பார்கள். "நான் முயற்சித்து” என்று ஏன் கூறினீர்கள்? நல்லது என்று ஆரம்பிக்கின்ற போதே நீர் வெற்றியடையவில்லை என்பது உமக்குத் தெரியும்! நீர் பத்துக் கற்பனைகளைக் கைக்கொள்ளவில்லை. அதேபோல் மற்ற ஒருவராகிலும் இயேசு கிறிஸ்துவைத் தவிர கற்பனைகளைக் கைக் கொண்டதில்லை.

தன் இளம் பிராயம் முதற்கொண்டு கற்பனைகளை நான் கைக்கொள்கின்றேன் என்று ஒரு வாலிபன் இயேசுவுக்குச் சொன்னான். ஆனால் இயேசு அவனுக்கு "நீ போய் உன்னிடம் இருப்பவற்றை விற்று, தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார். அவன் துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். அவனுக்கு அதிக செல்வமிருந்தது. அவை அவனுக்கு கடவுளாயிருந்தது. அவன் முதலாவது கற்பனையைக் கூடக் கைக்கொள்ளவில்லை, "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.” அவன் தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் தேவனிடத்தில் அன்பு கூரவில்லை. தன்னைப் போல தன் அயலானிடத்தில் அன்பு வைக்கவில்லை. நீரும் அப்படித்தான்!

நான் ஒருபோதும் கொலை செய்யவில்லை என்று நீர் கூறலாம். அதனால் கடவுளின் பதில், "தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்” (யோவான் 3:15). உமது இருதயத்தில் வெறுப்பும், பொறாமையும், விரோதமும், மன்னிக்க முடியாத தன்மையும் இருந்ததானால் நீர் கடவுளுடைய பார்வையில் ஒரு கொலைகாரனைப் போல் உள்ளீர். நீர் ஒருபோதும் விபசாரம் செய்யவில்லை என நினைக்கின்றீரா? அப்படியாயின் இயேசு கூறியதை ஞாபகப்படுத்திப் பாரும், "ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரம் செய்தாயிற்று” (மத்தேயு 5:28ஐ பாரும்). இருதயங்களைக் காண்கின்ற தேவனுக்கு முன்பாக நீர் குற்றமுடையவராக இருக்கிறீர். நீர் களவுகூட எடுத்திருக்கிறீர். கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய தசமபாகம் காணிக்கையை கொடாததினாலோ, வேலை செய்யாமல் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டதினாலோ, உம்முடையதல்லாததை அபகரித்துக் கொண்டதாலோ கற்பனையை மீறியுள்ளீர். நீர் கடவுளின் எல்லாக் கற்பனையையும் மீறி உள்ளீர்.

நீர் முட்டாள்த்தனமாக எல்லாக் கற்பனையையும் மீறாமல் இருந்தாலும், கடவுளுடைய பார்வையில் குற்றம் உடையவராகவும், கற்பனையை மீறியவராகவுமே காணப்படுகிறீர். நீர் ஒரு கற்பனையை மீறி இருந்தாலும் கடவுளுடைய தெளிவான கூற்றின்படி, எல்லாக் கற்பனையையும் மீறியதற்கான குற்றம் உம்மேல் இருக்கிறது. "எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான்" (யாக்கோபு 2:10). இது உம்மை கடவுளுடைய பார்வையில் கொலை, விபசாரம், விக்கிரகாராதனைக் குற்றவாளியாக நிரூபிக்கிறது. அடங்காத்தன்மையுடைய தீய பாவிக்கும் உமக்கும் இடையே உண்மையில் வித்தியாசமே இல்லை! நீர் ஒருமுறை பாவம் செய்தால், முழுப் பிரமாணத்தையும் மீறியதற்கான குற்றமுடையவராகிறீர்!

உம்மைப் போல உமது பிறனை நீர் நேசிப்பதில்லை. பிறன் உமக்கு என்னத்தை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீரோ அதையே பிறனுக்குச் செய் என்கிற தங்க நீதியை நீர் கைக் கொள்வதில்லை. ஒவ்வொரு நாளும் நீர் சாப்பிடுவதுபோன்று சாப்பிடாதவர்களும், உம்மிடம் இருக்கும் வீடு போன்ற வீடு ஒன்றில் உறங்காதவர்களும், உம்மிடம் இருக்கின்றது போன்ற வாகனம் இல்லாதவர்கள் இருக்கிறார்கள். நீர் உமது அயலானை நேசிப்பவராக இருக்கலாம். ஆனால் கடவுள் கட்டளையிட்டுள்ள பிரகாரமாக அல்ல, இதற்குக் குறைவாக இருப்பதெல்லாம் இங்கே பாவம் தான்.

எனக்கு வழமையாக அதிகமானோர் கூறுவது போல, "நல்லது, என்னால் முடிந்தளவு எனது திறமையை செய்கிறேன்” என்று நீரும் கூறலாம். இருந்தாலும் அதுவும் உண்மையல்ல. நீர் செய்ய வேண்டும் என அறிந்தவற்றை நீர் செய்வதில்லை. நீர் மறுநாள் வரை கோபமாக இருந்தபோது நல்லது எது என்று உமக்குத் தெரியாதா? வேதாகமத்தை வாசிக்கவும் ஜெபிக்கவும் அசட்டையாக இருந்தபோது, உமது திறமையைச் செய்தீரா? கொடுப்பதிலும் அன்பு செய்வதிலும் உம்மால் முடிந்த திறமையைச் செய்துள்ளீரா? நீர் நேர்மையான ஒருவராக இருப்பீரானால், நீர் உமது திறமையைச் செய்த போதிலும் நான் இன்னமும் என்னால் முடிந்தளவு திறமையைச் செய்யவில்லை என்பீர்.

"வித்தியாசமே இல்லை, எல்லாரும் பாவம் செய்து தேவமகிமை அற்றவர்களானார்கள்” எனும் தேவனுடைய வார்த்தையிலுள்ள உண்மையை உலக நியமங்களின்படி நாம் காணலாம்.

மனிதனுடைய பாவத்தின் மற்றைய சாட்சிகள்:

யுத்தம், தீயசெயல், வறுமை, மனச்சாட்சி, வியாதி மற்றும் மரணம்

பரந்துபட்ட பாவத்தின் அழிவுகளைப்பற்றி வேதாகமத்தில் வலியுறுத்தி போதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அநேக சாட்சிகளினால் கற்பிக்கப்பட்டுள்ளது. கடவுள் சொல்வதை மனிதன் விசுவாசிக்கவில்லையாயின், மனிதவர்க்கம் பாவம் செய்துள்ளது என்பதை தன்னிலேயும், அடக்கப்பட்டுள்ள பிரமாணத்திலேயும் கண்டு கொள்ளட்டும்.

மனித வரலாற்றில் இடம் பெற்றுள்ள யுத்தங்களுக்கும் யுத்தப் பேச்சுகளுக்கும் காரணம் தான் என்ன? எல்லா மனிதர்களின் அறிவு விருத்தியும், பயிற்சிகளும், எல்லாக் கவனிப்புகளும், எல்லா வர்த்தக உடன்படிக்கைகளும், எல்லா ஆராய்ச்சியாளர்களின் கருத்துப் பரிமாற்றமும், சர்வதேச சட்டத்தின் செளகரியங்களும் யுத்தத்தை தடுத்து நிறுத்த முடியாது. கடவுள் நம்பிக்கையற்ற நாடுகளின் யுத்தம், ஆம் ஜப்பான், சீனாவையும் அமெரிக்காவையும் தாக்கியது. ஆனால் அதற்கும் மனச்சாட்சியற்ற முறையில், இத்தாலி எத்தியோப்பியாவையும்; முற்றிகையிட்டிருக்கும் ஐரோப்பாவின் பெரும்பகுதி - ஜேர்மனியாலும் பிடிக்கப்பட்டதற்கும் என்ன வித்தியாசமுண்டு?

இத்தாலியும் ஜேர்மனும் நிறைய தேவாலயங்களையும், உயர்வான பழங்கால நாகரீகத்தையும் கொண்டவை. யுத்தமும் இரத்தஞ்சிந்துதலும், வெறுப்பும் ஆசிய நாடோடி மக்களிடையேயும், நிர்வாண, பிரகாச கருமேனிகளையுடைய குள்ள ஆபிரிக்கரிடையேயும் காணப்பட்டது. யுத்தத்தை உருவாக்குகின்ற மனித இருதயத்தின் துன்மார்க்கத்தை உயர்ந்த கலாச்சாரத்தினால் மூடிமறைக்க முடியாது. நச்சுவாயுவும், பாரிய குண்டுத்தாக்குதல், விமானங்கள் தமது கணைகளை வைத்தியசாலைகள் மீதும், திணைக்களங்கள் மீதும், களஞ்சியங்கள் மீதும், எண்ணற்ற பெண்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஏவுகின்றன. வெடிகுண்டுகளினால் சரமாரியாகத் தாக்கப்பட்ட பெரிய பட்டணங்கள் இப்போது யுத்த வீரர்களினால் நிரப்பப்பட்டு, மீண்டும் நாடுகளுக்கு விரோதமான யுத்தத்திற்குத் தயாராகிறார்கள். யுத்தமானது குணப்படுத்த முடியாததொன்று. ஏனெனில், இது மானிடரின் துன்மார்க்க இருதயத்தில் இருந்து ஊற்றெடுத்து வருகிறது. எல்லா மனிதர்களும் பாவிகள் என்பதை யுத்தம் நிரூபிக்கிறது. யுத்தத்தை வெறுப்பவர்கள் கூட இன்னமும் அதே சுயநலமும், அதே வெறுப்பும், தப்பான எண்ணமுங்கொண்டு ஒன்றிற்கு விரோதமான இன்னொரு அணிவகுப்பை ஏற்படுத்துகின்றனர். சண்டையைத் தவிர்க்க வேண்டுமென விரும்புபவர்களைக் கூட குறைவான தகுதியுள்ளவர்களாக, குற்றங்கள் கண்டுபிடித்து ஒத்துப்போகாமல் மற்றவர்களைப் போல அவர்களையும் கணிக்கின்றனர். "சமாதானத்தின் வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்” (ரோமர் 3:17).

ஒவ்வொரு கரங்களிலும் சட்டவிரோதம் அதிகரிக்கிறது. காவல் துறையினரிலும் பார்க்க சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அதிகம். சட்ட விரோதமானது ரயில் பாதையிலும் நீளமாகவும், வாகனங்களிலும் அதிகமாகவும் காணப்படுகின்றது. சட்டங்கள் பன்மடங்காகிறது. வரிகள் அதிகரிக்கினறது. அப்படியிருந்தும் எமது கல்வி அறிவும் எமது சீர்திருத்தமும், எமது சட்டங்களும், சட்டவிரோத செயலை முடிவுக்குக் கொண்டு வராது. ஏனெனில், இது துன்மார்க்க மனித இதயத்தில் இருந்து ஊற்றெடுக்கிறது மனிதன் பாவியாக இருக்கிறான், இந்த ஜாதி பாவிகளின் ஜாதியானது.

உலகம் முழுவதும் வறுமை, வறுமை பெருகுவதற்கான ஒரே காரணம் பாவமே. இந்த ஜாதியானது சிக்கனமாக மாசற்று அன்பாக இருந்து கடினமாக உழைக்குமானால், இப் பூமியிலுள்ள ஒவ்வொரு நபரும் சந்தோஷமாக உடுத்தி, உண்டு மெய்யான செல்வாக்குடனும் நாகரீகத்துடனும் வாழலாம். ஆனால் ஒரே காரியம் உலகந்தழுவிய செல்வத்தைத் தடுத்து வெறும் வறுமையை ஒவ்வொரு பட்டணங்கள் மேலும், நாட்டுப் புறங்களிலும் கொண்டு வருகிறது. எல்லாத் தாழ்வினதும் சாபமானது, சுயநலம், கடவுளில்லாதன்மை, கலகம்செய்தல், சுயலாபத்தைத் தேடுதலாக இருக்கிறது. வேண்டியளவு நிலம் இருக்கிறது. உடை இருக்கிறது, ஆனால் பாவம் வறுமையைக் கொண்டுவருகிறது.

எல்லார் மத்தியிலும் விவாகரத்து அதிகரிக்கிறது. இது அறிவில்லாத மக்களிடத்திலும் பார்க்க கல்விமான்களிடையே வேகமாக அதிகரிக்கிறது. கடவுளை அறியாத நாடுகளைப் பார்க்கிலும் கிறிஸ்தவ நாடுகளிடையே வேகமாக செல்கிறது! சந்தோஷம் இன்மையால் ஆயிரக்கணக்கானோரின் குடும்ப வாழ்வு குலைக்கப்பட்டிருப்பதனைக் குணப்படுத்த முடியாது. ஒழுக்கக்கேடும், விவாகரத்தும் பாரியளவில் பிள்ளைகளைப் பாதித்துள்ளது. மனித இருதயத்தை சீர்ப்படுத்தக் கூடிய ஒன்றினைத் தவிர வேறு ஒரு குணப்படுத்தலும் கிடையாது. பெருகி வரும் விவாகரத்து, நாம் பாவிகளின் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று நிரூபிக்கின்றது.

எல்லா இடங்களிலும் வைத்தியசாலையிலே அனுமதிக்கப்பட வேண்டியவர்களும், ஆபத்தை எதிர்நோக்கியவர்களும், சவக்காலைகளும் இருக்கத்தான் செய்கிறது. வியாதியும், வேதனையும், மரணமும் எல்லா இடங்களிலும் மனிதரின் பாவத்திற்கு சாட்சியாக இருக்கிறது. ஏதேன் தோட்டத்தில் வியாதி இருக்கவில்லை. ஏதேனிலே மரித்தோரின் குழிகளை அடையாளங்காட்ட வாடிய மலர்வலயங்களோ, குறிகற்களோ காணப்படவில்லை. மனிதன் அங்கே பாவம் செய்திராததினால் சாகவில்லை. மனிதவர்க்கம் முழுவதுமே பாவம் செய்துள்ளது என்பதற்கான எப்பொழுதும் - நிகழ்கால சாட்சிகள் விசனமும், அழுகையும், துன்பமும், மரணமுமாக இருக்கிறது! நீர் ஒரு பாவி என்பதைக் கூறுவதற்கு ஏன் உமக்கு ஒரு வேதாகமம் தேவை?

எல்லாவற்றிலும் கடைசியாக, நான் ஒன்றுதிரட்டிய சாட்சி மனச்சாட்சி. உம்முடைய உள்ளான ஆன்மாவிலே நீர் ஒரு பாவி என்பதை மெல்லிய குரலிலே சொல்வது போல் இல்லையா? நீர் ஒருபோதுமே சிந்திக்காத நினைவுகள் உமக்குள்ளே வாழ்வது உமக்குத் தெரியுமா? உமது இரகசியமான சிந்தனைகள் வெளிப்படும் என்றும், முன்பு மறைக்கப்பட்டவை வெளியாகும் என்றும் உமது உள்ளத்தில் ஒருபோதும் பயமில்லையா? நீர் தயாராக இருந்தாலும், தயார் இல்லாமல் இருந்தாலும் மற்றவர்கள் போல நீரும் மரித்து கடவுளுக்கு முன்பாக கணக்குக்கொடுக்க நிற்க வேண்டும் என உமது ஆன்மாவில் எச்சரிப்பாக உணரவில்லையா? பாவத்தின் நிமித்தமாக கண்டிக்கின்ற இந்த சிறிய சத்தம் இருக்கிறது. நீர் அதை இதுவரையில் கேட்கவில்லையானால் மானிட வர்க்கத்தில் தனியாக இருப்பீர். "மனச்சாட்சி என அழைக்கப்படும் அந்த சிறிய சத்தத்தை” நீர் நிச்சயமாகக் கேட்டிருப்பீர். உமது மனச்சாட்சி உம்மை பாவி என நிரூபிக்கிறது. நீர் என்ன தகுதியில் வாழ்ந்தாலும் நீர் பாவியே. வேதாகமம் கூறுவதை நீர் மறுதலித்தாலும், உமது மனச்சாட்சி வேதாகமம் உண்மையென்றும், "வித்தியாசமே இல்லை, எல்லாரும் பாவம் செய்து, தேவமகிமை அற்றவர்களானார்கள்” என்றும் நிச்சயப்படுத்தும். நீர் இதனை அசட்டைசெய்து, புறக்கணித்து மறுதலிக்கலாம். உமது இதயத்திலுள்ள கடவுளுடைய பிரமாணத்தால் நீர் ஒரு கடினமான பாவி என்பதை உமது மனச்சாட்சி தெளிவாக காட்டுகின்றது!

எல்லாரும் ஒரே விதத்தில் பாவிகள் என்பதை ஞாபகப்படுத்த எத்தனை அதிக தடவைகள் நான் இந்த வேதவாக்கை சுட்டிக்காட்டினேன்! அதிகமானோர் இவ்வாறே எனக்கு பதிலளித்தனர்: "எல்லாரையும் குறித்து எனக்குத் தெரியாது, ஆனால் நான் பாவி என்பதை அறிவேன்” என்றனர்.

ஆம் வாசகரே, கடவுளுடைய உலகின் சாட்சி, யுத்தம், தீயசெயல், வியாதி, மரணம் மற்றும் மனச்சாட்சி ஆகியன வேதாகமத்துடன் இணைந்து எல்லாரும் பாவிகள் என்பதை நிரூபிக்கின்றன. நீர் இவ்வுலகின் ஒரு பகுதி, இவ்வுலகில் குற்றமுடைய பாவிகளுள் நீரும் ஒருவர். நான் வித்தியாசமானவன் என்று நீர் கூறலாம். ஆனால் கடவுள், "வித்தியாசமே இல்லை, எல்லாரும் பாவம் செய்து தேவமகிமை அற்றவர்களானார்கள்” என்று கூறுகிறார்.

பாவம் நிறைந்த இருதயத்தின் இறுதி நிரூபணம் கிறிஸ்துவை நிராகரித்தல்

சிலருக்கு மற்றவர்கள் நீதிமான்களாகக் காணப்படலாம். ஆனால் ஒவ்வொரு மனித இருதயத்தின் துன்மார்க்க தன்மையையும் வெளிப்படுத்த ஒரே வழி உண்டு. அது ஒரு மனிதனை இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக முகமுகமாய் கொண்டு வருவதாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்னால் ஒருவர் வருகிறபோது - தூய ஒருவரேயான கிறிஸ்து, பாவமற்ற ஒருவரேயான கிறிஸ்து அளவற்ற ஞானத்துடனும் வல்லமையுடனும் பரிசுத்தத்தோடும் இருக்கிறவரை தரிசிக்கிறபோது அவனுடைய பாவங்கள் வெளிப்படுத்தப்படுகிறது.

நமது மீட்பர் ஊழியஞ்செய்த நாட்களில் காணப்பட்டது போல சுயநீதி உடைய பரிசேயர்களாக காணப்படலாம். இவர்கள் ஜெபித்தவர்கள், தசமபாகங்களைக் கொடுத்தவர்கள், ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள், நீதியான சேவையிலே ஈடுபட்டிருந்தவர்கள். ஆனால் இவர்கள் பரிசுத்த இயேசுவை முகமுகமாய்க் காண வந்தபோது, இவர்கள் அவரை வெறுத்தார்கள், அவரைக் குறித்து பொய்யாகக் கூறினார்கள். அவரை நிராகரித்தார்கள், அவரைக் கொலையும் செய்தார்கள்!

இன்றும் நாம் நல்லொழுக்கமுடையவர்கள் என கூறுபவர்கள் உண்டு. அவன் தனது குடும்பத்துடன் அன்பாக இருந்து, தான் சொல்வதை நிறைவேற்றி, நல்ல பிரஜையாக, நேர்மையான தொழிலாளியாக செயற்படுகிறான். ஆனால் அவன் இயேசு கிறிஸ்துவுக்கு முன்பதாக முகமுகமாய் வருகிறபோது, இயேசுவில் அன்புவைத்து, விசுவாசித்து, மீட்பராக அவரை ஏற்றுப் பின்பற்றுவதற்குப் பதிலாக, இந்த நல்லொழுக்கமுள்ள மனிதன் கிறிஸ்துவின் பக்கமாக தனது முதுகைத் திருப்பி அவரில் அன்பு வைக்காமல், விசுவாசிக்காமல், அவரைப் பின்பற்றாமல் போகிறான். மனித இருதயத்தின் துன்மார்க்கத்தை எதுதான் இவ்வுலகில் இவர்களுக்கு விளங்கப்படுத்தும்!

ஒல்ரன், ரெக்ஸ்ஸஸ் (Olton, Texas) எனும் இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பதாக ஒரு உயிர் மீட்சி ஆராதனையில் 200 அல்லது 300 மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடவென ஒரு நாள் காலையில் ஒன்று கூடினார்கள். ஆண்களும் பெண்களுமாக தங்கள் பாவங்களான மது அருந்துதல், சபித்தல், அவர்களின் ஆடல்கள், பொறாமை, விரோதம், கடமையில் கவனமற்றிருந்து இப்படியானதை ஒவ்வொருவரும் இரண்டு மணித்தியாலயமாக அறிக்கை செய்து கொண்டிருந்தனர். இவர்களின் அறிக்கையிடுதலின் நடுவிலே ஒரு மனிதன் நடுக்கத்துடன் எழுந்து, "இந்த மக்கள் குறிப்பிட்ட அனைத்துப் பாவங்களின் நிமித்தமும் நான் குற்றமடைந்திருக்கிறேன். நான் குடித்தேன், சபித்தேன், பாவத்திலும் களியாட்டத்திலுமே வாழ்ந்தேன். நான் செய்தவற்றுள் கேவலமமாக நான் கருதுவது, இன்று மூன்று மணிவரை எனது வாழ்நாள் முழுவதுமாக இயேசு கிறிஸ்துவை நிராகரித்து ஏற்க மறுத்தது, நான் என்னை அவருக்கு ஒப்படைத்திருக்கவோ, அவரை அன்பு செய்யவோ, சேவிக்கவோ இல்லை. இதுதான் என்னுடைய பெரிய பாவம்” என்றார்.

அவர் சரியானதைச் சொன்னார், உண்மையிலே சரியானவர். கெட்ட இருதயம் நிறையப் பாவமும் பாவத்தின் மேலுள்ள அன்பும் மட்டுமே யாரையும் இயேசு கிறிஸ்துவில் இருந்து விலக்கி வைக்கிறது! நீர் இன்று ஒரு கிறிஸ்தவன் இல்லையா, இயேசுவின் அன்பையும் கருணையையும் குறித்து கேள்விப்பட்டு ஒரு போதுமே அவரிடம் நீர் போகவில்லையா? அப்படியானால் நீர் ஒரு இருண்ட இதயத்தை உடைய பாவி. நீர் பாவத்தை நேசிக்கிறீர், பாவஞ்செய்வதை தெரிந்து கொண்டுள்ளீர், கடவுளுடைய வெளிச்சத்தை விட்டும், உண்மையைவிட்டும், நீதியைவிட்டும் வேண்டுமென்றே நிதானத்துடன் தூரமாகி, பாவத்தின் துன்மார்க்கத்திலும் இருளிலும் நடக்கிறீர்! துன்மார்க்க இதயத்தைக் காட்டுவதற்கு, கிறிஸ்துவை விட்டு விலகி நிற்பதைவிட வேறெதுவுமே இவ்வுலகில் இல்லை.

இது மனிதர்களின் கருத்தல்ல, இயேசுதாமே கூறிய தெளிவான போதனை, யோவான் 3:18-21 கூறுகிறது:

"அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்” என்றார்.

யாரெல்லாம் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கிறார்களோ அவர்கள் மன்னிக்கப்பட்டு, நித்திய ஜீவனை உடையவர்களாகின்றனர், அவரை நம்பாதவர்கள் ஏற்கனவே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதற்கான காரணம், அவர்களுடைய செயல்கள் பொல்லாதவைகளானதால் ஒளியைப் பகைத்து ஒளியினிடத்தில் வராதிருக்கிறார்கள் என்று இயேசு கூறினார். தங்கள் பாவங்களை விட்டு விலக விருப்பமில்லாததினால், பாவத்தின் இருளை விரும்பி வேண்டுமென்றே இருளில் நிற்கின்றனர். யாராவது ஒருவர் நீதியைச் செய்ய உண்மையிலே முயற்சித்து நீதியில் பிரியப்படுபவராக இருந்தால், பாவிகளை இரட்சிக்க இயேசு மரித்தார் என்பதை கேள்விப்பட்ட உடனேயே கிறிஸ்துவிடம் செல்வார்.

ஒரே ஒரு வழியில் மட்டுமே யாராவது ஒருவர் இப் பூமியில் இழந்துபோன பாவியாக இருக்கலாம். அது, அவர் தனது துன்மார்க்க இருதயத்தைக் கிறிஸ்துவுக்கு விரோதமாக வைத்து, கிறிஸ்துவை வெறுத்து, பாவத்தில் தொடர்ந்து இருப்பதற்கு கிறிஸ்துவை விட்டு விலகிச் செல்வதாகும்.

இது உண்மையானது என்பதை மீண்டும் வேதாகமத்தில் இருந்து நான் காட்டுவேன். இயேசுதாமே கூறினார், "இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது” - மத்தேயு 6:24.

அரை வழிப்பாதை எங்குமே இல்லை. நீர் இயேசு கிறிஸ்துவில் அன்பு வைத்து, அவரை விசுவாசித்து, அவரை சேவிக்கவில்லையாயின், நீர் அவரை வெறுத்து, அசட்டை பண்ணுகிறீர். அதுதான் வேதாகமத்தின் தெளிவான கூற்று. இயேசுவின் மீது அன்பு வைக்காமல், விசுவாசிக்காமல், உமது முழு இருதயத்தையும் கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடாமல், உமது வாழ்க்கையில் அவருக்குக் கீழ்ப்படிந்து பின்பற்றாமல் இருக்கிற இந்த சாதாரண உண்மையைவிட, இவ்வுலகில் வேறெதுவுமே இவ்வளவு தெளிவாகவும் வலிமையாகவும் உம்மை பாவியென்று நிரூபிப்பதிற்கில்லை. கிறிஸ்து தூயவராகவும் நல்லவராகவும் பரிசுத்தராகவும் இருப்பாரானால், ஒரு இருண்ட இருதயத்தை உடைய பாவி, பாவத்திலே இருப்பதற்கு தீர்மானித்தவர், பாவத்தை விரும்புபவர், பாவத்தால் பிடிக்கப்பட்டிருப்பவர், இயேசுவை அசட்டைபண்ணி, நிராகரித்து அல்லது வெறுத்துத்தள்ளுவார்.

பரிசுத்த வேதவாக்கியத்தின் சொற்களை நாம் மீண்டும் கூறுவோம், "வித்தியாசமே இல்லை, எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமை அற்றவர்களானார்கள்” பாவத்தின் முன்னால் முழு உலகமுமே ஒரேமாதிரி தான். யாராவது சுவிசேஷத்தைக் கேட்ட உடனேயே சந்தோஷமாக கிறிஸ்துவின் பக்கம் திரும்பி அவரை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அது இயற்கையாகவே அவரின் இருதயத்தில் பயங்கர பாவம் நிறைந்த தன்மையை நிரூபிக்கிறது.

அன்பான வாசகரே, நீர் ஒரு பாவி என்பதை மறுதலிப்பீராயின், அது கடவுளின் வார்த்தையை விசுவாசிக்காத உமது இதயத்தின் கடினமான, இருளான தன்மையையும் உமது சொந்த இருதயத்தின் துன்மார்க்கத்தைக் குறித்த உண்மையை ஒத்துக்கொண்டு, மனந்திரும்பி கிறிஸ்துவிடம் வராததையும் நிரூபிக்கும். இதில் எம்முடனே பிறந்த கறை, பாவம் செய்வதற்கான சகிக்கமுடியாத விருப்பம், கடவுளிடமிருந்து தூரப்போகும் இருதயத்தின் பயங்கர திருப்பம் போன்றவற்றில் உயர்ந்தவருக்கும் தாழ்ந்தவருக்கும், திறமானவருக்கும் கேவலமானவருக்கும் இடையே ஒரு அணுவாகிலும் வித்தியாசமே இல்லை. எல்லாரும் ஒரேவித பாவிகளே! கடவுளின் எல்லையற்ற கிருபை மட்டுமே எந்தவொரு மானிட பிறவியையும் பூமியின் மீது இரட்சிக்க முடியும்.

நீர் ஒரு பாவியாக இருந்தால் கடவுளுடைய

கடுங்கோபத்திற்கும் நித்திய வேதனைக்கும் ஆளாகுவீர

தேவ வார்த்தை எமக்குக் கொண்டுவந்த கடவுளுடைய நோக்கம் வெளிப்படும் இடத்திற்கு ஒவ்வொரு நேர்மையான வாசகனும் வந்திருப்பான் என்று இந்நேரத்தில் நான் நம்புகிறேன். "மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுக்கு முன்பாக குற்றமுள்ளவர்களாய் வரும்படிக்கும்” (ரோமர் 3:19) இவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீர் நேர்மையுள்ள ஒருவராக இருப்பீரானால், தெருவிலே திரியும் வேசியைப் போல, மதுபான நிலையத்தில் தரித்திருக்கும் சட்டவிரோதியைப் போல நானும் அதே ரக பாவி என்று ஒத்துக்கொள்வீர். நீர் நேர்மையானவரானால், கடவுளுடைய வார்த்தையோடு இணைந்து உம்மைப் பாவியெனத் தீர்க்கும் உமது மனச்சாட்சியின் சத்தத்திற்குச் செவிகொடுப்பீர். வித்தியாசமே இல்லை. நாம் அனைவரும் ஒரே விதத்தில் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டு ஒரே படகிலே இருக்கிறோம். நாம் பாவத்தின் படகிலே இருக்கிறோம், படகு தாழ்கிறது!

சில கோரமான வேதவார்த்தைகள் வேதாகமத்தில் இருந்தாலும், அவைகள் உண்மையானவைகள். வேதவசனம் கூறுகிறது, "பாவம் செய்கிற ஆத்துமா சாகும்” (எசேக்கியேல் 18:4). கடவுளின் கம்பீரமான எச்சரிப்பு, "உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்” (எண்ணாகமம் 32:23) என்பதாகும். வேதாகமத்தின் அபாய எச்சரிப்புப் பிரமாணமானது, "பாவத்தி்ன் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23) என்பதாகும். ஒரு பாவி மரிக்கும்போது, அவன் தனது சரீர மரணத்தை சம்பாதிக்கிறான். அவன் வேதனை நிறைந்த நரகத்திற்கு செல்லும்போது முறையீடு செய்யத் தேவையில்லை, அவன் தனது சம்பளங்களை மட்டுமே இப்பொழுது பெறுகிறான். கடவுள் மக்களை வெறுப்பதனால் நரகத்திற்குப் போகவில்லை. தாங்கள் தகுதியுடையவர்களாக இருப்பதனால் அவர்கள் நரகத்திற்குப் போகிறார்கள். அவர்கள் நரகத்திற்குப் போகவேண்டியவர்கள், அவர்கள் பாவிகள். அவர்கள் இன்னமும் பாவிகளாய் இருப்பதனால் நரகத்திலே இருக்கிறார்கள். மறுபடியும் பிறக்காத கடவுளின் விரோதிகள். ஒவ்வொரு பாவிக்கும் என கடவுளுடைய வார்த்தை, "மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” (கலாத்தியர் 6:7). அதனால்தான் வேதாகமம் கூறுகிறது, "எல்லாரும் பாவஞ்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது” (ரோமர் 5:12). கடவுளின் கடுங்கோபம் எப்பொழுதும் பாவிகளுக்கு விரோதமாக எரிந்துகொண்டிருக்கிறது. "கடவுள் நாள்தோறும் துன்மார்க்கரின் மீது கோபமாய் இருக்கிறார்” (சங்கீதம் 7:11). "ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாய் இருக்குமே” (எபிரெயர் 10:31). ஆகவே அன்பான பாவியே, உமக்கு ஏற்படப்போகிற தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள வழியைப்பார்க்க வேண்டும். அதுவே நம்மை நேசிக்கிற ஒருவர் பாவத்திற்கான ஈட்டைச் செலுத்தி நமக்கு ஏற்பட இருந்த நித்திய தண்டனையிலிருந்து தப்புவிக்கிறார். அப்படி இல்லாவிட்டால் நீர் நித்திய தண்டனைக்கு ஆளாகுவீர்.

வேதாகமத்தின் எல்லா உபதேசங்களும்

பாவத்தைப் பற்றிய செய்தியிலேயே தங்கியிருக்கிறது

இங்கே பாவத்தைக் குறித்த சில முடிவுரைகள். எல்லாரும் பாவிகள் என்ற நிரூபிக்கப்பட்ட இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு வேதாகமத்தை நீர் விசுவாசிப்பீரானால், மனதிற்கு உடனடியாக வருகின்ற பல பெரிய முடிவுகளின் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்.

1. மனிதன் வீழ்ந்துபோன சிருஷ்டிப்பு. பரிணாமம் எனும் முட்டாள் கொள்கை உண்மையல்ல. மனிதன் வளர்ச்சியடைந்து கடவுளாக மாட்டான். மனிதன் கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்டு இப்போது வீழ்ந்துபோன சிருஷ்டிப்பு. பாவத்தைக்குறித்த காரியமானது, எல்லா விதத்திலும் எமக்கு நிரூபித்தது. முடிவாக ஆதியாகமம் முதலாம் அதிகாரமும் அது உண்மை என்பதற்கு ஆதாராமாக உள்ளது. ஆதாம் பாவம் செய்து முழு மானிட வர்க்கத்தின் இதயத்தையும் சிந்தனையையும் கடவுளுக்குத் தூரமாக விலக்கிவிட்டார்.

2. அடுத்தது, பாவத்தின் காரியமானது, வேதாகமம் தெளிவாகப் போதிக்கிறபடி, மனந்திரும்பாத பாவிகளுக்கு நிச்சயமாக நியாயத்தீர்ப்பும் நித்திய தண்டனையும் அவசியமானது என முழுவதும் விளங்கப்படுத்தி குறிப்பிட்டுக் காட்டுகிறது. நரகத்தை நம்பாத மனிதர்கள் வேதாகமம் போதிக்கிறபடி வெளிப்படையாக பாவத்தையும் நம்பமாட்டார்கள். கிறிஸ்தவத்தில் பாவத்தைக் குறித்த வேதாகம உபதேசமானது ஒவ்வொரு முக்கியமான உபதேசத்திற்கும் அத்திவாரமாக உள்ளது.

3. எங்கேயுமுள்ள எல்லா மனிதர்களும் பாவிகள் என்பதும், பாவிகள் மரணத்திற்கும் நித்திய ஆக்கினைக்கும் தகுதியுடையவர்கள் என்பதும் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நியாயமானதாகவும் அத்தியாவசியமானதாகவும் ஆக்கியது. பயங்கரமான நரகத்திலிருந்து மனிதர்களை இரட்சிப்பதற்காக கிறிஸ்து மரித்தார். பாவமில்லாத அவர், பாவிகளிற்காக மரித்தார். அவரது இரத்தம் எங்களுக்கு பாவநிவாரணமாகியது. கிறிஸ்துவே பாவிகளுக்குப் பதிலாக மரித்தவர். கிறிஸ்து மரித்தது, ஒரு உதாரணத்திற்கோ, ஒரு தியாகியைப் போலவோ, நல்ல மனிதனைப் போலவோ, சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட பலியோ அல்ல. இல்லை, அவர் தேவ குமாரன், மனுஷகுமாரன் தனது சிலுவை மரணத்தினாலே பாவிகளுக்கு இரட்சிப்பை வழங்கினார். பாவத்தைக் குறித்து கடவுள் சொல்வதை நீர் விசுவாசிக்கவில்லையானால், பாவநிவாரணத்தையும் இரட்சிப்புக்கான கடவுளின் திட்டத்தையும் ஒருபோதுமே விளங்கிக்கொள்ளவேமாட்டீர்.

4. "நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்று இயேசு சொன்னார். புதிய பிறப்பின் அவசியமானது, பாவத்தைக் குறித்து கடவுளின் போதனையை ஏற்றுக் கொள்ளாதவர்களினால் மட்டுமே மறுதலிக்கப்படுகிறது. மனிதர்கள் சுபாவத்திலேயே இருதயத்தில் துன்மார்க்க பாவிகளாக இருக்கிறார்கள். இது மாற்றப்பட வேண்டும். மனிதர்கள் அத்துமீறலிலும், பாவத்திலும் மரித்துப்போய் உள்ளார்கள். அவர்கள் எப்பொழுதும் கடவுளைக்காண பரிசுத்த ஆவியினால் உயிர் உள்ளவர்களாக்கப்பட வேண்டும். ஒருவர் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளாதவர், சாதாரணமாக அவரைக் குறித்து அவர் எந்த விதத்திலேயும் வித்தியாசமே இல்லை, மற்றவர்களைப் போல இவரும் ஒரு எளிய துன்மார்க்க பாவியென்று கடவுள் கூறுவதை கற்றுக்கொள்ள வேண்டும்.

5. பாவத்தின் காரியம், தேவனுடைய வார்த்தையில் மிகத் தெளிவாகக் கற்பிக்கப்பட்டு, எல்லாவிதத்தினாலும், சரித்திரத்தினாலும், அபிப்பிராயத்தினாலும், மானிட மனச்சாட்சியினாலும் சாட்சிகொடுத்து, ஏன் மனிதர்கள் வேதாகமத்தை விட்டுத் திரும்பி கடவுளைவிட்டுப் போகிறார்கள் என விளக்கப்படுத்துகிறது. மனிதர்கள் வேதாகமத்தை வெறுப்பது ஏன் என்றால், அது அவர்களைக் குற்றம் செய்த பாவிகளாக அடையாளம் காட்டுகிறது! மனிதர்கள் கிறிஸ்துவிடம் வந்து, அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் அவர், அவர்கள் அறிக்கை செய்தது போல பாதாளத்திற்குத் தகுதியுடைய பாவிகளாக மட்டுமே ஏற்றுக்கொள்வார்! இதுதான் தற்காலத்தாரின் விளக்கம். மூடத்தன, துன்மார்க்க, சுயநீதியுடைய மனிதர்கள் கிறிஸ்தவர்கள் என அறியப்பட்டிருக்க விரும்புகிறார்கள், ஆனால் இவர்கள் வேதாகமத்தைப் பிழையற்ற அருளப்பட்ட வார்த்தையாகவும், கிறிஸ்துவே கடவுள் என்றும், கிறிஸ்துவின் மரணம் பாவத்திற்கான நிவாரணம் என்றும் ஏற்றுக்கொள்வதே கிடையாது. ஏனென்றால், இது அவர்களை வீழ்ந்துபோன குற்றமுள்ளதும், இருண்ட இருதயமுடைய பாவிகள், கடவுளின் முழுக்கோபாக்கினையின் கீழானவர்கள் என்று அவர்கள் அறிக்கைபண்ண வேண்டியிருக்கும் என்பதால், கிறிஸ்துவை நிராகரிப்பவர்கள் தங்கள் பாவங்களை நேசிப்பவர்களானதால் இதனை வெறுத்து இதனை மறுக்கிறார்கள்.

உங்களில் சிலர் இச்செய்தியின் தெளிவான சொற்களைக் கேட்பதிலிருந்து பின்வாங்கலாம். ஆனால், "வித்தியாசமே இல்லை, எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமை அற்றவர்களானார்கள்” எனும் கடவுளின் தெளிவான கற்பித்தலை ஏற்காத ஒருவர் வேதாகமத்தின் ஒவ்வொரு பிரதான உபதேசத்திற்கும் தனது இதயத்தை அடைத்துப்போடுவார் என நான் எச்சரிக்கிறேன். தாம் பாவிகள் என்பதை மறுதலிக்கிற யாவரும் நம்பிக்கை, கருணை, கிருபை, இரட்சிப்பு போன்றவற்றின் கதவை அடைத்துப் போடுகிறார்கள். அறிக்கையிடுகிற பாவிகளுக்கு மட்டுமே கடவுள் இதனைக் கொடுக்கிறார்!

எல்லாரும் பாவம் செய்தவர்கள்,

ஆனால் கடவுளுக்கு நன்றி, எல்லாரும் இரட்சிக்கப்பட முடியும்!

"எல்லாரும் பாவம் செய்துள்ளனர்" என்பதை நாம் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டோம். அதுமட்டுந்தான் சொல்வதற்கென்று இருந்தால், நாம் எல்லோரும் சதாகால தண்டனைக்கு உள்ளாகி இருப்போம். அதுமட்டுமே இல்லாதபடியினால் கடவுளுக்கு நன்றி, இதே பாடத்தில் கடவுளிடம் இன்னொரு வார்த்தை இருக்கிறது: "வித்தியாசமே இல்லை, எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமை அற்றவர்கள் ஆனார்கள்” என்பது இன்னமும் உண்மையானது. ஆனால், ரோமர் புத்தகத்தில் இன்னும் ஒரு இடத்தில் கூட கூறுகிறது: "வித்தியாசமே இல்லை” ரோமர் 10:12,13 இற்கு வேதாகமத்தைத் திருப்புக.

"யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராய் இருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்”

வித்தியாசமே இல்லை, எல்லாரும் பாவஞ்செய்துள்ளனர்! என ரோமர் 3:22,23 கூறுகிறது. இப்போது தேவனுக்கு நன்றி, வித்தியாசமே இல்லை, எல்லாருமே இரட்சிக்கப்படலாம் என நாம் வாசிக்கிறோம்! நாம் எல்லாரும் பாவிகள், நாம் எல்லாரும் ஒரே படகிலே இருக்கிறோம். ஆனால் கடவுளுக்கு நன்றி, நாம் அனுமதி கொடுத்தால் இயேசு கிறிஸ்து முழுப் படகின் பாரத்தோடும் இரட்சிப்பார்! பாவம் உலகம் முழுவதிலும் இருக்கிறதானால், இரட்சிப்பும் இலவசமாக முழு உலகிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. "பாவம் பெருகிற இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோமர் 5:20).

ரோமர் 3:23 இற்கு திரும்பிப் போய் வாசிப்பீரானால், "எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமை அற்றவர்களானார்கள்” என்பது, ஆசீர்வாதமான வாக்குத்தத்தத்தைப் பின்பற்றி வந்துள்ளதைக் காண்கிறீர். "அது இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும்.”

ஏசாயா 53:6 எமக்குக் கூறுவது, "நாம் எல்லாரும் ஆடுகளைப் போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்;” பின்பு அவ் வசனம், "கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” எனத் தொடர்கிறது. இயேசு கிறிஸ்து நமது பாவங்களை சுமந்தார்! இதுதான் சுவிசேஷம். "கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்” (1கொரிந்தியர்15:3). இவ் எண்ணமானது ஆசீர்வாதமானது. எல்லா ஏற்றுக்கொள்ளல்களுக்கும் பாத்திரமானது. பவுல் கூறுவது, "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். பாவிகளில் பிரதான பாவி நான்தான்” என்றும் கூறுகிறார் (1தீமோத்தேயு 1:15).

பாவிகளை இரட்சிக்கவே இயேசு மரித்தார். வேறு யாரையுமல்ல! "நீதிமான்களையல்ல பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என இயேசு கூறினார் (லூக்கா 5:32). நீர் ஒரு பாவியாக இருந்தால், எங்கே உமக்கு நம்பிக்கை உண்டு? அன்பு உண்டு? உமக்குக் கருணை உண்டு? உமக்கு இரட்சிப்பு உண்டு? ஏன் அந்த ஏழை ஆயக்காரன் ஆலயத்தில் தன் கண்களை பரத்திற்கு நேராக ஏறெடுக்க அவ்வளவு வெட்கப்பட்டு, பின்பு தன் வீட்டிற்கு நீதிமானாக்கப்பட்டவனும், இரட்சிக்கப்பட்டவனுமாகப் போனான் என்று உமக்குத் தெரியுமா? அவன், "தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும்” என்று வேண்டிக்கொண்டான்! (லூக்கா 18:13). யாராவது இயேசு கிறிஸ்துவிடம் தான் முடியாதவன் என்பதை அறிக்கையிட்டு, திருந்த முடியாத பாவியென்று வருவானாக இருந்தால் இரட்சிப்பைப் பெற முடியும். ஒருவன் தன்னை நீதிமானென்று எண்ணினால், கடவுளும் இரட்சிப்பதில் தனது நீதியைக் கொடுக்க முடியாது. தான் பாவி என்பதை ஒத்துக்கொள்கிற யாவருக்கும் தனது கருணையை அருளிச் செய்வார்.

கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே பாவிகளுக்கு நம்பிக்கை. இரத்தம் பாவங்களுக்காக செலுத்தப்பட்டது! உமது பாவங்கள் கிறிஸ்துவின் மீது போடப்பட்டது. அந்த பூரணமான பரிசுத்த இயேசு எல்லாவிதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும் பாவஞ்செய்யவில்லை. அவர் ஒரு பாவியைப் போல வேதனைப்பட்டார். எனது பாவங்களுக்காக, அவ்வாறே உமது பாவங்களுக்காகவும். "நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2கொரிந்தியர் 5:21). தனது குமாரன் செலுத்தியதில் பிதாவாகிய தேவன் திருப்திப்பட்டார். கிறிஸ்துவை ஒரு பிரதிநிதியைப் போல அவர் ஏற்றுக்கொண்டார். நாம் அவரோடு சமாதானமடைய வேண்டுமென அவர் ஆவலோடு எதிர்பார்க்கின்றார்.

"எல்லாம் மன்னிக்கப்பட்டன, வீட்டிற்கு வா!”

அநேக நாட்களுக்கு முன்பதாக தினசரி செய்தித்தாள் ஒன்றில் விளம்பரப்பகுதியில் நான் கண்ட விளம்பரம் ஒன்று என் இதயத்தைத் தொட்டது. இப்படியாக அதில் இருந்தது: "இம்மா, வீட்டிற்கு வா. எல்லாம் மன்னிக்கப்பட்டன. அம்மா சுகவீனமாக இருக்கிறார், உன்னைப் பார்க்க விரும்புகிறார்” என எழுதப்பட்டிருந்தது. எப்படியான சொற்கேளாத சிறுமியாக தனது பாவத்தின் மூலம் தகப்பனதும் தாயினதும் இதயத்தை உடைத்தவள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அப் பெற்றோரின் இதயத்தின் அன்பும் ஆவலும் அந்தப் பெரிய பட்டணத்திற்கூடாக அவள் கேட்க முன்னதாக ஏற்கனவே வழங்கப்பட்ட மன்னிப்பை ஏற்றுக் கொண்டு வீடு திரும்பும்படியாகக் கெஞ்சி, அச் சிறுமியைச் சென்றடைந்தது என்பது எனக்குத் தெரியும்!

"அன்பான பாவியே! உமது பாவத்திற்காக செலுத்தின எனது அன்பான குமாரனை விசுவாசிப்பீரானால் உமக்கு எல்லாம் மன்னிக்கப்படும். நாம் உம்மை நேசிக்கிறோம். இழந்தவராக நரகத்தில் இருப்பதற்கு மாறாக பரலோக வீட்டிற்கு நீர் வருவதை விரும்புகிறோம்” என்ற செய்தியை இன்று பிதாவாகிய தேவன் கூறுகிறார்.

"வித்தியாசமே இல்லை!” எல்லாரும் பாவம் செய்துள்ளனர், எல்லாரும் மன்னிக்கப்படவும் முடியும். எல்லாரும் ஒரே விதத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் நம்பிக்கை வைத்து வரவேண்டும்.

பல வருடங்களுக்கு முன்னதாக ரெக்ஸஸின் உயிர் மீட்சி ஆராதனையில், அதிக வேதனையோடும் பாவப் பாரத்தோடும் இருந்து, இரட்சிக்கப்பட வேண்டும் என்று காணப்பட்ட ஒரு பெண்ணுடன் நான் பேசினேன். ஆனால் அவள் தன்னைக் கடவுள் இரட்சிக்க விரும்புவார் என நம்பவில்லை. என்னதான் இவளின் வழியில் இருக்கும் என ஆச்சரியப்பட்டேன். ஆனால் இயேசுவில் இருந்து அவளை விலக்கி வேதனை அளிப்பது என்னவெனும் இரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியவி்ல்லை. கடைசியாக அவள் ஒரு கடிதத்தை எழுதி சோகமான முகத்துடன் கடிதத்தை என்னிடம் கொடுத்து விட்டு, "தயவுசெய்து நீங்கள் இதனை வாசித்துவிட்டு, நான் இரட்சிக்கப்பட முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா? எனக் கூறுங்கள்” என்றாள். அவள் போனபின்பு நான் கடிதத்தை வாசித்தேன். அது ஒரு பரிதாபப்படத்தக்க, நாணிய, உடைந்த இருதயத்தின் வெளியூற்றாகக் காணப்பட்டது. அவள் ஒரு சாதாரண பெண்ணாக இருந்து எப்படிப் பாவத்திற்குள் இவ்வளவு தூரம் போனேன் எனக் கூறினாள். அவளின் கணவன்தான் அதனை அனுமதித்தான் என்றாள். ஏன் என்பதைக் கடவுள் மட்டுமே அறிவார். இப்போது, அவள் நம்பிக்கையின்றி வெட்கத்துடன் கடவுள் என்னை இரட்சிப்பாரா? என வேதனைப்படுகிறாள்.

அன்று மாலை கூட்டத்தின் பின்பு, நான் எனது வேதாகமத்தைத் திறந்து ஏசாயா 1:18 ஐக் காண்பித்தேன். அதை எனது விரலால் காட்டி, மீண்டும் மீண்டும் வாசித்துக் காட்டினேன்.

"வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”

பயந்து நடுங்கி, நம்பிக் கேட்டு, ஜெபித்து, நிச்சயமின்றி சென்றுவிட்டாள். ஆனால் மறுநாள் மாலை அவள், மலர்ந்த முகத்தடனும் சந்தோஷமான இதயத்துடனும் வந்து இதைக் கூறினாள்: "கடந்த இரவு எனக்குள்ளே ஒரு வித்தியாசம் இருக்கக் கண்டேன் என்றாள். எனக்கு என்னவென்று தெரியாது, எனக்கு முன்பாக யாரோ ஒருவர் வேதாகமத்தைப் பிடித்துக்கொண்டு, நீங்கள் காட்டிய அதே வசனத்தைக் காட்டினார். 'வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்' என்றிருந்தது. அது எனக்கானால் என்று எனக்குள்ளே நான் வேதனைப்பட்டு, புலம்பி அழுதேன். பின்பு நான், எனக்கு சுட்டிக்காட்டப்பட்ட வசனத்தைக் குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்த்தபோது, சகோதரன் ரைஸ், எனக்குள் மாற்றம் ஏற்பட்டு, நான் அந்த வாக்குத்தத்தம் எனக்குரியது என்பதை அறிந்து கொண்டேன். எல்லாம் மன்னிக்கப்பட்டன என்பது இப்போது எனக்குத் தெரியும் என்றாள்!” நான் அவளுக்கு பப்டிஸம் கொடுத்தேன். அவள் ஒரு உண்மைக் கிறிஸ்தவளும் ஆத்தும ஆதாயக்காரியுமானாள்.

அன்பான, வேதனையுடைய மரணிக்கும் பாவியே, நீர் இன்றைக்கு இரட்சிக்கப்படமாட்டீரா? நீர் ஒரு பாவி என்பதை கிறிஸ்துவுக்கு அறிக்கையிட்டு, உமது பாவங்களுக்காக, உமக்குப் பதிலாக, அவர் மரித்தார் என்று ஏற்றுக்கொள்ளும். உம்மைப் பஞ்சைப் போல் வெண்மையாகக் கழுவிக்கொள்ளும்!

வி்த்தியாசமே இல்லை, எல்லோரும் பாவம் செய்துள்ளனர்; ஆனால் - "யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராய் இருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்" (ரோமர் 10:12,13).

நீங்கள் ஒருபோதுமே கிறிஸ்துவை உங்கள் இருதயத்திற்குள் வரும்படியாக கேட்காதவரானால், இப்போது அவரை உங்கள் இதயத்திற்குள் வரும்படியாக கேளுங்கள். கிறிஸ்துவை உங்கள் சொந்த மீட்பரும் இரட்சகருமாக ஏற்றுக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்ததை எனக்கு எழுதித் தெரிவிப்பீர்களா? கீழே கொடுக்கப்பட்டிருப்பதைப் போல நீங்கள் எழுதலாம் அல்லது உங்கள் சொந்த வசனத்தில் எழுதுங்கள். நான் மிகவும் சந்தோஷப்பட்டு, உமக்காக ஜெபித்து, தனிப்பட ஒரு கடிதத்தை எழுதுவேன்.

எனது மின் அஞ்சல் முகவரி: biblepreach@gmail.com

My email Address is: biblepreach@gmail.com

திகதி……………………………….

போதகர்,

பைபிள் பப்டிஸ்த சபை.

அன்பான போதகரே!

"எல்லாரும் பாவம் செய்துள்ளனர்” எனும் இப்புத்தகத்தினை வாசித்த பின்பு, நான் பாவியென்பதை அறிக்கை செய்தேன். நான் இரட்சிக்கப்பட தகுதியற்றவன், ஆனால் கிறிஸ்து எனது பாவங்களுக்காக மரித்தார் என்பதை அறிந்து, நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் இப்போது அவரை எனது உள்ளத்தில் ஏற்றுக் கொண்டுள்ளேன். எனது முழு இதயத்தோடும் எனது பாவங்களை விட்டுத் திரும்பி கிறிஸ்துவின் பக்கமாகிறேன். எனது பாவங்களை அவர் மன்னிக்கும்படி அவரை நம்பி, அவரை எனது தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். இதனை எனதாக்கிக் கொண்டு, அவரின் உதவியுடன் எனது மிகுதி வாழ்நாட்களில், அவருக்காக வாழ முயற்சிப்பேன்.

கையொப்பம் ………………………………………………………….

பெயர் …………………………………………………………………

முகவரி ………………………………………………………………...

மின்னஞ்சல் முகவரி …………………………………………………………………