பரந்துபட்ட பாரினிலே ஏழு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்தியில் புலம்பெயர்ந்தும், அகதிகளாக்கப்பட்டும், நாடுவிட்டு நாடு சென்றும் கண்டம் விட்டு கண்டம் கடந்த நிலையில், இதயங்கள் நொருக்கப்பட்டு, விரக்தியிலும், துயரத்திலும் இருக்கும் அத்துடன் வாழ்க்கைக்காக பாதை தெரியாமல் அடுத்த அடியை எங்கே வைப்பது எனத் திகைத்து நிற்கும் அனைத்து தமிழ் நேயங்களுக்கும் பிரயோஜனமாகவும், ஆறுதலாகவும் வழிகாட்டலாகவும் அமைய வேண்டும் என்பதிற்காகவே இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

   ஒரு தனிமனிதனாகிய எனக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சபைக்கோ மாத்திரம் பயனுள்ளதாக இராமல் உலகளாவிய ரீதியில் அனைத்து தனிமனிதர்களுக்கும், தேவ பணியை தேவன் விரும்பும் விதத்தில் செய்ய வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கும், தவறான கொள்கையில் உள்ளவர்கள் தேவனின் தெளிவான உபதேசத்தில் கட்டப்பட வேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பாகும். 

 

    ஒரு வாலிபனாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட போது, உடலில் ஓடுகின்ற ஒவ்வொரு துளி இரத்தமும் தேவனின் நாமத்தை மகிமைப்படுத்துகின்றதாகவே இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். ஆயினும் வாழ்க்கையின் மகத்தான கேள்விகளான "நாம் எங்கிருந்து வந்தோம்?" "எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?" "கடவுள் ஒருவர் இருக்கிறாரா?" "அப்படி இருப்பாரானால் அவர் என்ன வடிவில் இருக்கிறார்?" "வேதாகமம் உண்மையில் அவரின் வார்த்தைதானா?" "நாம் மரித்த பின்னர் எமக்கு என்ன நடக்கப்போகிறது?" போன்ற கேள்விகளுக்கு பதில் காணமுடியாமலும், வாலிப காலத்தில் தீர்மானம் எடுக்க முடியாமலும் தவித்த சந்தர்ப்பங்கள் இருந்தன. 

 

    முதல் தடவையாக 1987ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் பணியானது எனது கேள்விகளுக்கும், எனது குடும்பத்தினர், அயலவர்கள், நண்பர்கள், உறவினர்களின் கேள்விகளுக்கும் பதில் வழங்கியதுடன் அது இன்னமும் விருத்தியடைந்து சென்று கொண்டே இருக்கிறது. அந்தக் காலப்பகுதியில் இருந்தே எனக்குப் பயனளித்த அனைத்து புத்தகங்களையும் இலக்கியங்களையும் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற கர்ப்ப வேதனையுடனேயே ஒவ்வொரு புத்தகங்களையும் வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறேன். எனது கேள்விகளுக்கு பதில் பெற்றுக் கொள்ளவும் வாழ்க்கையை மாற்றவும் தேவன் பயன்படுத்திய புத்தகங்கள் உங்களுக்களுக்கும் உதவி செய்வதிற்காக இந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 

 

      என்னை ஆண்டவருக்குள் வழிநடத்திய எனது தந்தையாருக்கு நன்றிகூற எனக்கு இந்த பிரதான பக்கத்திலேயே இடம் தாருங்கள். நான் எவ்வாறு இருக்க வேண்டுமென தேவன் எதிர்பார்த்த விதத்திற்கு என்னைக் கொண்டுவருவதிற்கு தேவன் பயன்படுத்தும் எனது குடும்பத்தினர், உறவினர் மற்றும் சபையினருக்கும் நன்றியோடு இருக்கிறேன். 

 

எப்பக்கத்திலும் என்னை நெருக்கி, உடைத்து, வனைந்து கட்டிய தேவனுக்கே எல்லாப் புகழும் கனமும் மகிமையும் உண்டாவதாக! 

 

இங்ஙனம்,

கிறிஸ்துவின் பணியில்,

அடிமை ஒருவன்