உதவிகள் புதிய விசுவாசிகளுக்கு

ஒரு விசுவாசியாக உமது புதிய வாழ்வை சரியாக ஆரம்பித்துக் கொள்ளுவது மிகவும் முக்கியமானது.

கிளாரன்ஸ் செக்ரன்

ஒவ்வொரு நாளும் ஞாபகப்படுத்துக. நீர் கடவுளின் பிள்ளை, நீர் சதாகாலமும் பாதுகாக்கப்பட்டுள்ளீர். நீர் பாவம் செய்யும்போது - உம்மை மன்னித்து சுத்திகரிக்கும்படியாக உமது பரலோக தந்தையிடம் கேளும். உமது வேதாகமத்தை நாளாந்தம் வாசித்து ஜெபத்தில் நேரத்தைச் செலவிடும். உமது வாழ்வைக் கடவுள் நடத்துவதற்கு விட்டுக்கொடும். உமது உள்ளூர் சபையின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளும் - உம்முடைய தசமபாகம், தாலந்து, நேரம் ஆகியவற்றால் ஒத்துழைப்புக் கொடும். எப்படி இரட்சிக்கப்பட முடியுமென மற்றவர்களுக்குச் சொல்லும்

அன்பான நண்பரே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உமது சொந்த இரட்சகராக நீங்கள் விசுவாசித்துள்ளதையிட்டு உண்மையிலே நான் சந்தோஷமடைகின்றேன். வேதாகமம் கூறுகிறது: "இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” - 2கொரிந்தியர் 5:17.

நீர் ஒரு வெற்றி சிறந்த கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியும். நீர் ஒரு தோற்கடிக்கப்பட்ட கிறிஸ்தவனாக இருக்க வேண்டியதில்லை. நீர் உமது பாவங்களைக் கர்த்தரிடத்தில் அறிக்கை செய்வீரானால், அவர் அவைகளை மன்னிப்பார். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” - 1 யோவான் 1:9.

ஒரு கிறிஸ்தவனாக இருப்பது என்பது என்னத்தைக் கருதுகின்றது என்பதை நீர் மேலும் விளங்கிக்கொள்ள உதவி செய்வதற்காக இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதாரண பாடங்கள் உமது புதிய கிறிஸ்தவ வாழ்வினை சரியாக ஆரம்பிக்கவும் உதவி செய்யும். அற்புதமான கர்த்தர் ஆசீர்வதித்து, அவர் விரும்பும் விதத்தில் உம்மைப் பயன்படுத்த நீர் இடமளிக்க வேண்டும் என்ற ஜெபத்துடன் உம்மிடத்தில் கொடுக்கப்பட்டு்ள்ளது.

கிறிஸ்துவுக்குள் உமது,

கிளாறன்ஸ் செக்ரன்.

பிலிப்பியர் 4:19.

இரட்சிக்கப்படுதல்

என்றால் என்ன?

கிறிஸ்தவனாக இருத்தல் என்றால் என்ன என்பதைக் குறித்து அதிகமானோர் குழப்பமடைந்துபோய் உள்ளனர். எம்முடைய கேள்விகள் எல்லாவற்றிற்கும் வேதாகமத்தில் பதில் உண்டு.

வேதாகமம், பரலோகம் உண்டென்றும் ( யோவான் 14:1-6 ), நரகம் உண்டென்றும் ( லூக்கா 16:19-31, வெளிப்படுத்தல் 21:8 ) கூறுகிறது. நரகத்திற்குத் தப்பி பரலோகத்தையடைவதற்கு ஒரே வழி கிறிஸ்துவை உமது உள்ளத்தில் வைத்திருப்பதே. அடுத்து விடைகாண வேண்டிய பெரிய பிரச்சனை, "நான் எப்படி கிறிஸ்துவை என் உள்ளத்தில் பெறுவது?” என்பதாகும். அவர் எம்மை நரகத்தில் இருந்து பாதுகாத்து பரலோகத்திற்கு கொண்டு போவார். தொடர்ந்து வாசித்து அறிந்து கொள்ளும்.

தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்

கடவுள் உங்களை நேசிக்கிறார்

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” - யோவான் 3:16.

எல்லா மக்களும் பாவிகள்

எல்லோரும் பாவம் செய்து, தேவ மகிமை அற்றவர்களாகி…” - ரோமர் 3:23. கிறிஸ்துவை விசுவாசியாததினால் மனிதர்கள் ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாகத் தீர்க்கப்பட்டுள்ளார்கள் - யோவான் 3:18, நாம் ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளான பாவிகள் மட்டுமல்லாமல்; ஆவிக்குரிய ரீதியிலே மரித்துப் போயும் உள்ளோம். - எபேசியர் 2:12. நம்முடைய பாவங்களுக்கு செலுத்தப்பட வேண்டும்

"பாவத்தின் சம்பளம் மரணம்…” - ரோமர் 6:23.

எம்முடைய பாவங்களுக்காக செலுத்தப்படுவது மரணமும் நரகமும் ஆகும்.

கிறிஸ்து எமது பாவங்களுக்காக செலுத்தினார்.

"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே.......” - ரோமர் 5:8.

கர்த்தராகிய இயேசு பரலோகத்தில் இருந்து வந்தார், அவர் ஒரு கன்னிக்குப் பிறந்தார் - லூக்கா 1:26-28. அவர் பாவமில்லாத வாழ்வு வாழந்தார் - எபிரெயர் 4:15. ஆகவே அவர் பாவத்திற்கான சம்பளத்தை செலுத்த வேண்டியதில்லை. எனினும் நம் எல்லோருடைய பாவங்களையும் சுமந்து கொண்டு சிலுவையிலே தொங்கி - 1 தீமோத்தேயு 1:15; 2:5,6 பின்பு அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார். 1 கொரிந்தியர் 15:1-6.

எம்மை இரட்சிக்கும்படி விசுவாசத்தோடு நாம் அவரிடத்தில் கேட்க வேண்டும்.

"கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்” - ரோமர் 10:13.

கிறிஸ்து எம்முடைய பாவங்களுக்காக மரித்து, எம்மை இரட்சிக்க விரும்புகின்றார் என்று இப்போது எமக்குத் தெரிகிறது. ஆகவே நாம் அவரிடம் கேட்க வேண்டும். கேட்டால், எம்மை மீட்டுக்கொள்வார் என்று அவர் வாக்களித்துள்ளார். நாம் கேட்கின்ற அந்த நேரத்திலேயே கிறிஸ்து எனது உள்ளத்திற்குள் வந்து, என் பாவங்களை மன்னித்து, எனது ஆத்துமாவை இரட்சிக்கிறார். அவர் என்னுடைய பெயரை ஜீவபுஸ்தகத்திலே எழுதுகின்றார் - வெளிப்படுத்தல் 21:27. நான் ஒரு புதிய சிருஷ்டிப்பாகியுள்ளேன் - 2 கொரிந்தியர் 5:17; நான் கடவுளின் பிள்ளையாகியுள்ளேன் - யோவான் 1:12.

கேள்விகளும் பதில்களும்

கேள்வி: என்னத்திலிருந்து இயேசு எம்மை இரட்சிக்கிறார்?

பதில்: எம்முடைய பாவங்களிலிருந்து - மாற்கு 2:1-11; மத்தேயு 26:28; 1யோவான் 1:7

கேள்வி: பாவம் என்றால் என்ன?

பதில்: பாவம் என்றால், கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போதல் அல்லது கடவுளின் சட்டத்தை மீறுதல் - 1 யோவான் 3:4

கேள்வி: யார் பாவம் செய்துள்ளார்கள்?

பதில்: எல்லாரும் பாவம் செய்துள்ளார்கள். நான் பாவம் செய்துள்ளேன். நாம் எல்லோரும் பாவம் செய்துள்ளோம் - ரோமர் 3:10, 23

கேள்வி: என்னுடைய பாவத்திற்கான தண்டனை என்ன?

பதில்: நரகத்திலே நித்திய மரணம் - ரோமர் 6:23

கேள்வி: இந்த மரணத்திலிருந்து நான் எப்படித் தப்பலாம்?

பதில்: இயேசுவை எனது சொந்த இரட்சகராக விசுவாசிப்பதன் மூலமாக இந்த நித்திய மரணத்திலிருந்து, பாதுகாக்கப்பட முடியும். அப்போஸ்தலர் 16:31

வேதப்படிப்பு:

முதலாவது, புதிய ஏற்பாட்டிலுள்ள 1 யோவான் 5ம் அதிகாரத்தை வாசிக்கவும். இரண்டாவது, நித்தியஜீவனைக் குறித்துப் பேசுகின்ற வசனங்களை கவனத்தில் கொண்டு, திரும்பவுமாக அதே அதிகாரத்தை வாசிக்கவும். அப்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கூடாக இவ் வாழ்வை கடவுள் எமக்குத் தருகிறார் என்பதை எப்படி நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும் என அறிய முடியும்.

வேதாகம மனன வசனம்

இரட்சிப்பின் நிச்சயம்

உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று

நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய

நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும்,

தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற

உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்

- 1 யோவான் 5:13

பப்டிஸம் என்றால் என்ன?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே புதிய ஏற்பாட்டு சபையை ஸ்தாபித்தவர். "இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்” என்றார் - மத்தேயு 16:18. கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார் என்று வேதாகமம் கூறுகிறது - எபேசியர் 5:25.

கிறிஸ்துவே சபைக்குரிய ஒழுங்குமுறையையும், கொள்கை கோட்பாடுகளையும் அமைத்துக் கொடுத்தவர். சபையின் கோட்பாடானது, அதன் போதனையும் நம்பிக்கையும் ஆகும். சபையின் ஒழுங்குமுறைகளானது, அவர் கைக்கொள்ளும்படி கூறிய காரியங்கள் ஆகும். இவைகள் ஒழுங்குமுறைகள் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் அவர், அவர்களுக்குக் கட்டளையிட்டார் அல்லது ஒழுங்குசெய்தார். புதிய ஏற்பாட்டு சபையில் இரண்டு ஒழுங்குமுறைகள் காணப்படுகின்றன. ஒன்று பப்டிஸம், மற்றையது கர்த்தருடைய பந்தி.

நம்முடைய பாவங்களுக்காக அவர் சிலுவையிலே மரிப்பதற்கென காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே, எமது இரட்சகரால் கர்த்தருடைய பந்தியானது ஆரம்பிக்கப்பட்டது. கர்த்தருடைய பந்தியில் கலந்துகொள்வதன் மூலமாக யாரும் இரட்சிக்கப்பட முடியாது. இது கர்த்தராகிய இயேசுவின் மரணத்தை ஞாபகப்படுத்துவதற்கானது. அவர் சிலுவையிலே நமக்காக என்ன செய்தார் என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தமது இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொண்டு, பப்டிஸத்தில் அவரைப் பின்பற்றியவர்கள் கர்த்தருடைய பந்தியில் பங்குகொள்ளலாம்.

ஒரு அடக்கம்பண்ணப்படுதலும், ஒரு உயிர்த்தெழுதலுமாக பப்டிஸம் இருக்கிறது. நாம் கிறிஸ்துவுடனே கூட அவருடைய மரணத்திற்கொப்பாக அடக்கம்பண்ணப்பட்டு; அவருடைய உயிர்த்தெழுதலுக்கு ஒப்பாக எழுப்பப்பட்டிருக்கிறோம் - ரோமர் 6:1-4. இந்த இரண்டு சபை ஒழுங்கு முறைகளும் ஆவிக்குரிய உண்மையின் அழகான எடுத்துக்காட்டுகள். இவைகளுக்கு இரட்சிக்கும் வல்லமை கிடையாது. கர்த்தராகிய இயேசு எமக்கு என்ன செய்தார் என்பதை இவைகள் எமக்குக் காண்பிக்கின்றன.

கிறிஸ்துவின் மரணம், அடக்கம்பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை பப்டிஸமானது எமக்குக் காண்பிக்கிறது. அத்துடன் நாம் எமது பாவத்திற்கு செத்தும், கிறிஸ்துவுக்குள்ளான எமது புதிய வாழ்வையும் காண்பிக்கிறது. எமது இதயத்திலே என்ன நடந்துள்ளது என்பதை மற்றவர்களுக்கு இது கூறுகிறது. கர்த்தராகிய இயேசு நமக்காக மரித்தார், அவர் நமக்காக அடக்கம்பண்ணப்பட்டார், அவர் நமக்காக மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என நாம் விசுவாசிக்கிறோம். எமது தனிப்பட்ட இரட்சகராக நமது இதயங்களுக்குள் அவரை அழைத்திருக்கின்றோம். நாங்கள் இனிமேலும் இழந்துபோனவர்கள் அல்ல. அவருக்குள் புதிய வாழ்வு நமக்கு உண்டு.

விசுவாசிகளுக்கு மட்டுந்தான் பப்டிஸம் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளும். நீர் பப்டிஸம் பெற முன்பதாக நீர் இரட்சிக்கப்பட வேண்டும் - அப்போஸ்தலர் 2:41, அப்போஸ்தலர் 8:37. விசுவாசிகளுக்கு மட்டுமே பப்டிஸம்.

பப்டிஸம் எடுக்கும்போது, நாம் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகின்றோம் என்பதை நினைவுபடுத்தும். நாம் இரட்சிக்கப்பட்ட பின்பு பப்டிஸம் எடுக்க வேண்டுமென கர்த்தராகிய இயேசு கூறினார் - மத்தேயு 28: 19,20.

மூழ்கி பப்டிஸம் பெறும்படியாக வேதாகமம் போதிப்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளும். தண்ணீருக்குக் கீழே போய், தண்ணீரிலிருந்து வெளியே வருதல் என்பது இதன் கருத்து. நாம் தண்ணீரினுள் நிற்கும்போது, இயேசு தொங்கிய சிலுவை போல தண்ணீர் எமது உடலை குறுக்கறுத்து நிற்கிறது. தண்ணீருக்குள் போவதானது, இயேசு அடக்கம்பண்ணப்பட்டதைக் காட்டுகிறது. தண்ணீரை விட்டு வெளியே வருவதானது, கல்லறையை விட்டு உயிருடன் சதாகாலமும் வாழ்வதற்கென இயேசு வெளியே வந்ததைக் காட்டுகின்றது.

கேள்விகளும் பதில்களும்

கேள்வி: இயேசுவிற்கு பப்டிஸம் கொடுத்தது யார்?

பதில்: யோவான் ஸ்நானகன் (மத்தேயு 3:1)

கேள்வி: இயேசு எங்கே பப்டிஸம் பெற்றார்?

பதில்: யோர்தான் நதியில் (மத்தேயு 3:13)

கேள்வி: இயேசு ஏன் பப்டிஸம் பெற்றார்?

பதில்: எல்லா நீதியையும் நிறைவேற்ற. (மத்தேயு 3:15)

கேள்வி: பப்டிஸம் என்றால் என்ன?

பதில்: இது ஒரு அடக்கம்பண்ணப்படுதலும், உயிர்த்தெழுதலுமாக இருக்கிறது. (கொலோசெயர் 2:12)

கேள்வி: பப்டிஸத்தின் கருத்து என்ன?

பதில்: இது மூன்று காரியத்தைக் காட்டுகின்றது. (ரோமர் 6:23, கலாத்தியர் 3:27)

1. இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலைக் காட்டுகிறது.

2. பாவத்திற்கான எமது மரணத்தையும், கிறிஸ்துவுக்குள்ளான புதிய வாழ்வை - உயிர்த்தெழுதலும் காட்டுகின்றது.

3. நாம் மரித்து அடக்கம் பண்ணப்படுகிற போதிலும், நாம் உயிர்த்தெழுவோம் என்கிற விசுவாசத்தைக் காண்பிக்கிறது.

கேள்வி: எம்மை பப்டிஸம் பெறும்படியாக இயேசு கட்டளையிட்டாரா?

பதில்: ஆம். இயேசுவை தமது இரட்சகராக ஏற்றுக்கொள்கின்ற யாவரும் பப்டிஸம் பெறும்படியாக மத்தேயு 28:18-20 இல் இயேசு தனது மகா உத்தரவில் கூறினார்.

வேதாகம மனன வசனம்

நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால்,

என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

- யோவான் 14:15

வேதாகமமும் ஜெபமும்

தமது இதயத்துடன் பேசவும், வாழ்க்கையை நடத்தவும் கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். வேதாகமத்திற்கூடாக கடவுள் நம்முடன் பேசுவார், ஜெபத்திற்கூடாக கடவுளுடன் நாம் பேசுகிறோம். வேதாகமம் கர்த்தருடைய வார்த்தை. இதைக் குறித்து சிறிது சிந்திப்போம்.

வேதாகமம்

வேதாகமமானது ஒரு அதிகம் வியப்படையச் செய்யும் புத்தகமாகும். ஒரே புத்தகத்தில் 66 புத்தகங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த ஒரே புத்தகத்தில் இரண்டு பிரிவுகள் உண்டு. முதலாவது, பழைய ஏற்பாடு. இதில் 39 புத்தகங்கள் உண்டு. இது ஆதியாகமம் எனும் புத்தகத்துடன் ஆரம்பிக்கின்றது. இரண்டாவது பிரிவு புதிய ஏற்பாடு. இது 27 புத்தகங்களைக் கொண்டது. மத்தேயு எனும் புத்தகத்துடன் ஆரம்பித்து வெளிப்படுத்தல் எனும் புத்தகத்துடன் முடிவடைகின்றது. வேதாகமத்தில் 1189 அதிகாரங்கள் உண்டு. பழைய ஏற்பாட்டில் 929 அதிகாரமும், புதிய ஏற்பாட்டில் 260 அதிகாரமும் உண்டு.

ஒருவர் நான்கு அதிகாரங்களை ஒரு நாளைக்கு வாசிப்பதனால் ஒரு வருடத்திற்கும் குறைவான நாட்களில் தனது முழு வேதாகமத்தையும் வாசித்து முடிக்க முடியும். ஒரு வருடத்திற்கு ஒரு தடவையாகிலும் உங்கள் வேதாகமம் முழுவதையும் வாசித்து முடிப்பதென்று முடிவெடுங்கள். வேதாகமத்தை வாசித்து ஜெபம் பண்ண அதிகாலை நேரமே மிகவும் சிறந்தது. அதிகாலையில் எழுந்து கடவுளுடன் நாளை ஆரம்பிப்பதை உமது வாழ்வின் பழக்கமாக மேற்கொள்ளும். எமது வாழ்வில் எதிர்நோக்குகின்ற எல்லாப் பிரச்சனைகளுக்கும் வேதாகமத்தில் விடையுண்டு.

வேதாகமத்தைப் பற்றிய உண்மைகள்

மனிதர்கள் எப்போதும் கேட்கின்ற மூன்று பெரிய கேள்விகளுக்கு வேதாகமம் விடை தருகிறது:

1. நான் எங்கேயிருந்து வந்தேன்?

2. நான் ஏன் இங்கே இருக்கிறேன்?

3. நான் எங்கே போகிறேன்?

வேதாகமத்தில் ஒரு விஷயம் உண்டு - அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

வேதாகமமானது: குறைவில்லாத (முற்றிலும் 2 தீமோத்தேயு 3:16,) பேச்சு வடிவாக (ஒவ்வொரு வார்த்தையும் 1 கொரிந்தியர் 2:13,) கர்த்தருடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தையாகும்.

முடிவாக

கடவுளின் வார்த்தையை மனனம் செய்யுங்கள். உங்கள் மனதிலே பதித்து வையுங்கள். “நான் உமக்கு விரோதமாக பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்" என்று வேதாகமம் சங்கீதம் 119:11 இல் கூறுகிறது. தேவனுடைய வார்த்தை எம்மைப் பாவம் செய்யாதபடிக்குக் காக்கிறது, ஆனால் பாவம் தேவனுடைய வார்த்தையை நாம் வாசிக்காதபடிக்கு எம்மை விலக்கி வைக்கின்றது என்று ஒருவர் கூறினார்.

உமது வேதாகமத்தை ஒரு நண்பனைப் போல வைத்திரும். உம்மோடே சுமந்து செல்லும். உமக்கு அருகிலேயே வைத்திரும். ஒவ்வொரு புத்தகமும் எங்கே காணப்படுகின்றது என்று கற்றுக்கொள்ளும். வேதவார்த்தைகளுக்கூடாக கடவுள் உமது இதயத்தில் பேசும் வார்த்தைகளை ஒரு பேனாவினால் அடையாளமிட்டுக் கொள்ளும். ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்குமான சிறந்த புத்தகம் வேதாகமமே.

ஜெபம்

ஜெபத்திற்கு உதாரணமாக கர்த்தராகிய இயேசு இருக்கின்றார். அவர் நேரத்தோடே எழுந்து ஜெபத்திலே நேரத்தை செலவிட்டார். ஜனத்திரளை விட்டுவிட்டு தனியே சென்று கடவுளோடு ஜெபத்தில் நேரத்தை செலவு செய்தார். ஒவ்வொருவரும் அதிகமாக ஜெபிக்கின்றதைப் பொறுத்து ஜெபத்தில் சக்திவாய்ந்தவராக வரமுடியும்.

மிகவும் சாதாரணமாகவும், மெதுவாகவும் ஒரு புதிய கிறிஸ்தவன் ஜெபவாழ்வை ஆரம்பிக்கலாம். ஆனால் ஜெபிக்காத கிறிஸ்தவனின் வாழ்வு நிச்சயமாக தோல்வியடையும். ஜெபிப்பதற்கென குறித்த ஒரு நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன் முழங்கால்களில் நின்று ஜெபியுங்கள். இரவிலே நீங்கள் நித்திரைக்குச் செல்ல முன்பும் படுக்கையில் கரையிலே முழங்கால்களில் நின்று ஜெபியுங்கள். தனிமையான இடத்தில் இருந்தாலும் மக்களோடு இருந்தாலும் நீர் சாப்பிடும் முன்பதாக ஜெபம் செய்யும். உமது தேவைகளைச் சந்திக்கும்படியாக ஜெபத்திலே தேவனிடம் கேளும். உமது அன்பானவர்கள் இரட்சிக்கப்படும்படியாகவும் வேண்டிக்கொள்ளும். ஜெபத்திற்கூடாக தேவனோடு நெருங்கி வாழும்.

வேதாகம மனன வசனம்

"நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்,

நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.”

- யோவான் 15:7.

"என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து,

நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.”

- எரேமியா 33:3

"நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால்,

அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால்,

அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக் கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.”

- 1 யோவான் 5:14,15

"நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்,

எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய

ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது,

எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும்

உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்."

- பிலிப்பியர் 4:6,7

“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்;

தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;

ஏனென்றால் கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்;

தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்."

- மத்தேயு 7:7,8

புதிய கிறிஸ்தவனும், அவனது சபையும்

கர்த்தராகிய இயேசுவை உமது உள்ளத்திலே ஏற்றுக்கொண்டபோது, நீர் இரட்சிக்கப்பட்டீர். அதன் மூலம் கடவுளின் குடும்பத்தின் பகுதியாயுள்ளீர். கர்த்தராகிய இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து பப்டிஸத்திற்கூடாக அவரைப் பின்பற்றுகின்றபோது, நீர் பப்டிஸம் பெற்றுக்கொண்ட உள்ளூர் சபையிலே அங்கத்தவனாகிறீர்.

"மகா உத்தரவு” என நாம் அழைப்பதை தொடர்ந்து செய்வதற்கென தாங்களாகவே மனமுவந்து ஒன்றாக இணைந்து கொண்ட பப்டிஸம் பெற்ற விசுவாசக் குழுவினரே உள்ளூர் சபையாகும்.

மகா உத்தரவு கூறுவதாவது:

"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு பப்'டிஸம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். ஆமென்” - மத்தேயு 28:19,20

முதலாவது - நாம் மக்களிடத்தில் போக வேண்டியவர்கள். சாதாரணமாக சபை ஆராதனைகளை அறிவித்துவிட்டு மக்கள் தம்மிடம் வரட்டும் என காத்திருக்க வேண்டுமென சில சபையினர் நினைக்கின்றனர். ஆனால் கர்த்தராகிய இயேசு “போங்கள்!” என்றார்.

இரண்டாவது - நாம் சந்திக்கின்றவர்கள் எப்படி இரட்சிக்கப்பட முடியும் என்பதை நாம் விளங்கப்படுத்த வேண்டியவர்கள். நாம் அவர்களுக்குத் தெளிவாகவும், இலகுவான முறையிலும் அவர்கள் எப்படி கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக அறிந்துகொள்ள முடியுமென சொல்லவேண்டும்.

மூன்றாவது - அவர்கள் இரட்சிக்கப்பட்ட பின்பு கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் நடவடிக்கையாக உள்ளூர் சபையிலே அவர்கள் பப்டிஸம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நான்காவது - கிறிஸ்து எமக்குக் கட்டளையிட்ட காரியங்களை புதிய கிறிஸ்தவர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும். சபையின் எல்லா ஆராதனைகளுக்கும் புதிய விசுவாசியானவன் விசுவாசமாக கலந்து கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்து. கடவுளின் மக்களோடு ஒழுங்காக ஆராதித்து, கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசமாக கேட்கின்றபோது அவர் தனது கிறிஸ்தவ வாழ்வில் வளர்ச்சியடைந்து அதனை விருத்தி செய்து கொள்ளுவார்.

உள்ளூர் சபையானது மிகவும் முக்கியமானது

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சபையை அமைத்து அதில் அன்புகூர்ந்தார் என வேதாகமம் கூறுகிறது.

“இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” - மத்தேயு 16:18.

“கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” - எபேசியர் 5:25.

சபைக்காக ஒவ்வொரு கிறிஸ்தவனும் என்ன செய்ய முடியும்.

மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்வதில் சபை என்ன செய்யலாமென நாம் அதிகம் சிந்திப்பதுண்டு. ஆகவே ஒவ்வொரு சபை அங்கத்தவனும் தனது சபைக்காக என்ன செய்ய முடியுமெனவும் சிந்திக்க வேண்டும்.

உமது சபைக்காக ஜெபியும்

ஒவ்வொரு தேவையையும் சந்திக்கும்படியாக கர்த்தரிடம் கேளும். தலைவர்களுக்காக ஜெபியும். கிறிஸ்துவைப் பிரியப்படுத்துவதாக எல்லாக் காரியங்களும் அமைய வேண்டுமென ஜெபியும்.

ஒரு உண்மையான அங்கத்தவனாயிரும்

சபையின் நிகழ்ச்சிகளுக்கும் தலைமைத்துவத்துக்கும் உண்மையாயிரும். மற்றவர்களும் உண்மையாயிருக்க ஊக்குவியும். முறையீடு செய்பவராக இருக்க வேண்டாம்.

ஒரு விசுவாசமான அங்கத்தவனாயிரும்

விசுவாசமாக சபைக்கு சமூகமளித்தலானது:

1. வேதாகமம் போதிப்பதற்கு கீழ்ப்படிதலாயிருக்கிறது.

2. கர்த்தரோடும் அவரின் பிள்ளைகளோடும் வெளியரங்கமாக அடையாளங் காட்டுகிறது.

3. கிறிஸ்தவ வாழ்வு வாழ்வதற்கான அறிவுறுத்தல்களைக் கொடுக்கிறது.

4. கர்த்தருடைய சித்தத்தைக் கண்டுகொள்ள உதவிசெய்கிறது.

5. மற்றவர்களுக்கு இரட்சிப்பின் செய்தியை அறிவி்க்க ஒரு பகுதியாக பயன்படுகிறது.

உள்ளூர் சபையானது வேதாகமத்தை சரிவர பிரசங்கிக்காத பட்சத்தில், எப்படி இரட்சிக்கப்படுவது என்பதை அதிகமான மக்கள் கேள்வி்ப்பட மாட்டார்கள்.

உமது சபைக்கு உதவி செய்யும்.

ஒவ்வொரு அங்கத்தவனும் தசமபாகம் கொடுக்கிறவனாக இருக்க வேண்டும் என்பது தேவனுடைய திட்டமாக இருக்கிறது. இதன் கருத்து என்னவென்றால் எமக்குக் கிடைக்கின்ற வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியைக் கர்த்தருக்கெனக் கொடுப்பதாகும். இதற்கு மேலாக நாம் காணிக்கையும் கொடுக்க வேண்டும்.

“நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல் நாள்தோறும், தன்தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக் கடவன்” என்று 1 கொரிந்தியர் 16:2 கூறுகிறது.

சந்தோஷமான இருதயத்துடனே ஒவ்வொரு அங்கத்தவனும் தன்னால் முடிந்தவற்றை தனது சபைக்குச் செய்ய வேண்டும். அதன் வளர்ச்சிக்காக செயற்பட வேண்டும்.

தனிநபர் ஆத்தும ஆதாயம்

இழந்துபோய் இருக்கின்ற ஒவ்வொருவரும் எப்படி இரட்சிக்கப்பட முடியும் என்பதைக் கூறுவது ஒவ்வொரு கிறிஸ்தவனது விருப்பமும் கடமையுமாக இருக்க வேண்டும். இப்போது நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எமது சொந்த இரட்சகராக அறிந்துள்ளோம். ஆகவே மற்றவர்களுக்கு இது குறித்துக் கூறமுடியும்.

பரலோகம் செல்ல வேண்டுமேயானால் ஒவ்வொருவனும் கர்த்தராகிய இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இரட்சிக்கப்படாதவர்களின் நிலை

அவர்கள் இழந்து போனவர்கள். - லூக்கா 19:10 இதுவரை இரட்சிக்கப்படாதவர்கள் இழந்து போனவர்களாவார்கள்.

அவர்களின் வாழ்க்கையின் திசையானது கர்த்தருக்குத் தூரமானது. - ஏசாயா 53:6.

அவர்கள் கெட்டுப் போகிறவர்கள். - யோவான் 3:16

அவர்கள் ஏற்கனவே ஆக்கினைக்குள்ளானவர்கள் - யோவான் 3:18

அவர்கள் தேவனின் கோபத்திற்குள்ளானவர்கள் - யோவான் 3:36

அவர்கள் குருடானவர்கள் - 2 கொரிந்தியர் 4:3,4

அவர்கள் சமாதானம் அற்றவர்கள் - எபேசியர் 2:17.

அவர்கள் பாவத்தில் செத்துப்போனவர்கள் - எபேசியர் 2:1.

அவர்கள் வாழ்க்கையின் நன்மையை இழந்தவர்கள் - யோவான் 10:10.

அவர்கள் சாத்தானுக்கும் அவன் தூதர்களுக்கும் என நியமிக்கப்பட்ட மிகவும் ஆபத்தான இடமாகிய நரகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர்கள் - மத்தேயு 25:41

இழந்துபோனவர்களுக்கு எப்படி இரட்சிக்கப்பட முடியும்

என்று கூறவேண்டியது கட்டளை.

யாரோ ஒருவர் கிறிஸ்தவர்களாகிய நமக்கு எப்படி இரட்சிக்கப்பட முடியும் என்பதைக் கூறினார். ஆகவே நாம் மற்றவர்கள் இரட்சிக்கப்படும்படியாக அவர்களுக்குக் கூறவேண்டும். மற்றவர்கள் எப்படி இரட்சிக்கப்பட முடியும் என்பதைக் கூறும்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கட்டளையிட்டுள்ளார் (மத்தேயு 28:19,20). இழந்துபோனவர்களுக்குப் பின்னால் நாம் கிறிஸ்துவுக்காகப் போகும்போது அவர்களைக் குறித்த எமது பாரம் அதிகரிக்கும். எம்முடைய அன்பானவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதோடு இதனை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் உடனடியாக தனது குடும்ப அங்கத்தவருக்கு கிறிஸ்துவைப்பற்றிக் கூற ஆரம்பிக்க வேண்டும்.

இழந்துபோனவர்களைக் கிறஸ்து இரட்சிப்பார்

கிறிஸ்துவினால் இரட்சிக்க முடியாத அளவிற்கு யாரும் இழந்து போகவில்லை. அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியும். இரட்சிக்கப்பட வேண்டும் என யாரெல்லாம் அவரை நோக்கிக் கூப்பிடுவார்களோ அவர்களையெல்லாம் அவர் இரட்சிப்பார் (ரோமர் 10:13). அவர்கள் எப்படி இரட்சிக்கப்பட முடியும் என பேசுகின்ற எமக்கும் அவர் உதவிசெய்வார்.

உமது சாட்சியைக் கூறுவதோடு ஆரம்பிக்கலாம்

ஒரு தனிப்பட்ட அனுபவத்தைக் கூறுவதாக சாட்சி இருக்கலாம். கிறிஸ்து நமக்கு என்ன செய்தார் என்பதை சொல்லுவதோடு எமது சாட்சியை மற்றவரோடு ஆரம்பிக்கலாம். கிறிஸ்தவனின் சாட்சி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய மூன்று காரியங்கள்:

1. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள முன்பான எனது வாழ்வு.

2. கிறிஸ்துவை எப்படி நான் அறிந்துகொள்ள முடிந்தது.

3. நான் இரட்சிக்கப்பட்டதில் இருந்து கிறிஸ்து எனக்கு எப்படியாக இருக்கிறார்.

முடிவாக,

நாம் ஆத்தும ஆதாயம் செய்ய ஆரம்பிக்கும்போது பயமானது எமக்கு இருக்கக் கூடிய உணர்வு என்பதை விளங்கிக் கொள்ளும். இது எம்மை மேற்கொள்ளலாம். நாம் அதிகமாகப் பயப்படுகின்றதான சந்தர்ப்பத்தில், நாம் அதிகமாக கர்த்தரில் நம்பிக்கை வைக்க வேண்டுமென்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். சாட்சி பகருவதிலும், ஆத்தும ஆதாயம் செய்வதிலும் கடவுளின் உதவி எமக்குக் கட்டாயம் தேவை. மற்றவர்கள் எப்படி இரட்சிக்கப்பட முடியும் என்பதை நீங்கள் கூறுகின்றதான போது, அவர்களின் நித்தியத்திற்கேதுவான காரியத்தை மாற்ற உதவி செய்வதற்குக் கர்த்தர் உம்மைப் பயன்படுத்துகிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளும். கர்த்தர் உம்மைப் பயன்படுத்த விரும்புகிறார் - அவருக்கு அனுமதி கொடும்!

வேதாகம மனன வசனம்

“பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய்,

சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்றார்.

(மாற்கு 16:15)

ஆத்தும ஆதாய ஜெபப் பட்டியல்

நான் ஜெபிக்க சாட்சிபகர வேண்டிய நண்பர்களும், அன்பானவர்களும் இவர்கள்:

1. …………………………………………………………………………………………

2. …………………………………………………………………………………………

3. ………………………………………………………………………………………….

4. ………………………………………………………………………………………….

5. …………………………………………………………………………………………..

6. ……………………………………………………………………………………………